புதன், 25 பிப்ரவரி, 2026

கங்கை மண்மிசைக் கொணர்ந்தோன்

           விசுவாமித்திர முனிவர் அகலிகை வரலாற்றை இராமனிடம் கூறுதல்


  466.

 

மாஇரு விசும்பின் கங்கை மண்மிசைக் கொணர்ந்தோன் மைந்த!

மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்.

தீவினை நயந்து செய்த தேவர்கோன்தனக்குச் செங் கண்

ஆயிரம் அளித்தோன். பன்னி; அகலிகை ஆகும்’ என்றான்.

 கம்பராமாயணத்தின் அகலிகைப் படலத்தில் (பாடல்: 466) 

 

மா  இரு விசும்பின்  -  மிகப் பெரிய ஆகாயத்திலிருந்து; கங்கை

மண்மிசை -  கங்கா  நதியை இப்பூமிக்கு; கொணர்ந்தோன் மைந்த -

கொண்டு   வந்த   பகீரதன்  என்னும்  பேரரசன்  (குலத்தில்  பிறந்த)

மைந்தனே!;  மேயின  உவகையோடு  -  பொருந்தின மகிழ்ச்சியோடு;

மின்னென  - மின்னல்கொடிபோல; ஒதுங்கி நின்றாள் - ஒருபக்கத்தே

(நாணத்தால்)    ஒதுங்கி  நின்ற  இவள்;  தீவினை  -  (மற்றொருவன்

மனைவியைச்   சேர்தலாகிய)  கொடுந்தொழிலை;  நயந்து  செய்த  -

விரும்பிச்  செய்த;  தேவர்கோன்  தனக்கு - தேவர்கள் தலைவனான

இந்திரனுக்கு;  செங்கண்  ஆயிரம்  -  சிவந்த  ஆயிரம்  கண்களை;

அளித்தோன்   பன்னி   -   கொடுத்த   கௌதம   முனிவனுடைய

பத்தினியான; அகலிகை ஆகும் - அகலிகை ஆவாள் என்றான். 

 

அகலிகை:   தன்   சிலை  வடிவம்  நீங்கி  பெண்வடிவு   பெற்று

மகிழ்ச்சியோடு  நாணத்தால் ஒதுங்கி நிற்பவளே. கௌதம  முனிவனின்

மனைவியான    அகலிகையாவாள்   இந்திரன்   ஆயிரம்    கண்கள்

பெற்றமை:    இந்திரன்    மாற்றான்   மனைவியைச்    சேர்தலாகிய

கொடுஞ்செயலை  விரும்பிச்  செய்ய  அதன்  பொருட்டுக்   கௌதம

முனிவர்   அவனுக்குச்  சாபம்  தந்தார்.   பின்னர்  அம்  முனிவரை

வேண்டக் குறிகள் ஆயிரம் கண்களாகுமாறு அருள் பெற்றான்.      15

புதன், 11 பிப்ரவரி, 2026

கங்கன் என்ற நெருப்புக் கோள்

 நிலா உருவாவதில் முக்கிய பங்கு வகித்த தியா கோளை பூமி விழுங்கியதா? 
ஆய்வாளர் பகிரும் புதிய தகவல் - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/articles/cn48zmnnj9po 
பூமி - தியா மோதல், நிலவின் தோற்றம்

பட மூலாதாரம்,Getty Images/Mark Garlick

படக்குறிப்பு,தியா செய்த அந்த "பிரபஞ்ச தியாகம்" இல்லையென்றால், நமக்கென நிரந்தரமான நிலவு இருந்திருக்காது.
    • எழுதியவர்,பெர்னாண்டோ டுவார்டே
    • பதவி,பிபிசி உலக சேவை
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அடுத்த முறை நீங்கள் ஒரு முழு நிலவை ரசிக்கும்போது, தியாவைப் பற்றி ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியுடன் மோதியிருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதும் ஒரு கற்பனையான கோளுக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் தான் தியா. இந்த மோதலின் போது வெளியேறிய ஒரு பெரிய சிதைவு தான் பின்னாளில் நமது நிலவாக மாறியது என அவர்கள் கருதுகிறார்கள்.

இந்தக் கோட்பாட்டின் படி, தியா செய்த அந்த "பிரபஞ்ச தியாகம்" இல்லையென்றால், நமக்கென நிரந்தரமான நிலவு இருந்திருக்காது.

இவ்வளவு ஏன், அநேகமாக நீங்கள் இப்போது இந்தச் செய்தியைக் கூட படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.

பிரபஞ்சத்தில் நிகழ்ந்த மோதல்

ஆரம்ப கால பூமிக்கும் செவ்வாய் கிரகத்தின் அளவிலான ஒரு பொருளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மோதல், இறுதியில் நிலவை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை வெளியிட்டதாக விஞ்ஞானிகள் தற்போது கருதுகின்றனர்.

பல காரணங்களில் ஒன்றாக, நிலா பூமியுடன் ஈர்ப்பு விசை சார்ந்த ஒரு இழுபறி விளையாட்டை நடத்துகிறது. இதன் விளைவாக, பல பில்லியன் ஆண்டுகளாக பூமி தனது அச்சில் சுழலும் போது நிலைத்தன்மை பெற்றது. இதுவே நிலையான காலநிலையை உருவாக்க உதவியது.

"காலநிலை நிலைத்தன்மை இல்லையென்றால், நாம் மிகவும் தீவிரமான காலநிலை மற்றும் வானிலை சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இது உயிரினங்களின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது," என்று ஜெர்மனியைச் சேர்ந்த மாக்ஸ் பிளாங்க் சூரிய குடும்ப ஆய்வு நிறுவனத்தின் (Max Planck Institute for Solar System Research) கோள் ஆய்வாளர் பேராசிரியர் தோர்ஸ்டன் க்ளெய்ன் விளக்குகிறார்.

கடந்த நவம்பரில், பூமியின் முக்கியமான ஆனால் மர்மமான மோதல் பற்றிய புதிரை தீர்க்க முயன்ற சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஒரு பகுதியாக க்ளெய்ன் இருந்தார்.

'சயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், அந்த குழு பூமி மற்றும் நிலவு மாதிரிகளின் வேதியியல் கட்டமைப்பை ஆய்வு செய்தது. சூரிய குடும்பம் உருவாகியிருந்த கால கட்டத்தில், தியாவும் நமது கிரகமும் நாம் 'சிக்கலான அண்டை வீட்டார்' என்று அழைக்கக் கூடிய வகையில் இருந்தன என்பன போன்ற கோட்பாடுகளை இது வலுப்படுத்தியது.

பூமி - தியா மோதல், நிலவின் தோற்றம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,1960-கள் மற்றும் 1970-களின் முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அப்பல்லோ விண்கலப் பயணங்கள், நிலவு எப்படி உருவாகியிருக்கலாம் என்பது உள்ளிட்ட நிலவைப் பற்றிய நமது புரிதலுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தன.

ஒரு நிலவு, பல கோட்பாடுகள்

ஆனால் நாம் எப்போதும் தியாவை நினைவில் வைத்திருந்ததில்லை. 1969-ஆம் ஆண்டில் மனிதர்கள் முதன்முதலில் நிலவின் மேற்பரப்பில் கால் வைப்பதற்கு முன்பு, நிலவின் தோற்றம் குறித்து மற்ற மூன்று முக்கிய கருதுகோள்கள் இருந்தன.

பிளவு கோட்பாட்டின் படி, ஆரம்பகாலத்தில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்த பூமி, தனது ஒரு பகுதியை விண்வெளியில் தூக்கி எறிந்தபோது நிலவு உருவானது.

அடுத்ததாக, நிலவு சூரிய குடும்பத்தின் வேறு எங்கோ உருவாகி, அது கடந்து செல்லும்போது பூமியின் ஈர்ப்பு விசையினால் "இழுக்கப்பட்டு" பிடிக்கப்பட்டது என்று கைப்பற்றுதல் கோட்பாடு முன்மொழிந்தது.

இறுதியாக, இணை-உருவாக்கக் கோட்பாடு, அதாவது பூமியும் நிலவும் அருகருகே உருவாகி நிலைபெற்றன என்று கூறியது.

இந்தக் கோட்பாடுகளில் எது உண்மையாக இருக்கக்கூடும் என்று விளக்குவதற்கு பதிலாக, நாசாவின் அப்பல்லோ விண்கலப் பயணங்கள் முற்றிலும் புதிய ஒரு கோட்பாட்டை சுட்டிக்காட்டின.

வேதியியல் ஒற்றுமைகள்

நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பிற விண்வெளி வீரர்களின் செயல்கள் பெரும்பாலும் இதுகுறித்த விளக்கங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும், அப்பல்லோ பயணங்களின் ஒரு முக்கிய சாதனை, அந்தப் பயணத்தின் போது கொண்டுவரப்பட்ட 'நினைவுப் பொருட்கள்' என்று சொல்லப்படும் மாதிரிகளில் உள்ளது.

"அப்பல்லோ விண்வெளி வீரர்கள் நிலவின் பாறை மாதிரிகளைக் கொண்டு வந்தனர். விஞ்ஞானிகள் அவற்றை ஆய்வு செய்தபோது, நிலவின் பாறைகள் பூமியுடன் குறிப்பிடத்தக்க வேதியியல் ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்," என்று லண்டன் யுனிவர்சிட்டி காலேஜின் வானியலாளரும், 'ஒண்டர்ஸ் ஆஃப் தி மூன்' என்ற சிறுவர் அறிவியல் புத்தகத்தின் ஆசிரியருமான பேராசிரியர் ராமன் பிரின்ஜா கூறுகிறார்.

பூமியிலிருந்து நிலவு தோன்றியிருக்கலாம் என்பதை இது உணர்த்தியது.

பூமி - தியா மோதல், நிலவின் தோற்றம்

பட மூலாதாரம்,NASA/Getty Images

படக்குறிப்பு,அப்பல்லோ பயணங்கள் மூலம் மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்ட நிலவின் மாதிரிகள் இன்றுவரை ஆய்வு செய்யப்படுகின்றன.

நிலவின் பாறைகள் கடுமையான வெப்பத்தில் உருவானதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும், இது ஒரு மிகப்பெரிய மோதலில் அவை உருவானதை உணர்த்துவதாகவும் பிரின்ஜா கூறுகிறார்.

வெப்பமடையும் போது எளிதில் ஆவியாகக்கூடிய பெரும்பாலான தனிமங்களை அவை இழந்திருப்பதாகத் தெரிகிறது. இது நிலவு உருவானபோது உருகிய நிலையில் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது.

நாசாவின் நிலவு சார் நிலவியலாளரும் ஆய்வாளருமான முனைவர் சாரா வலென்சியா கூறுகையில், இந்த மாதிரிகள் வழங்கிய தடயங்கள் ஒரு சிறு பகுதி மட்டும் தான் என்கிறார். சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள், குறிப்பாகக் கணினி உருவகப்படுத்துதல்கள், ராட்சத மோதல் எனும் கருதுகோளுக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளன. பூமியின் சாய்ந்த அச்சு தியாவுடனான மோதலின் விளைவுதான் என்ற கோட்பாடுகளும் கூட உள்ளன.

"பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான வேதியியல் மற்றும் உறவை விளக்குவதற்கு ராட்சத மோதல் கோட்பாடு இப்போதும் சிறந்த மாதிரியாகத் திகழ்கிறது," என்று வலென்சியா கூறுகிறார்.

தியாவை பூமி "விழுங்கியதா"?

ஆனால் தியாவுக்கு என்ன ஆயிற்று?

இந்தக் கேள்வி, தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாகும்.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கி, டைனோசர்களை அழித்து, மெக்சிகோவின் யுகடன் (Yucatan) தீபகற்பத்தில் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்திய அந்தப் விண்கல்லைப் போலல்லாமல், தியா ஒரு தெளிவான அடையாளத்தை விட்டுச் சென்றதாகத் தெரியவில்லை.

ஏனென்றால், தியா பூமியின் நிறையில் சுமார் 10% மட்டுமே இருந்தது என்றும், அந்த வேறுபாடு காரணமாக அது மோதலின் போது சிதறி, பெரும்பாலும் பூமியால் ஈர்க்கப்பட்டிருக்கும் என்றும் க்ளெய்ன் கூறுகிறார். அதன் சில பகுதிகள் நிலவை உருவாக்கிய கலவையின் ஒரு பகுதியாகவும் மாறியிருக்கலாம்.

மேலும், "இதுபோன்ற மோதலின் இயல்பான விளைவு இதுவாகத்தான் இருக்கும். ஆனால் நிலவில் தியாவின் கலவை தொடர்பான ஒரு அடையாளத்தை காண முடியும் என்று எதிர்பார்க்கிறோம், அதை நாங்கள் இதுவரை கண்டறியவில்லை," என்று க்ளெய்ன் விவரித்தார்.

பூமி - தியா மோதல், நிலவின் தோற்றம்

பட மூலாதாரம்,NASA/JPL-Caltech/Esa

படக்குறிப்பு,வெள்ளி (இடது) மற்றும் பூமி (வலது) ஒரே மாதிரியான பண்புகளைப் பகிர்ந்துகொள்வது போல, தியாவும் பூமியும் ஒரே மாதிரியான அடிப்படை அமைப்பைக் கொண்டிருந்திருக்கலாம் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அதேபோல் "பூமியும் தியாவும் சூரிய குடும்பத்தின் ஒரே பகுதியில் உருவானதால் அவை ஒரே போன்று இருந்திருக்கலாம் என்பது ஒரு விளக்கமாகும்," என்று கூறும் அவர், எனவே அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பது கடினம் என்பதையும் குறிப்பிட்டார்.

அதேபோல், நமது கிரகம் அதன் மிக நெருக்கமான அண்டை கிரகங்களான வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகியவற்றுடன் பல பொதுவான பண்புகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். வெள்ளி சில நேரங்களில் "பூமியின் தீய இரட்டைக் கோள்" என்றும் அழைக்கப்படுகிறது.

"ஆனால் தியாவின் தோற்றம் எப்படித் திட்டவட்டமாகத் தெரியவில்லையோ, அதேபோல் அதன் முடிவும் தெரியவில்லை," என்று வலென்சியா குறிப்பிட்டார்.

ஆனால், சில தடயங்கள் உள்ளன. பூமியின் ஆழத்தில் இருக்கும் இரண்டு கண்டங்களின் அளவிலான பகுதிகள் தியாவின் எஞ்சிய பாகங்கள் என்று 2023-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று தெரிவித்தது.

சந்திரனுக்குத் திரும்புதல்

நமது கிரகமும் நிலவும் எப்படி ஒரு ஜோடியாக மாறின என்பதைப் பற்றி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாசாவின் தற்போதைய ஆர்டெமிஸ் திட்டங்கள் மற்றும் மனிதர்கள் மீண்டும் நிலவுக்குச் செல்வது குறித்து விஞ்ஞானிகள் இவ்வளவு ஆர்வமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

பூமி - தியா மோதல், நிலவின் தோற்றம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,சந்திரனைப் பற்றி பல கேள்விகள் உள்ளன, அதனால்தான் நாசா வரும் ஆண்டுகளில் மீண்டும் மனிதர்களை அதன் மேற்பரப்பில் அனுப்ப திட்டமிட்டுள்ளது

அப்பல்லோ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்ததை விட மேம்பட்ட சோதனைகளுடன், இந்த திட்டங்கள் நிலவின் தென் துருவம் போன்ற புதிய பகுதிகளை ஆராய உள்ளன. அப்பல்லோ மூலம் பூமிக்குக் கொண்டு வரப்பட்ட நிலவின் மாதிரிகள், நிலவின் ஒப்பீட்டளவில் சிறிய பகுதியிலிருந்து, அதாவது அதன் அருகிலுள்ள பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து மட்டுமே வந்தவை.

"நாம் பூமியில் வெறும் ஆறு இடங்களுக்கு மட்டும் சென்றிருந்தால், நாம் முழு பூமியையும் ஆராய்ந்துவிட்டோம் என்றும் அதன் பரிணாமத்தைப் புரிந்துகொண்டோம் என்றும் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது." என்று வலென்சியா கூறுகிறார்.

ஆனால் இப்போதைக்கு, நாம் ஏற்கனவே கற்றுக்கொண்டவற்றைக் கொண்டு பார்க்கையில், தியாவின் தியாகத்திற்கு நாம் ஒரு பெரிய நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

வெள்ளி, 2 ஜனவரி, 2026

கீழடி BBC news

கீழடி நகரை மக்கள் கைவிட்டது ஏன்? சுமார் 1,170 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது? ஆய்வில் புதிய தகவல்
கீழடி, மதுரை, தொல்லியல், வரலாறு

பட மூலாதாரம்,Archaeological Survey of India

படக்குறிப்பு,கீழடி
    • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி,பிபிசி தமிழ்

மதுரைக்கு அருகில் கண்டறியப்பட்ட கீழடி தொல்லியல் தளத்தில் வாழ்ந்திருந்த மக்கள், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தைக் கைவிட்டு வெளியேறினர். சுமார் 1,150 ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் அந்த இடத்தைக் கைவிட்டு அகன்றதற்கான காரணத்தை விவரிக்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று.

அக்டோபர் 25ஆம் தேதி Current Science ஆய்விதழில் "Luminescence chronology of sediments from the prehistoric civilisation sites along the Vaigai river, India" என்ற கட்டுரை வெளியானது. இந்த ஆய்வுக் கட்டுரையை ஆமதாபாத் நகரில் உள்ள Physical Research Laboratory-ஐ சேர்ந்த ஆய்வாளர்களும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.

கீழடி தொல்லியல் தளத்தில் கிடைத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகள், அங்கு வாழ்ந்து வந்த மக்கள் அந்த இடத்தைக் கைவிட்டு அகன்றதற்கான காரணத்தைப் புலப்படுத்துவதாக இந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

அதாவது, அருகிலுள்ள வைகை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே, அங்கு வாழ்ந்த மக்களை அந்த இடத்தை விட்டு செல்லத் தூண்டியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நிகழ்வு சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்திருக்கலாம் என்றும் இவர்களது ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தியது.

இந்த அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளுக்குப் பிறகு, 2017ஆம் ஆண்டில் இருந்து மாநில தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து அகழாய்வுகளை நடத்தி வருகிறது.

இங்கு கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகளும் இங்கு கிடைத்த தொல் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகளும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கிலேயே ஒரு நகரம் இந்தப் பகுதியில் இயங்கியிருக்கலாம் என்ற செய்திகளைத் தந்தன.

இந்த நிலையில் கீழடியில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் சில ஓஎஸ்எல் எனப்படும் Optically Stimulated Luminescence ஆய்வுக்கு சில ஆய்வாளர்களால் அனுப்பப்பட்டன. அந்த ஆய்வின் முடிவுகள், கீழடியில் வாழ்ந்த மக்கள் வைகையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக, சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறியிருக்கலாம் எனத் தெரிய வந்திருப்பதாக ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

கீழடி, மதுரை, தொல்லியல், வரலாறு
படக்குறிப்பு,கீழடி தொல்லியல் தளம்

ஆய்வுக் குழிகளில் கிடைத்தது என்ன?

தற்போது வைகை நதி, கீழடி தொல்லியல் தளத்தில் இருந்து வடக்கில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் ஓடுகிறது. அந்நதியின் வெள்ளப் படுகையில்தான் இந்த தொல்லியல் களம் அமைந்திருக்கிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இந்தப் பகுதி ஒரு நகரமாக இருந்திருக்கலாம் என இங்கு கிடைத்த பொருட்களை கரிமப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது தெரிய வந்தது.

ஆனால், கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்தபோது வெளிவந்த கட்டடத் தொகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டால் படிவதைப் போன்ற மண் படிவங்கள் காணப்பட்டன. அந்தப் படிவங்களை ஆய்வுக்கு உட்படுத்த சில ஆய்வாளர்கள் முடிவெடுத்தனர்.

கீழடி பள்ளிச்சந்தை திடல் மேட்டில் தோண்டப்பட்ட இரண்டு ஆய்வுக் குழிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில்தான் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டு குழிகளிலும் களிமண், நுண்ணிய வண்டல், மணல், சரளைக் கற்கள் ஆகியவை இருந்தன. மேலும் இந்தக் குழிகளிலும் கிடைத்த மண் படிவங்கள் பொதுவாக நுண்துகள்களாகவும் பல்வேறு வகைகளைக் கொண்டனவாகவும் இருந்தன.

இந்த இரண்டு குழிகளிலும் மேற்பகுதியானது களிமண் படிவங்களால் மூடப்பட்டிருந்தது. இப்போது இந்த மண் படிவங்களைச் சேகரித்து, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தித்தான் கீழடி எப்போது கைவிடப்பட்டது, ஏன் கைவிடப்பட்டது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்தக் குழிகளில் வேறு சில அம்சங்களும் தெரிய வந்தன. முதலாவது ஆய்வுக் குழியில் 50 செ.மீ. முதல் 170 செ.மீ. ஆழத்தில் திட்டமிட்டு கட்டப்பட்ட கட்டட அமைப்புகள் தென்பட்டன. ஒரே அளவிலான செங்கற்களால் கட்டப்பட்ட ஒரே மாதிரியான கட்டுமானங்களாக இவை இருந்தன. இதே குழியில் 2 மீட்டர் ஆழத்தில் உடைந்த கூரை ஓடுகளும் காணப்பட்டன. நீண்ட சுவர்கள், கால்வாய்கள் ஆகியவையும் தென்பட்டன. இந்தக் கால்வாய்கள் வெவ்வேறு அகலங்களைக் கொண்டிருந்தன.

நுணுக்கமான களிமண்ணை வைத்து தரைத்தளங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டுமானங்களின் மீது நுண்ணிய வண்டல் - களிமண் படிவங்கள் காணப்பட்டன. இதன் அடிப்பகுதி கரடுமுரடான மணல் அடுக்குகளைக் கொண்டிருந்தது.

இரண்டாவது அகழாய்வுக் குழியில் ஏராளமான பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள், களிமண் கலைப் பொருட்கள் ஆகியவை கிடைத்தன. அது பானை தயாரிக்கும் பகுதியாக இருந்திருக்கலாம் என்பதை இந்தப் பொருட்கள் சுட்டிக்காட்டின. இங்கும் வண்டல் - களிமண் படிவங்கள் காணப்பட்டன. ஆனால், முதல் ஆய்வுக் குழியோடு ஒப்பிட்டால், இங்கு படிவங்களின் தடிமன் அதிகமாக இருந்தது என்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை.

இந்த இரண்டு ஆய்வுக் குழிகளிலும் கிடைத்த படிமங்கள் பெரும்பாலும் வண்டல் மண்ணாலும் களிமண்ணாலும் ஆனவையாக இருந்தன. சில வண்டல் படிவங்களின் இடையிடையே பானை ஓடுகளும் கிடைத்தன. முதலில், அதிக விசையுடன் மண் படிமங்கள் உருவான பிறகு, விசை குறைந்த நிலையில் அடுத்த நிலை படிங்கள் உருவானதை இது குறிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கீழடி, மதுரை, தொல்லியல், வரலாறு

ஆய்வு எப்படி நடத்தப்பட்டது?

கீழடியின் ஐந்தாம் கட்ட அகழாய்வில் - அதாவது 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் - பள்ளிச்சந்தை திடல் மேட்டில் தோண்டப்பட்ட இரண்டு அகழாய்வுக் குழிகளில், வெவ்வேறு பண்பாட்டு அடுக்குகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

ஓஎஸ்எல் காலக்கணிப்புக்கு அனுப்புவதற்காக 0.8 மீட்டர், 1.5 மீட்டர், 2.8 மீட்டர், 3.9 மீட்டர் என வெவ்வேறு ஆழங்களில் மொத்தமாக நான்கு மாதிரிகள் சேரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் ஆமதாபாத்தில் உள்ள பௌதீக ஆராய்ச்சி ஆய்வகத்தின் Atomic, Molecular and Optical Physics Division-இல் உள்ள லுமினிசன்ஸ் ஃபிஸிக்ஸ் மற்றும் அப்ளிகேஷன் க்ரூப் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

முதல் குழியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் OSL காலத்தைப் பொறுத்தவரை, 80 செ.மீ ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 670 (± 40) ஆண்டுகளாக இருந்தது. அதே குழியில் 1.5 மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 1,170 (± 60) ஆண்டுகளாக இருந்தது. இரண்டாவது குழியில் 2.9 (2.8) மீ ஆழத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரியின் வயது 940 (± 70) ஆண்டுகளாக இருந்தது. 3.8 (3.9) மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 1,140 (± 70) ஆண்டுகளாக இருந்தது.

"இந்த ஓஎஸ்எல் காலக் கணிப்பின்படி பார்க்கும்போது சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் போன்ற தீவிர இயற்கை நிகழ்வுகளால் இந்தப் பகுதிகள் கைவிடப்பட்டு இருக்கலாம். இது படிப்படியாக நிகழ்ந்திருக்கலாம்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்களில் ஒருவரான எஸ். சத்தியசீலன்.

கீழடி, மதுரை, தொல்லியல், வரலாறு

பட மூலாதாரம்,keeladimuseum.tn.gov.in

படக்குறிப்பு,கீழடி அகழாய்வுத் தளம் - வான்வழிப் பார்வை

அந்த காலகட்டத்தில் வைகை நதி எப்படி இருந்தது?

அந்தக் காலகட்டத்தில் வைகை நதியின் போக்கு எவ்வாறு இருந்தது என்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

பனியுகத்திற்குப் பிந்தைய ஹோலோசீன் காலகட்டத்தின் பிற்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தின் காலநிலை நிலையானதாக இருக்கவில்லை என்றும் தென்னிந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் ஏற்ற இறக்கமான காலநிலை சூழலை எதிர்கொண்டன என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

அந்தக் காலகட்டத்தில் வைகை ஆற்றல்மிக்க நதியாகவும் பரந்த வடிநிலப் பகுதிகளையும் வெள்ளச் சமவெளி பகுதிகளையும் கொண்டிருந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

"வைகை நதி பல முறை தனது பாதையை மாற்றியுள்ளது. பூமியின் மேல் ஓட்டில் ஏற்பட்ட மாற்றங்களாலும் வெள்ளப் பெருக்கின் காரணமாகவும் இந்தப் பாதை மாற்றங்கள் நடந்துள்ளன. இதுபோல நதி தனது பாதையை மாற்றுவதும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளங்களும் 1,250 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ந்து நடந்தன.

இதனால், நதிக் கரையோரம் இருந்த குடியிருப்புகள் அழிந்தன. அதன் அடிப்படையில் பார்க்கும்போது தற்போது கிடைத்துள்ள ஓஎஸ்எல் காலக்கணிப்பு (1,170 ஆண்டுகளுக்கு முன்) வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காலத்தையும் குடியிருப்புகள் அழிந்த நிகழ்வையும் அதன் மீது வெள்ளப் படிமங்கள் ஏற்பட்ட காலத்தையும் குறிக்கிறது" என்கிறார் சத்தியசீலன்.

கீழடியைப் பொறுத்தவரை, ஆரம்பக் காலத்தில் குடிசைகளில் இருந்து குடியிருப்புகள் துவங்கியிருக்க வேண்டும் என்கிறார் அவர்.

"பிறகு அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டு, அது ஒரு நகரமாகியிருக்க வேண்டும். அந்தப் பகுதியில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது மிகச் செழிப்பான விவசாயம் நடந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

இந்தப் பகுதி கைவிடப்பட்டதைப் பொறுத்தவரை, அது ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்காது, படிப்படியாக நடந்திருக்கும். அங்கிருந்த மக்கள், வட பகுதியில் ஆறு ஓடியதால் மற்ற மூன்று திசைகளில் நகர்ந்திருக்க வேண்டும்" என்கிறார் சத்தியசீலன்.

ஆகவே, 1,170 - 1140 ஆண்டுகளுக்கு முன்பு வைகையில் ஏற்பட்ட வெள்ளங்களின் விளைவாக இங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து நகர்ந்துள்ளார்கள் என்கிறது இந்தப் புதிய ஆய்வு. இதனால், அங்கிருந்த குடியிருப்புகள் அழிந்து அதன் மீது வெள்ளத்தால் ஏற்பட்ட மண்ணும் வண்டலும் படிந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

வெள்ளி, 17 அக்டோபர், 2025

தீபாவளி ஒரு அறிவியல் கண்ணோட்டம், மண்ணின் மைந்தனுக்கு ஒரு மரணவிழா

 தீபாவளி ஒரு அறிவியல் கண்ணோட்டம்

மண்ணின் மைந்தனுக்கு ஒரு மரணவிழா [1]

 

இந்த பூமி எப்படித் தோன்றியது?

இதில் நிலம் எவ்வாறு உருவானது?

இதில் கடல் எவ்வாறு உருவானது?

இதில் உயிரினங்கள் எப்படித் தோன்றின?

            இதுபற்றி நாற்பது சதுர்யுகங்களுக்கு முன்னர், அதாவது சுமார் கோடி வருடங்களுக்கு முன்னர் இரண்யாட்சதன் என்ற விஞ்ஞானி ஆய்வு செய்தான்.  இந்த ஆய்விற்காக பூமியின் பரந்துபட்ட நிலப் பரப்பையும் ஆழமான கடலின் ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாக ஆராய வேண்டியிருந்தது.  இதற்காக இரண்யாட்சதனுக்கு அதிகமான ஆய்வுக் கூடங்கள் தேவைப்பட்டன.  அதிகமாக ஆய்வாளர்களும் தேவைப்பட்டனர்.  இவற்றிற்கெல்லாம் பெரும் பணம் தேவைப் பட்டது.

எனவே இவன் தேவர்கள் என்று அழைக்கப்பட்ட செல்வந்தர்களை அடித்துத் துன்புறுத்தி, அடிமை செய்து, அவர்களது செல்வத்தைக் கொள்ளையடித்தான்.  அடிமையான தேவர்களை எல்லாம் தனது ஆய்வின் களப்பணிக்குப் பயன்படுத்திக் கொண்டான்.  அவர்களது செல்வத்தை எல்லாம் தனது ஆய்விற்காகச் செலவு செய்தான்.  இரண்யாட்சதன் தனது ஆய்விற்காக பூமியின் கடலோர நிலப்பரப்புகளிலும், மிகப்பெரிய மலைத் தொடர்களிலும் மிகப்பெரிய ஆய்வகங்களை அமைத்து, நிலத்தின் அடியில் முப்பது நாற்பது கிலோமீட்டர்களுக்குக் கீழே நிலம் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தான். 

இதனால் கடலும் நிலமும் சேரும் இடங்களில் உள்ள நிலத்தின் ஆணிவேர்பகுதிகள் ஆட்டம் கண்டன.  பெரும் பூகம்பம் ஏற்பட்டுப் பூமியின் மேற்பரப்பில் உள்ள பெருங்கண்ட நிலத்திட்டுகள் அப்படியே பாய்போல் சுருண்டு கடலில் மூழ்கின. இந்தப் பூலோகம் அழிவை நோக்கிச் செல்வதை அறிந்த ’இருடிகள்’ என்று அழைக்கப்பட்ட விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று கூடி இந்த நிகழ்வு முழுவதையும் செயற்கைக்கோள்கள் படங்கள் அனைத்தையும் ‘சூப்பர்‘ கணினியில் AI தொழில்நுட்பத்தின் மூலம் ஒருங்கிணைத்து ஆய்வு செய்தனர்.  ஆய்வு முடிவுகளைத்  திரைப்படங்களாக மாற்றித் திரையிட்டுப் பார்த்தனர்.   ஒரு பெரிய தண்ணீர் குளத்தின் மேல் பாய் விரித்துப் போடப்பட்டது போல் நிலப்பரப்பு தட்டையாகக் காட்சி அளித்தது.  பின்னர் அந்தப் பாயானது அப்படியே சுருண்டு சிறிது சிறிதாகத் தண்ணீரில் மூழ்குவது போன்று இருந்தது.  அந்தக் காட்சியில் பூமியில் உள்ள பெருங்கண்ட நிலப்பரப்புகள் அப்படியே சுருண்டு பூமியில் உள்ள கடலுக்குள் செல்வதைக் காண முடிந்தது.

இருடிகளும் தேவர்களும் ஒன்றுகூடி, இரண்யாட்சதனின் இந்த ஆய்வை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர்.   உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் அழிவை உண்டாக்கும் இந்த ஆய்வை நிறுத்த வேண்டும்.  அதற்கு இரண்யாட்சதனை உடனடியாகச் சிறைப்பிடித்து மரணதண்டனை வழங்க வேண்டும்.  இவ்வாறு செய்வதைத் தவிர வேறு வழியில்லைகடலில் உள்ளே மூழ்கிக் கொண்டிருக்கும்  நிலப்பரப்பை மீண்டும் கடலுக்கு மேலே கொண்டுவந்து பூமியை இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.  இதற்காக, அப்போது பூமியை ஆண்டு வந்த மகாவிட்ணு என்ற மன்னனிடம் சென்று முறையிட்டனர்.

மன்னன் மகாவிட்ணுவும், தனது மக்களையும், மண்ணையும் காக்க வேண்டி இருடிகள் என்று அழைக்கப்பட்ட விஞ்ஞானிகளுடனும், தேவர் என்று அழைக்கப்பட்ட செல்வந்தர்களுடனும் கலந்து ஆலோசித்தான்.  இரண்யாட்சதன், பெருங்கண்டங்களின் நிலத்திட்டுகள் ஒன்றாகச் சேரும் இடங்களில் நிலத்தின் அடியில் மிகவும் ஆழமான, ஆணிவேர்ப் பகுதிகளில் பெருந்துளைகள் இட்டதால் நிலப்பகுதி ஆட்டம் கண்டு கடலில் மூழ்குவதை இருடிகள் மகாவிட்ணுவிடம் எடுத்துக் கூறினர்.

 

இதனைத் தடுக்க, பெருங்கண்டங்களின் (கடல்)ஓரப்பகுதிகளை முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்றும் எடுத்துக் கூறினர்.  மன்னன் மகாவிட்ணு உடனடியாக இரண்யாட்சதனை இப்பூலோக எதிரி எனப் பிரகடணம் செய்தான்.  இரண்யாட்சதனைக் கைது செய்து அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என அறிவித்தான். 

பூமியின் மன்னனான மகாவிட்ணு தான் வழங்கிய ஆணையை நிறைவேற்ற, முப்பது நாற்பது கிலோமீட்டர்களுக்குக் கீழே கடலின் அடியில் இருந்த மிகப்பெரிய ஆய்வகத்திற்குச் சென்று,  அதில் இருந்து கொண்டு இரண்யாட்சதனுடன் போரிட்டான்.  போரின் முடிவில் கடலின் அடி ஆழத்தில் ஒழிந்திருந்த இரண்யாட்சதன் இறந்தான்.  மன்னன் மகாவிட்ணு வெற்றி வாகை சூடினான்.

இரண்யாட்சதனை வெற்றி கண்ட மகாவிட்ணு, உடனடியாக கடலுக்கு அடியில் இருந்த அந்த மிகப் பெரிய ஆய்வகங்களின் துணையுடன், மிகப்பெரிய நீண்ட தூண்களை உருவாக்கினான்.  அந்தத் தூண்களைக் கடலில் மூழ்கிய நிலப் பரப்பின் ஓரங்களில் முட்டுக் கொடுத்து நிலப்பரப்புகளை மீண்டும் கடல் மட்டத்திற்கு மேலே கொண்டு வந்தான்.    இதனால் பூமியின் மேற்பரப்பில்  புதிதாக ஆல்ப்சு மலைத் தொடர்கள் தோன்றின.  நிலப்பரப்பின் கடலோரப் பகுதிகள் கடலிலிருந்து மேலே வந்தன.

இந்த நிகழ்வு முழுவதையும் செயற்கைக்கோள்கள் படங்கள் அனைத்தையும் ‘சூப்பர்‘கணினியில் AI மூலம் ஒருங்கிணைத்து ஆய்வு செய்தனர்.  அவற்றைத் திரையிட்டுப் பார்த்தபோது, ஒரு பெரிய குளத்தில் தண்ணீருக்குள் சுருண்டு மூழ்கிய பாயைப் பன்றி (JCB) ஒன்று தனது வாயால் நெம்பி மேலே தூக்குவது போன்று தெரிந்தது. 

முன்பு பாய் போல் தட்டையாக இருந்த நிலப்பரப்பானது, இப்போது ஆங்காங்கே கிழிந்து துண்டுதுண்டாகக் காட்சியளித்தது.  ஆல்ப்சு மலைத் தொடர்களும், இமயமலைகளும், இந்திய சாத்பூரா மலைத் தொடர்களும் காசுப்பியன் கடல்களும் புதிதாகத் தோன்றியிருந்தன.

 

ஒன்றாக இருந்த பெரு நிலப்பரப்பு இப்போது கிழிந்து பிரிந்து ஆப்பரிக்கா, ஐரோப்பா, ஆசியா, அமெரிக்க கண்டங்களாக மாற்றமடைந்து ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்ல ஆரம்பித்தன.

ஆனால் “ஒரு நல்லது அழியும் போது ஒரு கெட்டது பிறந்தது“!  ஒரு மாபெரும் அழிவில் இருந்து பூமி மீண்டுகொண்டிருந்தபோது, ஒரு விபரீதமும் நடந்தது.  அதை விபரீதத்தை அந்த மகாவிட்ணுவாலும் தவிர்க்க இயலவில்லை.  அந்தப் பன்றி வடிவில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தின் உள்ளே உயிர்களை அழிக்கக் கூடிய விஷக் கழிவுப் பொருள் ஒன்று தோன்றியது.

அதனை விஞ்ஞானிகளால் அழிக்க முடியவில்லை.  அந்தக் கழிவிற்கு ‘நரன்‘ என்று பெயரிட்டனர்.  அது அசுரத்தன்மையுடன் உயிர்களை வருத்தி அழிக்கத் துவங்கியது.  இந்த நரன் என்ற நஞ்சிடம் இருந்து தேவர்களையும் இருடிகளையும் காக்க வேண்டி, மகாவிட்ணு என்ற அந்த மாமன்னன், அந்த நரனைப் பூமிக்குஅடியிலேயே வைத்துப் புதைத்து அழித்தான்.

அவ்வாறு பூமியிலிருந்து தோன்றிய நரன் என்ற அசுரப் பொருள் பூமியால் அழிக்கப்பட்ட நாளைப் பூமியில் வாழும் உயிரினங்களும், மனிதர்களும், தேவர்களும் இருடிகளும் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலை எழுந்து 3 முதல் 4.30 மணிக்குள் குளிர்ந்த கங்கை நீரில் குளித்து, பின்னர் புத்தாடை உடுத்தி, இனிப்பு உண்டு இந்தப் பூமியும் அதில் உள்ள நிலப்பகுதிகளும் காக்கப்பட்ட தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

உலக மக்கள் அனைவரும் நரன்-அசுரன் இறந்த நாளையும், பூதேவி காப்பாற்றப்பட்ட நாளையும், புத்தாடை உடுத்தி தீபங்களை வ(ரி)லியாக ஒளியேற்றி இனிப்பு உண்டு கொண்டாடிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

இருள் நீங்கட்டும்.

நல்லொளி உள்ளங்களிலும் உணர்வுகளிலும் நிறைந்திருக்கட்டும்.

 

அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

kalairajan26@gmail.com            9443501912

https://publications-kalairajan.blogspot.com/2018/10/blog-post_20.html 

https://archive.org/details/20251018_20251018_0251 

தீபாவளியைப் பற்றி புராணக் கதைகள் நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. தீபாவளிக்கும் மற்ற பண்டிகைகளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தீபாவளி நாளில், மக்கள் எண்ணெய்க் குளியல் எடுத்து, புதிய ஆடைகளை அணிந்து, இனிப்புகள் மற்றும் எண்ணெய் சார்ந்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் வானத்தில் பட்டாசுகளை வெடித்து, வானத்தை ஒளிரச் செய்து பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு கொண்டாடப்படும் தீபாவளி தொடர்பான கதையைப் படிக்கும்போது, ​​அது ஒரு புவியியல் ஆய்வு முடிவு, புவி அறிவியல் நிகழ்வு மற்றும் பூமியில் உயிரினங்கள் காப்பாற்றப்பட்ட ஒரு நிகழ்வின் கொண்டாட்டமாகும். எனவே, இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு வார்த்தைகளை மாற்றி தீபாவளி கதையை எழுதியுள்ளேன்.
அன்பான நண்பர்களே, இதைப் படித்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

[1] காசிஸ்ரீ, முனைவர், கி. காளைராசன்,  kalairajan26@gmail.com, 9443501912