கீழடி, மதுரை, தொல்லியல், வரலாறு

பட மூலாதாரம்,Archaeological Survey of India

படக்குறிப்பு,கீழடி
    • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி,பிபிசி தமிழ்

மதுரைக்கு அருகில் கண்டறியப்பட்ட கீழடி தொல்லியல் தளத்தில் வாழ்ந்திருந்த மக்கள், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தைக் கைவிட்டு வெளியேறினர். சுமார் 1,150 ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் அந்த இடத்தைக் கைவிட்டு அகன்றதற்கான காரணத்தை விவரிக்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று.

அக்டோபர் 25ஆம் தேதி Current Science ஆய்விதழில் "Luminescence chronology of sediments from the prehistoric civilisation sites along the Vaigai river, India" என்ற கட்டுரை வெளியானது. இந்த ஆய்வுக் கட்டுரையை ஆமதாபாத் நகரில் உள்ள Physical Research Laboratory-ஐ சேர்ந்த ஆய்வாளர்களும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.

கீழடி தொல்லியல் தளத்தில் கிடைத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகள், அங்கு வாழ்ந்து வந்த மக்கள் அந்த இடத்தைக் கைவிட்டு அகன்றதற்கான காரணத்தைப் புலப்படுத்துவதாக இந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

அதாவது, அருகிலுள்ள வைகை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே, அங்கு வாழ்ந்த மக்களை அந்த இடத்தை விட்டு செல்லத் தூண்டியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நிகழ்வு சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்திருக்கலாம் என்றும் இவர்களது ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தியது.

இந்த அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளுக்குப் பிறகு, 2017ஆம் ஆண்டில் இருந்து மாநில தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து அகழாய்வுகளை நடத்தி வருகிறது.

இங்கு கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகளும் இங்கு கிடைத்த தொல் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகளும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கிலேயே ஒரு நகரம் இந்தப் பகுதியில் இயங்கியிருக்கலாம் என்ற செய்திகளைத் தந்தன.

இந்த நிலையில் கீழடியில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் சில ஓஎஸ்எல் எனப்படும் Optically Stimulated Luminescence ஆய்வுக்கு சில ஆய்வாளர்களால் அனுப்பப்பட்டன. அந்த ஆய்வின் முடிவுகள், கீழடியில் வாழ்ந்த மக்கள் வைகையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக, சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறியிருக்கலாம் எனத் தெரிய வந்திருப்பதாக ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

கீழடி, மதுரை, தொல்லியல், வரலாறு
படக்குறிப்பு,கீழடி தொல்லியல் தளம்

ஆய்வுக் குழிகளில் கிடைத்தது என்ன?

தற்போது வைகை நதி, கீழடி தொல்லியல் தளத்தில் இருந்து வடக்கில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் ஓடுகிறது. அந்நதியின் வெள்ளப் படுகையில்தான் இந்த தொல்லியல் களம் அமைந்திருக்கிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இந்தப் பகுதி ஒரு நகரமாக இருந்திருக்கலாம் என இங்கு கிடைத்த பொருட்களை கரிமப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது தெரிய வந்தது.

ஆனால், கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்தபோது வெளிவந்த கட்டடத் தொகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டால் படிவதைப் போன்ற மண் படிவங்கள் காணப்பட்டன. அந்தப் படிவங்களை ஆய்வுக்கு உட்படுத்த சில ஆய்வாளர்கள் முடிவெடுத்தனர்.

கீழடி பள்ளிச்சந்தை திடல் மேட்டில் தோண்டப்பட்ட இரண்டு ஆய்வுக் குழிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில்தான் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டு குழிகளிலும் களிமண், நுண்ணிய வண்டல், மணல், சரளைக் கற்கள் ஆகியவை இருந்தன. மேலும் இந்தக் குழிகளிலும் கிடைத்த மண் படிவங்கள் பொதுவாக நுண்துகள்களாகவும் பல்வேறு வகைகளைக் கொண்டனவாகவும் இருந்தன.

இந்த இரண்டு குழிகளிலும் மேற்பகுதியானது களிமண் படிவங்களால் மூடப்பட்டிருந்தது. இப்போது இந்த மண் படிவங்களைச் சேகரித்து, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தித்தான் கீழடி எப்போது கைவிடப்பட்டது, ஏன் கைவிடப்பட்டது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்தக் குழிகளில் வேறு சில அம்சங்களும் தெரிய வந்தன. முதலாவது ஆய்வுக் குழியில் 50 செ.மீ. முதல் 170 செ.மீ. ஆழத்தில் திட்டமிட்டு கட்டப்பட்ட கட்டட அமைப்புகள் தென்பட்டன. ஒரே அளவிலான செங்கற்களால் கட்டப்பட்ட ஒரே மாதிரியான கட்டுமானங்களாக இவை இருந்தன. இதே குழியில் 2 மீட்டர் ஆழத்தில் உடைந்த கூரை ஓடுகளும் காணப்பட்டன. நீண்ட சுவர்கள், கால்வாய்கள் ஆகியவையும் தென்பட்டன. இந்தக் கால்வாய்கள் வெவ்வேறு அகலங்களைக் கொண்டிருந்தன.

நுணுக்கமான களிமண்ணை வைத்து தரைத்தளங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டுமானங்களின் மீது நுண்ணிய வண்டல் - களிமண் படிவங்கள் காணப்பட்டன. இதன் அடிப்பகுதி கரடுமுரடான மணல் அடுக்குகளைக் கொண்டிருந்தது.

இரண்டாவது அகழாய்வுக் குழியில் ஏராளமான பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள், களிமண் கலைப் பொருட்கள் ஆகியவை கிடைத்தன. அது பானை தயாரிக்கும் பகுதியாக இருந்திருக்கலாம் என்பதை இந்தப் பொருட்கள் சுட்டிக்காட்டின. இங்கும் வண்டல் - களிமண் படிவங்கள் காணப்பட்டன. ஆனால், முதல் ஆய்வுக் குழியோடு ஒப்பிட்டால், இங்கு படிவங்களின் தடிமன் அதிகமாக இருந்தது என்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை.

இந்த இரண்டு ஆய்வுக் குழிகளிலும் கிடைத்த படிமங்கள் பெரும்பாலும் வண்டல் மண்ணாலும் களிமண்ணாலும் ஆனவையாக இருந்தன. சில வண்டல் படிவங்களின் இடையிடையே பானை ஓடுகளும் கிடைத்தன. முதலில், அதிக விசையுடன் மண் படிமங்கள் உருவான பிறகு, விசை குறைந்த நிலையில் அடுத்த நிலை படிங்கள் உருவானதை இது குறிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கீழடி, மதுரை, தொல்லியல், வரலாறு

ஆய்வு எப்படி நடத்தப்பட்டது?

கீழடியின் ஐந்தாம் கட்ட அகழாய்வில் - அதாவது 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் - பள்ளிச்சந்தை திடல் மேட்டில் தோண்டப்பட்ட இரண்டு அகழாய்வுக் குழிகளில், வெவ்வேறு பண்பாட்டு அடுக்குகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

ஓஎஸ்எல் காலக்கணிப்புக்கு அனுப்புவதற்காக 0.8 மீட்டர், 1.5 மீட்டர், 2.8 மீட்டர், 3.9 மீட்டர் என வெவ்வேறு ஆழங்களில் மொத்தமாக நான்கு மாதிரிகள் சேரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் ஆமதாபாத்தில் உள்ள பௌதீக ஆராய்ச்சி ஆய்வகத்தின் Atomic, Molecular and Optical Physics Division-இல் உள்ள லுமினிசன்ஸ் ஃபிஸிக்ஸ் மற்றும் அப்ளிகேஷன் க்ரூப் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

முதல் குழியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் OSL காலத்தைப் பொறுத்தவரை, 80 செ.மீ ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 670 (± 40) ஆண்டுகளாக இருந்தது. அதே குழியில் 1.5 மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 1,170 (± 60) ஆண்டுகளாக இருந்தது. இரண்டாவது குழியில் 2.9 (2.8) மீ ஆழத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரியின் வயது 940 (± 70) ஆண்டுகளாக இருந்தது. 3.8 (3.9) மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 1,140 (± 70) ஆண்டுகளாக இருந்தது.

"இந்த ஓஎஸ்எல் காலக் கணிப்பின்படி பார்க்கும்போது சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் போன்ற தீவிர இயற்கை நிகழ்வுகளால் இந்தப் பகுதிகள் கைவிடப்பட்டு இருக்கலாம். இது படிப்படியாக நிகழ்ந்திருக்கலாம்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்களில் ஒருவரான எஸ். சத்தியசீலன்.

கீழடி, மதுரை, தொல்லியல், வரலாறு

பட மூலாதாரம்,keeladimuseum.tn.gov.in

படக்குறிப்பு,கீழடி அகழாய்வுத் தளம் - வான்வழிப் பார்வை

அந்த காலகட்டத்தில் வைகை நதி எப்படி இருந்தது?

அந்தக் காலகட்டத்தில் வைகை நதியின் போக்கு எவ்வாறு இருந்தது என்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

பனியுகத்திற்குப் பிந்தைய ஹோலோசீன் காலகட்டத்தின் பிற்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தின் காலநிலை நிலையானதாக இருக்கவில்லை என்றும் தென்னிந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் ஏற்ற இறக்கமான காலநிலை சூழலை எதிர்கொண்டன என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

அந்தக் காலகட்டத்தில் வைகை ஆற்றல்மிக்க நதியாகவும் பரந்த வடிநிலப் பகுதிகளையும் வெள்ளச் சமவெளி பகுதிகளையும் கொண்டிருந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

"வைகை நதி பல முறை தனது பாதையை மாற்றியுள்ளது. பூமியின் மேல் ஓட்டில் ஏற்பட்ட மாற்றங்களாலும் வெள்ளப் பெருக்கின் காரணமாகவும் இந்தப் பாதை மாற்றங்கள் நடந்துள்ளன. இதுபோல நதி தனது பாதையை மாற்றுவதும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளங்களும் 1,250 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ந்து நடந்தன.

இதனால், நதிக் கரையோரம் இருந்த குடியிருப்புகள் அழிந்தன. அதன் அடிப்படையில் பார்க்கும்போது தற்போது கிடைத்துள்ள ஓஎஸ்எல் காலக்கணிப்பு (1,170 ஆண்டுகளுக்கு முன்) வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காலத்தையும் குடியிருப்புகள் அழிந்த நிகழ்வையும் அதன் மீது வெள்ளப் படிமங்கள் ஏற்பட்ட காலத்தையும் குறிக்கிறது" என்கிறார் சத்தியசீலன்.

கீழடியைப் பொறுத்தவரை, ஆரம்பக் காலத்தில் குடிசைகளில் இருந்து குடியிருப்புகள் துவங்கியிருக்க வேண்டும் என்கிறார் அவர்.

"பிறகு அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டு, அது ஒரு நகரமாகியிருக்க வேண்டும். அந்தப் பகுதியில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது மிகச் செழிப்பான விவசாயம் நடந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

இந்தப் பகுதி கைவிடப்பட்டதைப் பொறுத்தவரை, அது ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்காது, படிப்படியாக நடந்திருக்கும். அங்கிருந்த மக்கள், வட பகுதியில் ஆறு ஓடியதால் மற்ற மூன்று திசைகளில் நகர்ந்திருக்க வேண்டும்" என்கிறார் சத்தியசீலன்.

ஆகவே, 1,170 - 1140 ஆண்டுகளுக்கு முன்பு வைகையில் ஏற்பட்ட வெள்ளங்களின் விளைவாக இங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து நகர்ந்துள்ளார்கள் என்கிறது இந்தப் புதிய ஆய்வு. இதனால், அங்கிருந்த குடியிருப்புகள் அழிந்து அதன் மீது வெள்ளத்தால் ஏற்பட்ட மண்ணும் வண்டலும் படிந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு