ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

கீழடியில் கிடைத்த சிறு கொண்டை

சூழியம் விழுங்குசிறு கொண்டை

கீழடியில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வில் அகரத்தில் கிடைத்த அருள்மிகு மீனாட்சியம்மன்  கொண்டை



அகரம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பெண் பொம்மை 
-----------------------------------
திருப்புவனம்:கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் சுடுமண் பெண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது.  அகரத்தில் ஏழு குழிகள் தோண்டப்பட்டு உறைகிணறு, பானைகள், பானை ஓடுகள், நத்தை கூடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. 
மூன்றாவதாக தோண்டப்பட்ட குழியில் 65 செ.மீ., ஆழத்தில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் முக பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்கள், மூக்கு, பெருத்த உதடு ஆகியவற்றுடன் நெற்றியிலும், காதிலும் ஆபரணங்கள் உள்ளன.
தலைமுடியை இடதுபுறம் பெரிதாக கொண்டை போட்டுள்ளது போன்று,இந்த பொம்மை முகம் கலைநயத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. முகத்தை சுற்றிலும் அழகூட்ட சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது. ஆறாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் பெண் முகம் கொண்ட பொம்மை அச்சுகள், தங்ககாசு, தங்க காதணி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2803206 
 ஜூலை 16, 2021  01:29
------------------------------------------------------------------


நரியை பரியாக்கிய படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து ஒன்பதாவது படலமாக அமைந்துள்ளது.  இத்திருவிளையாடலை யெல்லாம் சோமசுந்தரர் மீனாட்சியிடம் கூறித் தமது திருக்கோயிலில் வீற்றிருந்தார்.

533
நொய்தழ லெரிக்கடவு ணோற்றபய னெய்தக்
கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத்
தைதவிழிதழ்க்கமல மப்பொழு தலர்ந்தோர்
மொய்தளிர் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன.

தீக் கடவுள், தவஞ் செய்த பயனை எளிதில் அடையவும், கொய்யப்பட்ட தளிர்போல், நெருப்புக் கொழுந்து விட்டேரிகின்ற வேள்விக் குண்டத்தின்கண்; அழகியதாக விரிந்த இதழ் களையுடைய தாமலை மலர், அப்போதே விரியப்பெற்று, நெருங்கிய தளிர் களையுடைய மணமுள்ள ஒரு கொடியானது, தோன்றி மேலெழுவதைப் போலவும்

534. 
விட்டிலகு சூழியம் விழுங்குசிறு கொண்டை
வட்டமதி வாய்க்குறு முயற்கறையை மானக்
கட்டியதி னாற்றிய கதிர்த்தரள மாலை
சுட்டியதில் விட்டொழுகு சூழ்கிரண மொப்ப.

விட்டு இலகு சூழியம் விழுங்கு சிறு கொண்டை
வட்ட மதி வாய்க்குறு முயல் கறையை மானக்
கட்டி அதி நாற்றிய கதிர்த் தரள மாலை
சுட்டி அதில் விட்டு ஒழுகு சூழ் கிரணம் ஒப்ப.

ஒளிவிட்டு விளங்கா நின்ற முத்துச் சூழியத்தால் விழுங்கப்பட்ட, சிறிய கொண்டையானது,  வட்டமாகிய சந்திரனிடத்துள்ள, சிறிய முயலாகிய களங்கத்தை ஒக்கவும், அச்சூழியத்தில் கட்டித் தொங்க விட்ட, ஒளியினையுடைய முத்துமாலை, மேல் சுட்டப்பட்ட சந்திரனினின்றும்,  விலகி வீழ்கின்ற சூழ்ந்த கிரணத்தை ஒக்கவும் 

     சூழியம் - கொண்டையைச் சுற்றியணியும் முத்தானியன்ற
அணி. அதனாற் கவரப்பட்டுக் கொண்டை சிறிதே தோன்றிற்று.
மதியினிடத்துள்ள கறையை மானென்றும் முயலென்றும் கூறுதல்
வழக்கு. சூழியத்திற்கு வட்டமாகிய மதியும், கொண்டைக்கு அதனுட்
களங்கமும், முத்துத் தொங்கலுக்குக் கீழ்நோக்கிச் செல்லும் அதன்
கிரணமும் உவமைகளாம். சுட்டி யென்பதனை ஓர் அணியாகக்
கொண்டுரைப்பாருமுளர்; பொருந்துமேற் கொள்க. (16)

535
தீங்குதலை யின்னமுத மார்பின்வழி சிந்தி
யாங்கிள நிலாவொழுகு மாரவட மின்ன
வீங்குட லிளம்பரிதி வெஞ்சுடர் விழுங்கி
வாங்குகடல் வித்துரும மாலையொளி கால.

இனிய குதலையுடன்கூடிய இனிய அமுதமானது,  மார்பின் வழியாகச் சிந்தியதுபோல, இளநிலவு சிந்தும் முத்துமாலை ஒளிவிடவும், ஒளிமிக்க வடிவத்தினையுடைய இளஞாயிற்றின், வெப்பமாகிய ஒளியை உண்டு, வளைந்த கடலிற்றோன்றிய பவளத்தின்  மாலையானது ஒளி வீசவும் 

குதலை - பொருளறிய வாராத இளஞ்சொல். அமுதம் -
வாயூறல்; பேசும் பொழுது ஊறல் ஓழுகுமாகலின் ‘குதலை
யின்னமுதம்’ என்றார்.


2836.
சாய்ந்த கொண்டையுந் திருமுடிச் சாத்தும்வாள் வைரம்
வேய்ந்த கண்டியுந் தொடிகளுங் குழைகளும் வினையைக்
காய்ந்த புண்டர நுதலும்வெண் கலிங்கமுங் காப்பும்
ஆய்ந்த தொண்டர்த மகம்பிரி யாதழ கெறிப்ப.

சாய்ந்த கொண்டையும் திரு முடிச் சாத்தும் வாள் வயிரம்
வேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் வினையைக்
காய்ந்த புண்டர நுதலும் வெண் கலிங்கமும் காப்பும்
ஆய்ந்த தொண்டர் தம் அகம் பிரியாது அழகு எறிப்ப.

ஒரு புறஞ்சாய்ந்த கொண்டையும்,  திருமுடிச்சாத்தும் - திருமுடிப்பாகையும், ஒளி பொருந்திய வைரம் பதித்த கண்டிககளும், 
வீரவளைகளும்  குண்டலங்களும், வினைகளைச் சினந்து போக்கும் திருநீற்றினை மூன்று கீற்றாக அணிந்த திருநுதலும், வெள்ளிய ஆடையும் கவசமும், (மெய்ப்பொருளை) ஆராய்ந்தறிந்த தொண்டர்களின் மனத்தினின்றும் நீங்காது அழகினை வீசவும்.

திருமுடிச்சாத்து - தலைப்பாகை. குதிரைச் சேவகனானமைக்
கேற்பச் சாய்ந்த கொண்டையும், திருமுடிச்சாத்தும் முதலியன
உடையனானானென்க.





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக