ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

cameroon = காமனூர் = காமன் + ஊர்

cameroon = காமனூர் = காமன் + ஊர்
இவர்களது மொழி தமிழ்மொழி என்று பல்வேறு உதாரணங்களுடன் எடுத்துக் கூறுகிறார் இந்த ஆய்வாளர்.
குமரிக்கோட்டைக் கடல்கொள்வதற்கு (பெருஞ் சுனாமி) முன்னாள் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்றும் ஆப்பிரிக்கா எங்கும் வாழ்கின்றனர்.
தமிழைப் போற்றுவோம்.
தமிழரின் தொன்மை போற்றுவோம்.

வியாழன், 2 ஏப்ரல், 2020

பாரியின் பறம்பு இதுவா?

பாரியின் பறம்பு இதுவா?

பாரியின் பறம்பு - google map - https://goo.gl/maps/ahE1TkBFpUHT9zwB6
சிவகங்கை மாவட்டம் பிரான்மலை ( பறம்பு மலை)  மற்றும் இந்த மலையைச் சுற்றியிருந்த சுமார் 300 ஊர்களையும் சங்ககாலத்தில் ஆட்சி செய்த குறுநில மன்னனின் பெயர் பாரி.  அவனது நாட்டில் ஒரு முரு முல்லைக்கொடி படர்வதற்குப் பந்தல் இன்றித் தரையில் படர்ந்து கிடந்தது.  பந்தல் இல்லாத காரணத்தினால் தரையில் படர்ந்து கிடந்த முல்லைக் கொடியைக் கண்டு மன்னன் பாரி மனம் வருந்தினான்.   அந்த முல்லைக் கொடிக்குப் பந்தல் அமைத்துக் கொடுத்து அதைப் படரச் செய்யும் வரை அதன் துன்பப்படுமே என்று வருந்தினான்.  உடனடியாகத் தனது தேரை நிறுத்தித் தேரில் முல்லைக் கொடியைப் படர விட்டான்.  இதனால் முல்லைக்குத் தேர் கொடுத்த சிறப்புடைய மன்னனாக இன்றுவரை பாரி புகழப்படுகிறான்.  பாரிக்கு அங்கவை சங்கவை என்று இரண்டு மகள்கள். பாரியின் நண்பர் திருவாதவூரில் பிறந்த புலவர் கபிலர். 

மூவேந்தர்களும் ஒன்று சேர்ந்து பாரியின் மீது படையெடுத்துக் கோட்டையை முற்றுகை இடுகின்றனர்.  அப்போது கபிலர் அந்த மூவேந்தர்களிடமும், 
“கடந்து சென்று அழிக்கும் படையோடு நீங்கள் மூவரும் கூடிப் போர் செய்தாலும் பறம்பு மலையை வெல்வதற்கு இயலாது.  முந்நூறு ஊர்களைக் கொண்டது இந்தப் பறம்பு நாடு.  முந்நூறு ஊர்களையும் பரிசில் வேண்டி வந்தவர்களுக்குத் தானம் கொடுத்துவிட்டான் பாரி. இங்கே நானும் பாரியும் உள்ளோம்.  நீங்கள் பாடியபடி பாரியிடம் சென்றால், எச்சியுள்ள இந்தப் பறம்பு மலையை உங்களுக்குப் பரிசாகக் கொடுப்பான் பாரி”, என்று பாரியின் கொடைத் தன்மையைப் புகழ்ந்து, மூவேந்தர்களையும் ஏளனம் செய்யும்வகையில் பாடியுள்ளார்.

புறநானூறு 110, பாடியவர் –  கபிலர்,
பாடப்பட்டோன் – வேள் பாரி, மூவேந்தர், திணை – நொச்சி, துறை – மகண்மறுத்தல்
“கடந்து அடு தானை மூவிரும்  கூடி
உடன்றனிர் ஆயினும்  பறம்பு கொளற்கு அரிதே,
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு,
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்,
யாமும் பாரியும்  உளமே,  
குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே”

மூவேந்தர்களும் முற்றுகை இட்டும் வெல்லமுடியாத, அந்தப் பாரியின் அகழியும் கோட்டையும் எங்கே?  அவற்றின் எ(மி)ச்சங்கள் ஏதேனும் காணக்கிடைக்கின்றனவா?  குமரிக்கோட்டைக் கடல்கொண்டபோது உண்டான கடல்வெள்ளத்தில் (பெருஞ் சுனாமியில்) கூடல்நகரம் (கீழடி) அழிந்தபோது, பாரியின் பறம்பும் கடல்கோளால் அழிந்து போனதா?

பிரான்மலையைக் கூகுள் புவிப்படத்தில் வழியாக ஆராய்ந்து பார்த்தபோது, மலைக்குத் தெற்கே உள்ளே கண்மாய் மேடு நீண்டு உள்ளதைக் காணமுடிகிறது.  இதுவே பாரியின் அகழியும் கோட்டையாகவும் இருந்திருக்கலாமோ என்ற ஐயம் எழுகிறது.

இதைத் தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிய வேண்டும்.

சங்கத் தமிழர் போற்றுவோம்.
பாரியின் பறம்பு மலை போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
பங்குனி 20 (02.04.2020) வியாழக்கிழமை


-----------------
22 சங்கப் பாடல்வரிகளில் ‘பாரி’ என்ற இந்தக் குறுநில மன்னனைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

பறம்பின் கோமான் பாரியும் கறங்கு மணி - சிறு 91
பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி/பலவு உறு குன்றம் போல - நற் 253/7,8
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் - குறு 196/3
மலர்ந்த மார்பின் மா வண் பாரி/முழவு மண் புலர இரவலர் இனைய - பதி 61/8,9
கடும் பரி புரவி கைவண் பாரி/தீம் பெரும் பைம் சுனை பூத்த - அகம் 78/22,23
உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் - அகம் 303/10
பாரி வேள்_பால் பாடினை செலினே - புறம் 105/8
கடவன் பாரி கைவண்மையே - புறம் 106/5
பாரி பாரி என்று பல ஏத்தி - புறம் 107/1
பாரி ஒருவனும் அல்லன் - புறம் 107/3
பறம்பு பாடினர் அதுவே அறம் பூண்டு - புறம் 108/4
பாரியும் பரிசிலர் இரப்பின் - புறம் 108/5
அளிதோ தானே பாரியது பறம்பே/நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும் - புறம் 109/1,2
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடு - புறம் 110/3
யாமும் பாரியும் உளமே - புறம் 110/5
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று - புறம் 113/5
சேறும் வாழியோ பெரும் பெயர் பறம்பே/கோல் திரள் முன்கை குறும் தொடி மகளிர் - புறம் 113/7,8
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே - புறம் 118/5
பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசை - புறம் 158/4
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர் - புறம் 176/9
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி_மகளிர் - புறம் 200/12
படு மணி யானை பறம்பின் கோமான் - புறம் 201/4
நெடு மா பாரி_மகளிர் யானே - புறம் 201/5
கைவண் பாரி_மகளிர் என்ற என் - புறம் 202/15
மலை கெழு நாட மா வண் பாரி/கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் - புறம் 236/3,4
பாரி பறம்பின் பனி சுனை போல - புறம் 337/6
------------------------
நன்றி - பாடல் தொகுப்பு உதவி - http://tamilconcordance.in/SANGconc-1-paa1.html#பாரி