சனி, 18 ஜனவரி, 2020

கங்கை பூமியில் இறங்கியது (பாகம் 2 - கங்காபுராணம்)

கங்கை பூமியில் இறங்கியது   (பாகம் 2)
அறிவியல் ஆய்வா?
ஆன்மிகக் கதையா?
கட்டுரை ஆசிரியர் – காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

கங்கை தோன்றியது பற்றிய கட்டுரை. பாகம் 1 :
https://m.facebook.com/story.php?story_fbid=1401334783272649&id=100001884215718
இந்த முதலாம் பகுதியில் விஞ்ஞானிகளின் கருத்துக்களைக் கண்டோம்.  இதன் தொடர்ச்சியாக இந்திய மெய்ஞானிகள் கூறியுள்ள கங்காபுராணக் கதையை இனிக் காண்போம்.




கங்கை தோன்றியது பற்றிய கட்டுரை. பாகம் 2 :

கங்கா புராணம் கூறும் ஆன்மிகக் கதை -
சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன், அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள். தன் தேசம் சிறியதாய் இருப்பதல் தன் பிள்ளைகளுக்காகத் தன் தேசத்தை விரிவு படுத்த எண்ணினான். அதனால் அவன் அசுவமேத யாகம் செய்தான். அசுவமேத யாகம் நடைபெற்றால் தனது பதவி பறிபோய்விடும் என இந்திரன் பயந்து, அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாரிஷி ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் கடுந்தவத்தில் இருந்த கபில ரிஷியைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்கள் அனைவரையும் மற்றும் அவர்களுடன் வந்த சேனைகளையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டுக் கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகா ரிசிகள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை. ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான்.
அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். ஆனால் கடும் வேகத்துடன் கங்கை பூமியில் இறங்கும் போது, அதன் வேகத்தைப் பூமியால் தாங்க முடியாது. பூமி அழிந்துவிடாமல், பூமியில் கங்கையை இறக்கிடச் சிவபெருமானை வேண்டிக் கொள்ளுமாறும் ரிஷிகள் மன்னனுக்கு அறிவுரை கூறினர்.

ஸ்ரீ ராமசந்த்ராய நம :


பாலகாண்டம் – 43ஆவது ஸர்க்கம்
கங்கை பூமிக்கு வந்தது

தேவதேவே கதே தஸ்மின் ஸோங்குஷ்டாக்ர நிபீடிதாம்
க்ருத்வா வஸுமதீம் ராம ஸம்வத்ஸர முபாஸத :
பிறகு பகீரதன் கால் கட்டை விரலைப் பூமியில் ஊன்றி, கைகளை உயரத் தூக்கிக் கொண்டு யாதொரு பற்றுமின்றி, வாயுவே ஆகாரமாய், கட்டையைப் போல் அசையாமல் இரவும் பகலும் பரமசிவனைக் குறித்துத் தவம் செய்தார். பிறகு மஹாதேவன் பார்வதியுடன் அவருக்குப் பிரஸன்னமாய், “ராஜச்ரேஷ்ட, உன் தபஸால் திருப்தியடைந்தேன். உன்னிஷ்டப்படி பர்வதராஜ புத்திரியான கங்கையைத் தலையில் தரிக்கிறேன்“ என்றார். அப்பொழுது ஸகல லோகங்களிலும் கொண்டாடப்பட்ட கங்கை, பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.

“என் வேகத்தைத் தாங்கக் கூடியவர்களுமுண்டோ, இந்த சங்கரனையும் அடித்துக் கொண்டு பாதாளத்திற்குப் போவேன்“ என்றாள். அவளுடைய கர்வத்தை அறிந்து ருத்ரன் கோபங்கொண்டு அவளை மறைக்க நினைத்தார். அவருடைய புண்ணியமான சிரஸில் விழுந்தவுடன் ஜடாமண்டலமென்ற பெரும் வலையில் சிக்கிக்கொண்டு வெளியில் போக வழி தெரியாமல் பல வருஷங்கள் வரையில் அலைந்து திரிந்தாள். “பரமசிவனுடைய தலையில் கங்கை விழுவதைப் பார்த்தேன். உடனே பூமிக்கு வரவேண்டியதல்லவா? இவ்வளவு காலமாகியும் ஏன் இன்னும் வெளிப்படவில்லை? ஸர்வேச்வரனான சங்கரனைச் சரணமடைய வேண்டும்“ என்று மறுபடியும் அவரைக் குறித்துத் தவம் செய்தார். அதனால் பகவான் ஸந்தோஷித்து பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார். அவள் அப்போது ஏழு ப்ரவாகங்களாய்ப் பூமியில் விழுந்தாள். அவைகளில் ஹ்லாதினி, பாவனி, நளினி என்றவை கிழக்கிலும் ஸுசக்ஷுஸ், ஸீதா, ஸிந்து என்றவை மேற்கிலும் ஓடின. ஏழாவதான ப்ரவாஹம் பகீரதரைப் பின்தொடர்ந்தது. அந்த ராஜ ச்ரேஷ்டர் திவ்யமான ரதத்தில் ஏறிக் கொண்டு முன்னே போனார். கங்கைக்கு த்ரிபதகா என்ற பெயர் வந்த விதத்தைச் சொன்னேன். அவளுடைய அற்புதமான செய்கைகளைச் சொல்லுகிறேன்.
ஆகாசத்திலிருந்து சிவனுடைய சிரஸிலும் அங்கிருந்து பூமியிலும் விழுந்ததால் அந்த ஜலம் பயங்கரமான சப்தத்துடன் வந்தது. மீன் ஆமை சிம்சுமாரம் முதலை முதலிய ஜல கூந்துக்கள் அதில் துள்ளி விழுந்து கொண்டிருந்தபடியால் பூமி நன்றாக விளங்கிற்று. ஆகாசத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் ஆச்சரியத்தைப் பார்க்கத் தேவ, ரிஷி, கந்தவர்வ, யக்ஷ, ஸித்த கணங்கள் நகரங்களைப் போன்ற விமானங்களிலும் குதிரைகளிலும் யானைகளிலும் கூட்டங் கூட்டமாய் அங்கே வந்தார்கள். அவர்களின் தேஹ காந்தியாலும் ஆபரணங்களின் பிரகாசத்தாலும் எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசம் மேகங்களில்லாமல் ஜ்வலித்தது. கங்கையில் மீன், சிம்சுமாரம் முதலிய ஜல ஜந்துக்கள் அங்குமிங்கும் துள்ளுவதால் மின்னல்கள் பாய்வது போலிருந்தது. நான்கு புறங்களிலும் பலவிதமாய் வாரியிறைக்கப்பட்ட நுரைகளாலும் நீர்த் திவலைகளாலும் ஹம்ஸக் கூட்டங்களுடன் கூடிய வெண்மையான சரத்கால மேகங்களால் ஆகாசம் நிறைந்தது போலிருந்தது. அந்த நதியின் ஜலம் சில இடங்களில் அதி வேகமாயும், சில இடங்களில் கோணலாயும், சில இடங்களில் நேராகவும்,
பள்ளங்களிலும் கீழாகவும், கல் முதலியவைகளால் தடுக்கப்பட்டபொழுது மேல் முகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும், சில இடங்களில் அலைகளின் வேகத்தால் ஜலத்துடன் ஜலம் மோதிக்கொண்டு அடிக்கடி எதிர்த்துக் கொண்டும் பூமியில் விழுந்தது. பரமசிவனுடைய தலையில் விழுந்து அங்கிருந்து பூமியில் வந்ததால் நீர்மலாய்ப் பாபங்களைப் போக்கும் புண்ணிய தீர்த்தமாயிற்று.

தேவர்களும், ரிஷிகளும், கந்தவர்வர்களும், பூமியிலுள்ளவர்களும் “பரமசிவனே இதைத் தலையால் தாங்கினதால் இது மஹா பரிசுத்தமான தீர்த்தம். அவருடைய தேஹத்தில் பட்டுப் பூமியில் விழுந்ததால் இதற்கு விசேஷ சுத்தியுண்டாயிற்று“ என்று அதில் ஸ்தானம் செய்தார்கள். சாபத்தால் தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களும் அதில் ஸ்நானஞ் செய்து பாபங்கள் நீங்கிப் புண்ணிய லேகங்களுக்குப் போனார்கள். பூமியிலுள்ளவர்கள் அதில் ஸ்தானம் செய்து பாபங்கள் விலகிப் பரமானந்தம் அடைந்தார்கள்.

ராஜரிஷியான பகீரதர் திவ்ய ரதத்தில் ஏறிக் கொண்டு முன்னே சென்றார். கங்கை அவரைப் பின்தொடர்ந்தாள். தேவ, ரிஷி, தைத்ய, தானவ, ராக்ஷஸ, கந்தவர்வ, யக்ஷ, கின்னர, உரக, அப்ஸரஸ் கணங்களும் ஜல ஜந்துக்களும் பகீரதரைப் பின்தொடரும் கங்கையைப் பின் தொடர்ந்தார்கள். அவர் போகும் வழியெல்லாம் கங்கையும் போய் ஸமஸ்த பாபங்களையும் நாசஞ் செய்தது. வழியில் ‘ஜன்ஹுரிஷி‘ யாகம் செய்து கொண்டிருந்த இடத்தில் பரவி யாகபதார்த்தங்களை அடித்துக் கொண்டு போயிற்று. அவளுடைய கர்வத்தால் அந்த ரிஷி கோபங்கொண்டு அந்த ஜலம் முழுவதையும் குடித்துவிட்டார். அந்த ஆச்சர்யத்தால் தேவ, ரிஷி கணங்கள் பிரமித்து அந்த மஹாத்மாவைப் பலவிதமாய்ப் பிரார்த்தித்து, “ஸ்வாமி, கங்கையின் அபராதத்தைப் பொறுக்க வேண்டும். தங்களுடைய தேஹத்திலிருநது வெளிப்படுவதால் அவள் தங்களுக்குப் பெண்ணாகட்டும்“ என்றார்கள். அதனால் அவர் ஸந்தோஷித்து கங்கா ப்ரவாஹத்தைத் தன் காதின் வழியாய் வெளியில் விட்டார்.

அன்று முதல் அவளுக்கு ஜான்ஹவி (ஜன்ஹுவின் புத்ரி) என்று பெயராயிற்று. பிறகு அவள் பகீரதரைப் பின் தொடர்ந்து, ஸமுத்திரத்திற்கு வந்து, அங்கிருந்து பாதாளத்திற்குப் போனாள். தன் முன்னோர்கள் எரிந்து கிடக்கும் இடத்திற்கு அவர் அவளை அழைத்துக் கொண்டுபோய் அவர்கள் சாம்பலாயிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார். அந்தப் புண்ணிய ஜலம் சாம்பல் மேடை நனைத்தவுடன் ஸகர புத்திரர்கள் பாபம் ஒழிந்து உத்தமலோகங்களை அடைந்தார்கள்.

அத தத்பஸ்மனாம் ராசிம் கங்கா ஸலில முத்தமம்
ப்லாவயத் தூதபாப்மான: ஸ்வர்க்கம் ப்ராப்தா ரகூத்தம (43)

கட்டுரையின் முதலாம் பகுதியில் விஞ்ஞானிகளின் கருத்துக்களையும், இரண்டாம் பகுதியில் பாரதபுராணங்கள் கூறும் மெஞ்ஞானிகள் கருத்துகளையும் அறிந்து கொண்டோம்.  மேற்கண்ட விஞ்ஞான மெஞ்ஞானக் கருத்துக்களுடன் அஞ்ஞானியான நான் உணர்ந்து கொண்டதை கட்டுரையின் மூன்றாம் பகுதியாக இணைத்து வெளியிடுகிறேன்.


அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்


It is widely believed that millions of years ago, a comet or asteroid impacted the Earth.
The blast sent molten shrapnel back into outer space, which the came back with devastating results for animals and plants in the vicinity.
Photo Credits : NHK, Japan

(மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வால்மீன் அல்லது சிறுகோள் பூமியை பாதித்தது என்று பரவலாக நம்பப்படுகிறது.
அது மோதியதால் சிதறி உண்டான சிறு துகள்களை மீண்டும் விண்வெளிக்குச் சென்று பூமியில் விழுந்துள்ளன.  இதனால் பூமியில் வாழ்ந்திருந்த விலங்குகளும் தாவரங்களும் அழிந்துள்ளன.)