சிம்சுமார சக்கரம்
==============="மைத்ரேயரே! ஸ்ரீ ஹரி பகவானின் சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலத் தோன்றுகின்ற நட்சத்திரக் கூட்டமாகிய ரூபத்தின் வால்பகுதியில் துருவன் இருக்கிறான். அங்கிருந்து துருவன் சுற்றிக்கொண்டு, சந்திர சூரியாதி கிரகங்களையெல்லாம் சுற்றித் திருப்ப அவைகளும் சக்கரத்தைப் போல அவனைச் சுற்றி சுழல்கின்றன. சந்திர சூர்யர்களும் மற்றுமுள்ள கிரகங்களும், நட்சத்திரங்களும் காற்றின் வடிவமான கயிறுகளினால் கட்டப்பட்டு துருவனிடம் இணைந்துள்ளன. ஆகாயத்திலிருக்கும் நட்சத்திரக்கூட்டம் யாவும், சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலக் காணப்படும். அதன் இதயத்திலே சகல தேஜோலோகங்களுக்கும் ஆதார பூதனான ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளியிருக்கிறான். உத்தானபாதனுடைய மகனான துருவன் அந்த உலகநாதனை ஆராதித்து, நட்சத்திரமயமான அந்தச் சிம்சுமாரத்தின் வாலினிடத்தில் இருக்கை பெற்றான். அந்த சிம்சுமாரத்திற்கு ஆதாரம் ஸ்ரீயப்பதியேயாகும். அந்தச் சிம்சுமாரமோ துருவனுக்கு ஆதாரம். அந்தத் துருவனோ, சூரியனுக்கு ஆதாரம், அந்த சூரியனோ தேவ, மனுஷ்யாதி சகலத்துக்கும் ஆதாரம். அது எவ்விதமெனில் சூரியன் ரசவத்தான ஜகங்களை எட்டு மாதங்களில் இழுத்துப் பொழிய அந்த வர்ஷத்தினாலே சகல உயிரினங்களுக்கும் உபயோகமான உணவுகள் உண்டாகின்றன. அன்னத்தாலே தான் சகலமும் உண்டாகி வளர்கின்றன. மேலும் சூரியன் தனது உக்கிரமான கிரணங்களினால், லோகத்திலிருந்து தண்ணீரை ஆகர்ஷித்து, சந்திரனிடம் பெய்ய, அந்தச் சந்திரனும் வாயு நாடி மயங்களான வழிகளினால் புகையும் காற்றும் நெருப்புமான வடிவுள்ள மேகங்களிலே விட, அந்த மேகங்களிலிருந்து நீரானது உலகில் பொழிகிறது. அந்த மேகங்களிலிருந்து தண்ணீர் நழுவி விழாமையினால் அம்மேகங்களுக்கு அப்பிரங்கள் என்று பெயர் வந்தது. ஆனாலும் காற்றினால் அம்மேகங்கள் அலைக்கப்படும் காலத்தால் உண்டான பரிபாகத்தினால் தண்ணீர் நிர்மலமாகி விழுகிறது. ஆறுகள், பூமி, கடல்கள், பிராணிகள் ஆகியவற்றிலுள்ள நால்வகை ஜலத்தையும் கவர்ந்துதான் சூரியன் வர்ஷிக்கிறான். மேலும் ஆகாய கங்கையின் ஜலத்தைத் தனது கிரணங்களால் கொண்டு, மேகங்களிற் சேர்க்காமலே வர்ஷிப்பதும் உண்டு. அந்தத் தூய்மையான நீர் படுவதனால் மனிதனது பாவந்தீரும். அவன் நரகமடைவதில்லை. அந்த ஸ்நானம் திவ்ய ஸ்நானம் என்று வழங்கப்படும்."
"முனிவரே! சூரியன் காணப்படும் போதே எந்த நீர் மேகமின்றி ஆகாயத்திலிருந்து விழுகிறதோ அதுதான் ஆகாய கங்கையின் நீர் என்று சொல்லப்படும். அன்றியும் கிருத்திகை முதலான ஒற்றைப்பட்ட நட்சத்திரங்களிலே சூரியன் விளங்கிக் கொண்டேயிருக்க, ஆகாயத்திலிருந்து விழுகிற நீரானது, திக்கஜங்களினாலே பொழியப்படும். ஆகாய கங்கா ஜலமாகச் சொல்லப்படும், ரோகிணி முதலிய இரட்டைப்பட்ட நட்சத்திரங்களிலே சூரியன் விளங்கிக் கொண்டேயிருக்க, வானத்திலிருந்து மேகமின்றிப் பொழியும் தண்ணீரானது சூரியன் பெய்யும் ஆகாய கங்கா ஜலமாகக் கூறப்படும். எந்தத் தண்ணீரானது மேகங்களினாலே வர்ஷிக்கப்படுகின்றதோ, அது பிராணிகளின் பிழைப்புக்காக ஓஷதிகளைப் போஷித்து அமுதமென்று சொல்லப்படும். இவ்விதமாக மழையினாலே ஓஷதிகள் பயன் கொடுக்குமளவும் போஷிக்கப்பட்டனவாகி நிற்க, அவற்றைக் கொண்டு, சாஸ்திர நோக்கமுடைய மனிதர்கள் விதிப்படிப் பலவகைப்பட்ட யக்ஞங்களைச் செய்து, தேவதைகளைத் திருப்தி செய்கிறார்கள். இவ்விதமாக யாகங்களும், வேதங்களும், பிராமணாதி ஜாதிகளும், தேவதைகளும், பறவைகளுமான இந்த உலகம் எல்லாம் மழையினாலேயே காக்கப்படுகின்றன. ஏனெனில் உணவை விளைவிப்பதே மழையல்லவா? அந்த மழையை உண்டாக்குவோன் சூரியன்! அந்த சூரியனுக்கு ஆதாரமானவன் துருவன்! அந்த துருவனுக்கு ஆதாரமாக இருப்பது சிம்சுமார சக்கரம்! அந்த சக்கரத்துக்கு ஆதாரம் ஸ்ரீமந்நாராயணன். இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணன் அந்தச் சிம்சுமார சக்கரத்தின் இதயத்தில் இருந்து கொண்டு, சகல பிராணிகளையும் தரிக்கும்படித் தாங்கிக் கொண்டிருக்கிறான்."
தொடரும்...
அகிலம் போற்றும் பாரதம்
27 அக்டோபர், 2018 ·
🐚🐚🐚 விஷ்ணு புராணம் - பகுதி 32 🐚🐚
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக