வியாழன், 7 நவம்பர், 2024

மலி திரை ஊர்ந்து பிரான்மலையைக் கடல் வௌவியதா?

மலி திரை ஊர்ந்து பிரான்மலையைக் கடல் வௌவியதா?

“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்”
- என்கிறது கலித்தொகை 104.

“வடிவேலெறிந்த வான்பகை பொறாது
பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி!“
- என்கிறது சிலப்பதிகாரம் காடுகாண்காதை 17 -22

மேற்கண்ட சிலப்பதிகார வரிகளாலும் கலித்தொகைப் பாடலாலும் பாண்டியநாட்டினைக் கடல்கொண்டதை அறியமுடிகிறது.  இவ்வாறு பாண்டிய நாட்டினைக் கடல் வௌவிய காலத்திலேதான் கடல்அலைகளால் அரித்துவரப்பட்ட மண்ணானது மதுரையில் மேடாகச் சேர்ந்து மண்(நாக)மலையாகத் தோற்றுவித்திருக்க வேண்டும்.

கலித்தொகையும், சிலப்பதிகாரமும் கூறும் இக்கூற்றையே திருவிளையாடற் புராணமும் திருப்பூவணப்புராணமும் கூறுகின்றன.

....பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்  குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ளும் அளவிற்குக் கடல்நீர் தோன்றி அளித்துள்ளது.  அப்படி யென்றால் குமரிக்கோட்டுடன் ஒன்றாக ஒட்டியிருந்த இருந்த தற்போதைய 
‘கன்னியாகுமரி‘ எவ்வளவு பாதிக்கப் பெற்றிருக்கும்?  
எப்படியெல்லாம் பாதிக்கப் பெற்றிருக்கும்?

கடல் பொங்கி ஏதோ 10 அல்லது 15 கி.மீ. தூரத்திற்கு வரவில்லை!  மாறாக
கிழக்கிலிருந்து கடல் பொங்கி எழுந்து அலைகள் மேற்குத் தொடர்ச்சி மலையையே தாண்டிச் சென்று இருப்பதைக் காணலாம்.
தமிழகம் முழுவதையும் அழித்துள்ளது.

கிழக்கிலிருந்து கடல் பொங்கி எழுந்து வந்திருந்தால், கிழக்குக் கடற்கரை மாவட்டங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள...
சிவங்கை மாவட்டம் பிரான்மலையைக் கடல் சூழ்ந்த காட்சியைக் காண்போம்..
சிவங்கை மாவட்டம் பிரான்மலையைக் கடல் வவ்விய காட்சி....
.

Inline image 1 

Inline image 2
பிரான்மலையின் உயரம் சுமார் 2.கீ.மீ. 
இவ்வளவு உயரத்திற்கு கடல் பொங்கி வந்துள்ளது!

அதாவது குமரிக்கோட்டினைக் கடல் கொள்ளும் போது, பொங்கி வந்த கடல்நீரின் உயரம் 2.கி.மீ.
அதன் நீளம் சுமார் 1500 கி.மீ.

மேற்குத் தொடர்ச்சி மலைமேல் உள்ள வால்பாறையைக் கடல் வவ்விய காட்சி....அடுத்த பதிவில்....

சனி, 2 செப்டம்பர், 2023

ஓம் கபர்திநே நம: ஆகாய கங்கை பூமியில் சிவபெருமானின் ஜடாமுடியில் இறங்கியது.

#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம் 

சிவபெருமானின் அஷ்டோத்தர சதநாமாவில் உரைக்கப்பட்டுள்ள திருநாமங்களில் ஒன்று

ஓம் கபர்திநே நம: 

|| ओं कपर्दिने नमः || 

 கங்காப்ரவாஹமுள்ள ஜடாமண்டல முடையவர். ஜடைமீது பட்டதால் கங்கை அதிக பாவனமானது. அந்த கங்கை கோரமான கலியின் பாபத்தை அகற்றவல்லது கபர்தியின் த்யாநமும் நமஸ்காரமும் அங்ஙனமே. (கூர்ம புராணம்) இதுவும் சுருதிபிரஸித்த திருநாமம். 

"பர்வ பூர்த்தௌ” என்ற தாதுவிலிருந்து பிரவாஹம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய “ப" எனும் சப்தம் தோன்றிற்று. “க” என்பது ஜலமெனும் அர்த்தங்கொண்ட சொல் “கப” எனில் ஜலப்ரவாஹமென்று பொருள். அது கங்காபிரவாஹமாம். அதை“தாயதி” சுத்தம் செய்கிறது என்று கபர்த்த சப்தத்தின் அர்த்தம். கங்காஜலத்தைச் சுத்தம் செய்யும் ஜடையை உள்ளவர் என்பது பதார்த்தம்.

"புண்ணியமான சிவன் தலைமீது புண்யமான கங்கை விழுந்து, சிவனங்கத்தில்பட்ட ஜலம் பவித்ரமென மஹருஷிகள் அதில் ஸ்நாநம் செய்தார்கள்" என ஸ்ரீமத் ராமாயணம் கூறுகிறது. 

 'அபவித்ரனாயினும் பவித்ரனாயினும் ஸர்வ அவஸ்தைகளை அடைந்தவனாயினும் எவன் தேவனான ஈசானனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறமும் சுத்தனாவான்.” என சிவதர்மோத்தரம் அருள்கிறது. 

 “தானே சுத்தனானவன் கங்கையையும் அதிசுத்தமாக்கித் தரிப்பவன். அத்தகையவனை த்யாநம் செய்தால் நமது மலங்கள் அகலும்” என இத்திருநாமம் விளக்குகிறது.

ஸ்ரீ சிவநாம அஷ்டோத்தர சதம் மூலமும் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஸ்ரீ பாஸ்கரராயர் ஆகியோர் கருத்தைத் தழுவி ஸாஹித்ய வாங்முக பூஷணம் பிரம்மஸ்ரீ ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா இயற்றிய தமிழுரையும் என்னும் நூலில்(1950) இருந்து...

நன்றி - இது முகநூல் நண்பரின் பதிவு. நண்பருக்கு நன்றி. 🙏

புதன், 30 ஆகஸ்ட், 2023

எது திருவேங்கடம்? திருப்பதி ஏழுமலையா அல்லது இமயமலையா?

எது திருவேங்கடம்?
இன்றைய தமிழகத்திற்கு வடக்கே ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையா?
அல்லது பாரததேசத்திற்கு வடக்கில் உள்ள இமயமலையா? 
சங்கத் தமிழர் எதைத் திருவேங்கடம் என்று அழைத்தனர்.


சங்கப் பாடல்களில் வேங்கடம்

திருவேங்கடம் என்பது ஆந்திராவில் உள்ள திருப்பதி திருமலை திருத்தலம் என்றே அறிஞர் பெருமக்கள் பலரும் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.  சங்கப்பாடல்களில் அகநானூற்றில் 10 பாடல்களிலும், புறநானூற்றில் 4 பாடல்களிலும் வேங்கடம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. (நன்றி = http://tamilconcordance.in/)

       திருப்பதி  திருத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக கொண்டாடப்படுகிறது.  திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் திருப்பதி  திருமலை என்று ஒன்றாகச் சேர்த்தே அழைக்கப்படுகிறது.  சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழு சிகரங்களைக் கொண்டது திருமலை.

       சங்கப்பாடல்களில் வேங்கடம் என்பது (1) வடக்கே உள்ளது. (2) ‘புல்லி என்ற அரசனால் ஆளப்பட்டுள்ளது. (3) திருவிழாக்களை உடையது.  (4) வியன் தலை நன் நாட்டு வேங்கடம்    (5)  வெற்றி பொருந்திய வேலினையுடைய திரையன் என்பவனின் வேங்கட மலை  (6) தேன் கமழும் நெடிய உச்சிகளால் சிறப்புற்ற வேங்கட மலை, (7) காம்பு உடை நெடு வரை வேங்கடம்    (8) வெண்ணெல்லின் விதைகளைப் போல பாறைநிலத்தில் காய்ந்துகிடக்கும் குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய வேங்கடமலை  (9) மேகங்கள் தவழும் ஏறுவதற்குக் கடினமான உயர்ந்த உச்சியிலிருந்து இறங்குகின்ற உயர்ந்து தோன்றும் வெண்மையான அருவிகளையுடைய வேங்கடமலை  (10) கடந்துசெல்வதற்கு அரிய பாலை வழியைக் கடந்துள்ளது (11) கற்களையுடைய வழிகளையுடைய காட்டினைக் கடந்து,  (12) கல் இழி அருவி வேங்கடம் என்ற 12 அடைமொழிகளுடன் புகழ்ந்து பாடப் பெற்றுள்ளது.

தார் பாலைவனம் இமயமலைக்கு அருகே உள்ளது.  வேங்கடம் பாலைநிலத்துக்கு அருகில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ள காரணத்தினாலும், பனி படர்ந்த நெடுவரை என்று கூறப்பட்டுள்ள காரணத்தினாலும், பல சிகரங்களை உடையது என்ற காரணத்தினாலும் சங்கத் தமிழர்கள் இமயமலையைத்தான் வேங்கடம் என்று அழைத்துள்ளனர் என்பதைக் காணமுடிகிறது.

14 பாடல்களும் கீழே இணைக்கப்ப பெற்றுள்ளன.



அகநானூறு

வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை - அகம் 27/7

விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும் - அகம் 61/13

வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும் - அகம் 83/10

வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை - அகம் 85/9

வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே - அகம் 141/29

காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர் - அகம் 209/9

பனி படு சோலை வேங்கடத்து உம்பர் - அகம் 211/7

ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர் - அகம் 213/3

செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ - அகம் 265/21

கல் இழி அருவி வேங்கடம் கிழவோன் - புறம் 389/11

வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் - அகம் 393/20

 

புறநானூறு

ஒலி வெள் அருவி வேங்கட நாடன் - புறம் 381/22

வேங்கட விறல் வரைப்பட்ட - புறம் 385/11

வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என - புறம் 391/7

 

 #27 பாலை மதுரைக்கணக்காயனார்

கொடு வரி இரும் புலி தயங்க நெடு வரை

ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்

கானம் கடிய என்னார் நாம் அழ

நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார்

செல்ப என்ப என்போய் நல்ல                           5

மடவை மன்ற நீயே வட-வயின்

வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை

மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும்

கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன

நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்             10

தகைப்ப தங்கலர் ஆயினும் இகப்ப

யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் பட

தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை

பெருந்தகை சிதைத்தும் அமையா பருந்து பட

வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல்                  15

குருதியொடு துயல்வந்து அன்ன நின்

அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே

 பொருள் -  வளைந்த வரிகளையுடைய பெரிய புலி இருக்குமிடம் தெரியும்படியாக, நீண்ட மலையில் ஆடுகின்ற தண்டினைக் கொண்ட வலுவான கல்மூங்கில்கள் மேல்காற்றினால் வளையும் காட்டு வழி கடினமானது என்னாமல்; நம்மை அழவிட்டு, நிலையற்ற செல்வத்தின் மீது கொண்ட ஆசையினால் சென்று, இங்கு திரட்டிக் கொணரச் செல்கிறார் என்று சொல்கிறார்கள் என்கிறாயே, நல்ல பேதைப்பெண் நீ, வடக்கிலிருக்கும் வேங்கடமலையில் பிடித்த வெண்மையான தந்தங்களையுடைய யானைப்படையுள்ள, வீரப் போர் புரியும் பாண்டியர், அறநெறியில் காக்கும் கொற்கை என்ற அழகிய பெரிய துறைநகரில் விளையும் முத்தைப் போன்ற, முறுவலால் பொலிவுடன் விளங்கும் பற்கள் உள்ள சிவந்த உன் வாய் தடுத்து நிறுத்தினால் வெளியில் சென்று தங்கமாட்டார் - எனினும், மீறிச்செல்ல எப்படி விட்டுவிடும் பார்ப்போம். இனிமை சொட்ட, தெளிந்த நீருக்கு ஏற்ற திரண்ட கால்களை உடைய குவளையின் பேரழகைப் பழிக்கும் வகையில் இருந்தும் அமையாது, பருந்துகள் வட்டமிட மன்னர்களைப் போரில் வென்ற வெற்றியை உடைய நல்ல வேல் குருதியுடன் ஆடுவது போன்ற உன் செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களின் மாறுபட்ட பார்வை -

-------------------------------------

 

#61 பாலை மாமூலனார்

நோற்றோர் மன்ற தாமே கூற்றம்

கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் என

தாள் வலம்படுப்ப சேண் புலம் படர்ந்தோர்

நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து

ஆழல் வாழி தோழி தாழாது                     5

உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால்

வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ

அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலர் உடன்

அண்ணல் யானை வெண் கோடு கொண்டு

நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும்                   10

கழல் புனை திருந்து அடி கள்வர் கோமான்

மழ புலம் வணக்கிய மா வண் புல்லி

விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும்

பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது

முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி               15

பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின்

ஒண் கேழ் வன முலை பொலிந்த

நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே

 பொருள் -  ‘புண்ணியம் செய்தவர்கள் அவர்கள், இயமனால் கொள்ளப்பட்டு இறக்காமல், பிறரால் கொள்ளப்பட்டு இறந்தோர்' என்று முயற்சி வெற்றிசிறக்க, தொலைநாட்டுக்குச் சென்றோர் (சென்ற) நாள்களைக் குறித்துவைக்கும் நெடிய சுவரை நோக்கி, வருத்தமெனும் துன்பத்துள் ஆழ்ந்துவிடாதே தோழி! தாழ்க்காமல் இடியைப்போன்று ஒலிக்கும் ஊக்கத்துடன், புதிய காலும் வரியும் கொண்டு மாண்புற்று விளங்கும் வலிய நாண் பூட்டிய வலிய வில்லை ஏற்றி அரிய மார்பில் அழுத்தும் அம்பினையுடையவர்கள் பலருடன், தலைமை வாய்ந்த யானைகளின் வெண்மையான கொம்புகளைக் கொண்டு, கள்ளை விற்றுக்கொண்ட நெல்லால் நாளோலக்கச் சிறப்புச் செய்யும் கழலினைப் புனைந்த திருத்தமான அடிகளைக் கொண்ட கள்வர்களின் தலைவன், மழவரின் நாட்டை வணக்கிய மிகுந்த வள்ளண்மைகொண்ட புல்லி என்பானின் விழாக்களையுடைய மிக்க சிறப்பு வாய்ந்த திருவேங்கட மலையைப் பெறினும், அந்த இடம் பழகிப்போய் அங்கேயே தங்கியவராதல் நடவாததாகும் - மிகப் பழமையான,  முரசைப்போன்ற திணிந்த தோள்களையுடைய நெடுவேளாகிய ஆவி என்பானின் பொன் மிகுந்த பெரிய நகரமாகிய பொதினியைப் போன்ற உனது ஒளி விளங்கும் அழகிய முலைகளில் பொலிவுற்று விளங்கும் நுண்ணிய பூணினை அணிந்த மார்பினில் பொருந்துதலை மறந்து -

----------------------------

 

#83 பாலை கல்லாடனார்

வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீ

சுரி ஆர் உளை தலை பொலிய சூடி

கறை அடி மட பிடி கானத்து அலற

களிற்று கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து

கரும் கால் மராஅத்து கொழும் கொம்பு பிளந்து           5     

பெரும் பொளி வெண் நார் அழுந்துபட பூட்டி

நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர்

நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும்

கல்லா இளையர் பெருமகன் புல்லி

வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும்          10

சேயர் என்னாது அன்பு மிக கடைஇ

எய்த வந்தனவால் தாமே நெய்தல்

கூம்பு விடு நிகர் மலர் அன்ன

ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனே

பொருள் -  வலப்பக்கமாக சுழித்திருக்கும், வெண்கடம்பின், பாலைவெளியெல்லாம் மணக்கும் புதிய பூக்களைச் சுருட்டை நிறைந்திருக்கும் தலையாட்டம் போன்று அசையும்படி தம் தலை பொலிவுறச் சூடி, உரல் போன்ற பாதங்களையுடைய இளம் பெண்யானை காட்டினில் அலறிக்கொண்டிருக்க, அதன் ஆண்கன்றினைப் பிரித்துக் கொணர்ந்த மகிழ்ச்சியையுடையவராய், செருக்கு மிகுந்து கரிய அடிமரத்தையுடைய வெண்கடம்பின் திரண்ட கிளையினைப் பிளந்து பெரிதாக உரித்த வெண்மையான நாரால் காலில் வடு உண்டாக இறுக்கிக்கட்டி, உயரமான கொடிகள் அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழமையான ஊரில் கள்ளினை விற்கும் நல்ல இல்லத்தின் வாசற்கதவண்டைக் கட்டிப்போடும், தம் வேட்டைத் தொழிலன்றிப் பிறவற்றைக் கல்லாத இளைஞர்கட்குத் தலைவனான புல்லி என்பவனின் விரிந்த இடத்தையுடைய நல்ல நாட்டிலுள்ள வேங்கடமலையினைத் தாண்டிச்சென்றாலும் வெகுதூரம் சென்றுவிட்டார் என்றிராமல், அன்பினை மிகவும் செலுத்தி நம்மை அடைய வந்தன - நெய்தலின் முறுக்கவிழ்ந்த ஒளியுடைய மலரைப் போன்ற உயர்ந்த அழகமைந்த குளிர்ந்த  கண்களை யுடைய நம் காதலியின் குணங்கள் -

 --------------------------------

 

#85 பாலை காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்

நன் நுதல் பசப்பவும் பெரும் தோள் நெகிழவும்

உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்

இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர்

அறவர் அல்லர் அவர் என பல புலந்து

ஆழல் வாழி தோழி சாரல்                       5

ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி

கன்று பசி களைஇய பைம் கண் யானை

முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும்

வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை

நல்_நாள் பூத்த நாகு இள வேங்கை               10

நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை

நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து

துணை பயிர்ந்து அகவும் துனைதரு தண் கார்

வருதும் யாம் என தேற்றிய

பருவம் காண் அது பாயின்றால் மழையே                15

பொருள் -  நல்ல நெற்றி பசந்துபோகவும், பெரிய தோள்கள் மெலிந்திடவும் உண்ணாமல் இருப்பதால் உண்டான வருத்தத்தால் உயிர் போகும்படி மெலிவுற்று நாம் இந்த நிலைக்கு ஆளாகவும் இங்கு நம்மைவிட்டுப் பிரிந்துசென்ற நம் தலைவர் அறத்தின்பாற்பட்டவர் அல்லர் அவர் என்று பலவாறு மனம்வெறுத்துத் துயரத்தில் ஆழ்ந்துவிடாதே வாழ்க, என் தோழியே! மலைச் சாரலில் ஈன்று நாட்பட்ட மெல்லிய நடை வாய்ந்த இளம் பெண்யானைக்கும் அதன் கன்றுக்கும் பசியைத் தீர்க்கும்பொருட்டு, பசிய கண்களையுடைய ஆண்யானை மூங்கிலின் முற்றாத இளம் முளையைக் கொண்டுவந்து ஊட்டும் வெற்றி பொருந்திய வேலினையுடைய திரையன் என்பவனின் வேங்கடமென்னும் நீண்ட மலையில் நல்ல நாள் காலையில் பூத்த மிகவும் இளைய வேங்கைமரத்தின் மணமுள்ள பூக்களினூடே நுழைவதால் அவற்றின் துகள்படியப்பெற்ற புள்ளியையும் கோடுகளையும் உடைய மயில் அரும்பிய பசிய குருந்த மரத்தின் நறுமணம் கமழுகின்ற கிளையின் மேல் இருந்து தனது பெடையை அழைத்து அகவுகின்ற, விரைந்து வரும் குளிர்ந்த கார்ப்பருவமே யாம் திரும்ப வருவோம் என்று அவர் தெளிவாகக் கூறிச்சென்ற பருவம், இங்கே பார், மேகமும் பரவி வருகின்றது.

-----------------------------

 

#141 பாலை நக்கீரர்

அம்ம வாழி தோழி கைம்மிக

கனவும் கங்குல்-தோறு இனிய நனவும்

புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின

நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது

உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி                 5

மழை கால் நீங்கிய மாக விசும்பில்

குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து

அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள்

மறுகு விளக்கு-உறுத்து மாலை தூக்கி

பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய                  10

விழவு உடன் அயர வருக தில் அம்ம

துவர புலர்ந்து தூ மலர் கஞலி

தகரம் நாறும் தண் நறும் கதுப்பின்

புது மண மகடூஉ அயினிய கடி நகர்

பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ                15

கூழை கூந்தல் குறும் தொடி மகளிர்

பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து

பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை

கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகு

தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது                  20

நெடும் கால் மாஅத்து குறும் பறை பயிற்றும்

செல் குடி நிறுத்த பெரும் பெயர் கரிகால்

வெல் போர் சோழன் இடையாற்று அன்ன

நல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறி

புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை                 25

நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர

கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை

தேம் கமழ் நெடு வரை பிறங்கிய

வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே

பொருள் -  வாழ்க தோழியே!  நான் சொல்வதைக் கேட்பாயாக, மிகவும் இனியவாய் அமைகின்றன இரவுதோறும் கனவுகளும்; நனவிலும் ஓவியங்களால் அழகுசெய்யப்பட்ட நல்ல இல்லத்தில் பறவைச் சகுனங்கள் நல்லனவாகவே அமைகின்றன; என் நெஞ்சமும் அவலம் கொள்ளாமல் அவர் வரவை மிகவும் விரும்பி அமைதிகாக்கிறது;  உலகில் உழுதொழில் முடிந்து, கலப்பைகள் ஓய்ந்திருக்க, மழை பெய்யும் கார்ப்பருவம் நீங்கிப்போன, மாகமாகிய விசும்பில் குறுமுயல் போன்ற களங்கம் தன் மார்பினில் விளங்க, திங்கள் முழுமை பெற்று கார்த்திகை மீன்களைச் சேரும் இருள் அகன்ற நள்ளிரவில், தெருவில் விளக்குகளை ஏற்றிவைத்து மலர்மாலைகளைத் தொங்கவிட்டு பழமையான வெற்றியையுடைய முதிய ஊரில் பலருடன் ஒன்றுசேர்ந்த திருவிழாவை நம்முடன் கொண்டாட வருவாராக; நீராடியபின் புகையூட்டியதால் முற்றுமாக உலர்ந்து, தூய மலர்கள் செறிக்கப்பட்டு, தகர மரத்திலிருந்து செய்யப்பட்ட மணமுள்ள மயிர்ச்சாந்து மணக்கும் குளிர்ச்சியான நறிய கூந்தலையுடைய புதிய மணமகள், பல்வேறு உணவுவகைகளையுடைய திருமண வீட்டில் பல குமிழ்களையுடைய அடுப்பில் பாலை உலைநீராக இட்டு குட்டையான கூந்தலையும், குறிய வளையல்களையும் உடைய மகளிருடன் பெரிய வயலில் விளைந்த நெல்லின் வளைந்த கதிர்களைக் கொய்து பச்சை அவலை இடிக்கும் கருமையான வயிரம்பாய்ந்த உலக்கையின் வேகமான இடிக்கு அஞ்சிய நிறைசூல் கொண்ட வெண்ணிறக் கொக்கு இனிய குலையினையுடைய வாழையின் உயர்ந்த மடலில் அமராமல் நெடிய அடிமரத்தைக் கொண்ட மா மரத்திற்குச் செல்ல குறுகியதாய்ப் பறந்து செல்லும் - இடம் மாறிச் செல்ல எண்ணும் குடிமக்களைப் பாதுகாக்கும் பெரும் புகழைக்கொண்ட கரிகாலன் என்னும் வெல்லும் போரினையுடைய சோழமன்னனின் - இடையாறு என்னும் ஊரினைப் போன்ற நல்ல புகழையுடைய செல்வத்தை ஈட்டிவருவதற்காக, பல புள்ளிகளைக் கொண்ட புலியின் நிறத்தையுடைய பூக்களிடையே, பெரிய கிளையினையுடைய நாரத்தை மரத்தின் மணமுள்ள அழகிய மலர்கள் உதிர,  குரங்குகள் பாய்ந்து தாவும் மலையில் உள்ள வேங்கை மரங்களையுடைய, தேன் கமழும் நெடிய உச்சிகளால் சிறப்புற்ற வேங்கட மலையைச் சார்ந்த ஊர்களையுடைய பாலை வழியில் சென்றோராகிய நம் தலைவர்.

 -------------------------------

 

#209 பாலை கல்லாடனார்

தோளும் தொல் கவின் தொலைந்தன நாளும்

அன்னையும் அரும் துயர் உற்றனள் அலரே

பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான்

எழு உறழ் திணி தோள் இயல் தேர் செழியன்

நேரா எழுவர் அடிப்பட கடந்த                           5

ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என

ஆழல் வாழி தோழி அவரே

மாஅல் யானை மற போர் புல்லி

காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர்

அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து       10

உள்ளார் ஆதலோ அரிதே செம் வேல்

முள்ளூர் மன்னன் கழல் தொடி காரி

செல்லா நல் இசை நிறுத்த வல் வில்

ஓரி கொன்று சேரலர்க்கு ஈத்த

செம் வேர் பலவின் பயம் கெழு கொல்லி                15

நிலை பெறு கடவுள் ஆக்கிய

பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே

பொருள் -  'தோள்களும் தம்முடைய பழைய அழகை இழந்தன, நாள்தோறும் அன்னையும் அதைப் பார்த்து ஆற்றமுடியாத துன்பத்தை அடைந்தாள், ஊர் தூற்றும் பழிச்சொற்களோ, பொன்னால் அழகுசெய்யப்பட்ட நீண்ட தேரினையுடைய பாண்டியர் பெருமானாகிய கணையமரத்தைப் போன்ற திண்ணிய தோளினையும், நல்ல ஓட்டத்தையும் உடைய தேரையுடைய செழியன் எதிர்த்த ஏழு பகைவர்களையும் முற்ற வென்ற தலையாலங்கானத்தில் எழுந்த வெற்றி ஆரவாரத்தைக் காட்டிலும் பெரியது' என்று சொல்லிச்சொல்லி துயரில் ஆழ்ந்துவிடாதே, தோழியே! நம் தலைவரான அவர் பெரிய யானையையும், வீரம் மிகுந்த போரினையும் உடைய புல்லி என்பவனது மூங்கில்களையுடைய நீண்ட மலையாகிய வேங்கடத்தின் அப்பால் உள்ள குன்றுகளைக் கடந்து போயிருக்கிறாரென்றாலும், தமது உறுதிப்பாடு மிகுந்து நினையாதவராய் ஆவது மிக அரிது; சிவந்த வேலினையுடைய முள்ளூர் மன்னனாகிய, வீரக் கழலும், வீர வளையும் அணிந்த காரி என்பவன் கெடாத நல்ல புகழினை நிலைநாட்டிய வல்வில் ஓரியைக் கொன்று சேர மன்னர்க்கு உரிமையாக்கிய சிவந்த வேர்ப்பலாவின் பழம் மிகுந்த கொல்லிமலையில் நிலைபெற்ற தெய்வத்தச்சனால் உருவாக்கப்பட்ட பலரும் புகழும் கொல்லிப்பாவையைப் போன்ற உன் அழகை - (நினையாதவராய் ஆவது மிக அரிது)

-------------------------------------

#211 பாலை மாமூலனார்

கேளாய் எல்ல தோழி வாலிய

சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம்

பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள்

திண் நிலை மருப்பின் வய களிறு உரிஞு-தொறும்

தண் மழை ஆலியின் தாஅய் உழவர்                    5

வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும்

பனி படு சோலை வேங்கடத்து உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர்

குழி இடை கொண்ட கன்று உடை பெரு நிரை

பிடி படு பூசலின் எய்தாது ஒழிய                        10

கடும் சின வேந்தன் ஏவலின் எய்தி

நெடும் சேண் நாட்டில் தலைத்தார் பட்ட

கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய

வன்கண் கதவின் வெண்மணி வாயில்

மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை                    15

நீர் ஒலித்த அன்ன பேஎர்

அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரே

பொருள் -  நான் சொல்வதைச் கேள்! ஏடி! தோழியே! வெண்ணிறமான, சுண்ணாம்புச் சிப்பி வெந்து மலர்ந்ததைப் போன்ற பல பூக்களைக் கொண்ட வெண்கடம்பமரத்தின் பறையினைப் பார்த்தது போன்ற பரந்த அடியினையும், வலிமையான கால்களையும், உறுதியான நிலை வாய்ந்த கொம்புகளையும் உடைய வலிய களிறு உராயும்போதெல்லாம் குளிர்ந்த மழையோடு விழுகின்ற ஆலங்கட்டிகளைப் போல உதிர்ந்து பரவி, உழவர்கள் காயவைக்கும் வெண்ணெல்லின் விதைகளைப் போல பாறைநிலத்தில் காய்ந்துகிடக்கும் குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய வேங்கடமலையின் அப்பாலுள்ள மொழி வேறுபட்ட நாட்டில் இருக்கிறாரென்றாலும் விரைந்துவந்து நமக்கு அருள்புரிவார்; குழியில் அகப்பட்ட கன்றுகளையுடைய பெருங்கூட்டமான பெண்யானைகளை அகப்படுத்தும் ஆரவாரத்தின்போது (எழினி என்பவன் தன் ஏவலின்படி) வராமல் இருக்க மிகுந்த சினம் கொண்ட சோழமன்னனின் ஏவலால் சென்று (மத்தி என்பவன்)மிகுந்த தொலைவில் உள்ள நாட்டில் முதல் படையிலேயே அகப்பட்டுக்கொண்ட அரசியல் நூல் கல்லாத அந்த எழினியின் பல்லைப் பறித்து வந்து பதித்த கொடிய வீரத்தைக் காட்டுகின்ற கதவினையுடைய வெண்மணி என்னும் ஊரின் வாயிலில் மத்தி என்பவன் நாட்டிய வீரக்கல் பொருந்திய குளிர்ந்த கடல்துறையினில் கடல்நீர் மோதி முழங்கினாற் போன்ற பெரிய பழிச்சொல்லை நமக்கு விட்டுவிட்டு, நாம் அழும்படி பிரிந்த நம் தலைவர் - (விரைந்துவந்து நமக்கு அருள்புரிவார்)

-------------------------------

#213 பாலை தாயங்கண்ணனார்

வினை நவில் யானை விறல் போர் தொண்டையர்

இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு

ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்

கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி

சுரி இரும் பித்தை சுரும்பு பட சூடி                5

இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை

நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும்

வால் நிண புகவின் வடுகர் தேஎத்து

நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை

அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது               10

அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல

பல் கதிர் வாங்கிய படு_சுடர் அமையத்து

பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து

எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்

வெல் போர் வானவன் கொல்லி குட வரை               15

வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள்

பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர்

அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்

சென்று தாம் நீடலோ இலரே என்றும்

கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கை               20

வலம் படு வென்றி வாய் வாள் சோழர்

இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த

அறல் என நெறிந்த கூந்தல்

உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே

பொருள் -  போர்ப்பயிற்சி மிக்க யானைகளுடன் சென்று திறம்படப் போரிட வல்ல தொண்டையர் என்னும் மன்னர்க்குரிய கூட்டமான மேகங்கள் தவழும் ஏறுவதற்குக் கடினமான உயர்ந்த உச்சியிலிருந்து இறங்குகின்ற உயர்ந்து தோன்றும் வெண்மையான அருவிகளையுடைய வேங்கடமலைக்கு அப்பால் உள்ள, கொய்யத்தகுந்த தழைகளையுடைய காட்டுமல்லிகையின் வைகறையில் மலர்கின்ற பூவினை சுருண்ட கரிய மயிரில் வண்டுகள் மொய்க்கும்படி சூடிக்கொண்டு பகைவர் ஊரில் கவர்ந்துகொண்டு வந்த காளைகளையுடைய பெரிய பசுக்கூட்டத்திற்காக மலரின் முதிர்ந்த தேனால் ஆகிய கள்ளை விடியற்காலத்தில் பலியாகச் செலுத்தும் வெண்மையான கொழுப்புச் சோற்றினை உணவாகக் கொள்ளும் வடுகருடைய நாட்டில் நிழலின் அழகை இழந்த நீர் இல்லாத நீண்ட இடத்தினையுடைய தீப்பொறி பறக்கும் கடப்பதற்குக் கடினமான பாலை நிலத்து வழி மிகவும் நீண்டுள்ளது என்று கருதாமல், நம்மைப் பிரிந்துபோவதற்கு எண்ணங்கொண்டாரென்றாலும், பகற்பொழுது கழிய, பலவான கதிர்களையும் சுருக்கிக்கொண்ட ஞாயிறு மறைகின்ற அந்திப் பொழுதில் பெரிய மரங்களை அழித்துக் காற்று நன்கு புகும்படி செய்த அகன்ற கொல்லையில் தீப்பிழம்பு போன்ற கதிர்களையுடைய அழகிய மாணிக்கங்கள் ஒளிருகின்ற வெல்லும் போரினையுடைய சேரனின் கொல்லிமலையின் மேற்குப் பக்கத்தில் உள்ள மூங்கிலின் நேரான பகுதியைப் போன்ற மெலிவான முன்கையினையும், பருத்த தோள்களையும் உடைய உன்னுடைய பேரழகு சிதைந்துபோகும்படி உன்னைப் பிரிந்துபோய், தேவர்களின் பெறுவதற்கு அரிய விண்ணுலகத்தை அங்குள்ள அமிழ்தத்துடன் பெறுவதாயிருந்தாலும் அந்த வடுகர்நாட்டுக்குச் சென்று அங்கு நீண்ட நாள் தங்கியிருக்கமாட்டார், எந்நாளும் இரவலர்க்கு அணிகலன் அள்ளிக்கொடுப்பதற்கு கவிழ்ந்த, கழலும் வளையை அணிந்த பெரிய கையினையும் வலிமையால் எய்திய வெற்றியைப் பொருந்திய குறிதப்பாத வாளையும் உடைய சோழரின் ஒளிரும் நீரினையுடைய காவிரியின் சிறிதாக ஓடும் நீர் வரிவரியாகச் செய்திட்ட கருமணலைப் போன்ற நெளிநெளியான கூந்தலைத் தொட்டு உணரும் இனிய மென்மையுடன் ஒன்றிப்போதலை மறந்து - (நீண்ட நாள் தங்கியிருக்கமாட்டார்)

_____________________

 

#265 பாலை மாமூலனார்

புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து

பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும்

இமய செம் வரை மானும்-கொல்லோ

பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்

சீர் மிகு பாடலி குழீஇ கங்கை                           5

நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ

எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி

நிழல்-பால் அறலின் நெறித்த கூந்தல்

குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து

ஒண் தொடி நெகிழ சாஅய் செல்லலொடு                10

கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்து

இன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய

நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து

அணங்கு அரு மரபின் பேஎய் போல

விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க                       15

துகள் அற விளைந்த தோப்பி பருகி

குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்

புலாஅல் கையர் பூசா வாயர்

ஒராஅ உருட்டும் குடுமி குராலொடு

மரா அம் சீறூர் மருங்கில் தூங்கும்               20

செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ

வெம் முனை அரும் சுரம் இறந்தோர்

நம்மினும் வலிதா தூக்கிய பொருளே

பொருள் -  புகை போல மிகுந்து பரந்து, அகன்ற வானத்தில் உயர்ந்து பனி படர்ந்த நெருப்புப் பிழம்பு போலக் காணப்படும் இமயம் என்னும் செம்மையான மலையினைப் போன்றதோ? பல்வேறு புகழ்களால் நிறைந்த, வெல்லும் பேராற்றல் உடைய நந்தர் என்னும் அரசமரபினர் சிறப்பு மிக்க பாடலிபுரத்தில் கூடி, கங்கை ஆற்றின் நீரின் அடியில் மறைத்துவைத்து மறைந்துபோன செல்வமோ? இவ்விரண்டும் இல்லையென்றால் பின்னர் வேறு எத்தகையதோ? வாழ்க, தோழியே!, பிரகாசமான ஒளிவாய்ந்த நிழலில் கிடந்த கருமணல் போன்று அலையலையான கூந்தலினையும் குழலோசை போன்ற குரலினையும் உடைய பாவை போன்ற நீ வருத்தமுற, நம்மைத் துறந்து நமது ஒளிவிடும் வளையல்கள் நெகிழ்ந்து வீழ மெலிந்து, துன்பத்துடன் கண்ணீர் சொரிந்து நாம் இங்கே தனித்திருக்க, குன்றினை அடைந்து, இனிதாக முழங்கும் எழுச்சியுள்ள எருதினைக் கொன்று, உயர்வான கொழுப்புடன் கூடிய சிறந்த தசையினை நெருப்பில் வைத்துச் சுட்டு எடுத்து கண்டவரை வருத்தும் காண்பதற்கு அரிய இயல்பினையுடைய பேய்களைப் போல வெளிறிய அந்த ஊனைத் தின்றதனாலுண்டான நீர் வேட்கை நீங்க குற்றம் இல்லாமல் விளைந்த தோப்பிக்கள்ளைக் குடித்து வளைந்த வலிய வில்லையும், கொடிய பார்வையையும் உடைய மறவர்கள் புலால் நாறும் கையினையும், கழுவாத வாயினையும் உடையவராய் இடைவிடாமல் விட்டுவிட்டு ஒலிக்கும் குடுமியையுடைய கோட்டானோடு வெண்கடம்பு மரங்களையுடைய அழகிய சிறிய ஊர்ப்பக்கத்தில் குரவைக் கூத்தாடுகின்ற இடமான சிவந்த நெற்றியையுடைய யானைகள் வாழும் வேங்கடமலையைப் பொருந்தியுள்ள கொடிய போர்முனைகள் அமைந்த கடந்துசெல்வதற்கு அரிய பாலை வழியைக் கடந்து சென்ற நம் தலைவர் நம்மைக்காட்டிலும் சிறந்ததாகக் கருதிய பொருள் - (வேறு எத்தகையதோ?)

-------------------------------

 

#295 பாலை மாமூலனார்

நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப

குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின்

என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை

நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி

வேங்கை வென்ற வெருவரு பணை தோள்               5

ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி

பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும்

கல் உடை அதர கானம் நீந்தி

கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்

உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து          10

அகல் இடம் குழித்த அகல் வாய் கூவல்

ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்

புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து

நடை அரும் கானம் விலங்கி நோன் சிலை

தொடை அமை பகழி துவன்று நிலை வடுகர்                    15

பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும்

மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்

பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ

மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும்

அம் கலுழ் கொண்ட செம் கடை மழை கண்                    20

மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின்

அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே

பொருள் -  நிலமானது நீர் இல்லாமல் போய், ஆழமான சுனைகள் வறண்டுபோகவும் மலைகளின் உச்சிகள் பொடிந்து உதிரவும் கடுமையான வெயில் சுடுவதால் வெப்பம் மிக்க மூங்கில்கள் பட்டுப்போன அகன்ற இடங்களில், நிலாப்போல வெண்ணிறமுடைய கொம்பினில் தன் பெரும் கையை அணைத்துக்கொண்டு, வேங்கைப்புலியை வென்ற அச்சம் வரும் பருத்த தோளையுடைய  உயர்ந்த களிறு வருந்தி தன் மதநீர் ஓய்ந்து பல மரங்களையுடைய ஒரு பக்கத்தில் தன் பெண்யானையோடு தங்கிக்கிடக்கும் கற்களையுடைய வழிகளையுடைய காட்டினைக் கடந்து, கடல் நீரால் விளைந்த உப்பை வண்டியிலேற்றிச் சென்று விற்கும் கூட்டமான உப்பு வணிகர் வண்டியை இழுத்து வருந்திய காளைகள் மூச்சுவாங்கத் தங்கி, கட்டாந்தரையை இடித்து அகன்ற இடத்தில் தோண்டிய அகன்ற வாயையுடைய கிணறு வழியேசெல்லும் புதியவர்களின் தளர்ச்சி நீங்க ஊறும் இடமாகிய ஒலிக்கின்ற அழகிய கழல் அணிந்த காலையுடைய புல்லி என்பவனின் வேங்கடமலையைச் சார்ந்த நடந்து செல்லக் கடினமான காட்டினைக் கடந்து, வலிய வில்லில் தொடுத்தலையுடைய அம்புகளையுடையவராய், ஓரிடத்தில் செறிந்து வாழும் தன்மையுள்ள வடுகர் கள்ளினை நிறைய உண்ட களிப்பினையுடையவராய் செருக்கு மிகுந்து ஆரவாரிக்கும் வேற்றுமொழி வழங்கும் நாட்டினைக் கடந்து சென்றவரென்றாலும் இப்பொழுது நீ இழந்துள்ள குற்றமற்ற சிறந்த அழகினைத் திரும்ப வந்து தந்தருள்வார் மாரிக்காலத்தில் பூக்கும் பிச்சிப்பூவின் நனைந்த இதழைப் போன்ற அழகு ஒழுகும் சிவந்த கடைப்பகுதியையுடைய குளிர்ச்சியான கண்களையும்  மணம் கமழும் கூந்தலையும் உடைய பெண்ணே! உன் அழகு நிலைபெற்ற பெரிய  மென்மையான தோளின் - (அழகினைத் திரும்ப வந்து தந்தருள்வார்)

--------------------------------

 

#393 பாலை மாமூலனார்

கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி

வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து

ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய

முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு

கவை கதிர் வரகின் கால் தொகு பொங்கழி               5

கவட்டு அடி பொருத பல் சினை உதிர்வை

அகன் கண் பாறை செம்-வயின் தெறீஇ

வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர்

பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப

சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்          10

தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி

உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை

ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவா

களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி

இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்                   15

குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம்

மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும்

நிரை பல குழீஇய நெடுமொழி புல்லி

தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர்

வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர்            20

நீடலர் வாழி தோழி தோடு கொள்

உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப

தகரம் மண்ணிய தண் நறு முச்சி

புகர் இல் குவளை போதொடு தெரி இதழ்

வேனில் அதிரல் வேய்ந்த நின்                          25

ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே

பொருள் -  உயர்ந்த சிகரங்களைக்கொண்ட பாறைகள் நிறைந்த குன்றுகள் பலவற்றைக் கடந்துசென்று வேற்றுநாட்டை எண்ணிச்செல்லும் பொருள் தேடும் முயற்சியையுடைய உள்ளத்தினையுடைய வழிப்போக்கராகிய புதியவர்களின் வருத்துகின்ற பசியைப் போக்குவதற்காக, புதிய தினைப்புனத்தில் தழைத்து வளர்ந்துள்ள நீண்ட இதழையுடைய கிளைத்துப்பிரிந்த கதிர்களையுடைய வரகின் தட்டைகளைத் தொகுத்த மிகுந்த தாளையுடைய  பொலியில் மாடுகளின் பிளவுபட்ட குளம்புகளால் நன்கு துவைக்கப்பட்ட பல கிளைகளிலிருந்து உதிர்ந்த வரகினை அகன்ற இடத்தையுடைய பாறையில் சமமான இடத்தில் குவித்துவைத்து திரைந்த கோடுகளையும், பருத்த தோள்களையும் நீண்ட காதுகளையும் உடைய தாய்மார் பண்ணைக்கீரையின் வெண்மையான பழத்தின் விதையைப் போல திரிகையால் திரித்து உமியைப் போக்கி, சுளகினால் கொழித்த வெண்மையான அரிசியை சிறந்த பூண் அமைந்த உலக்கையினால் மாற்றிமாற்றிக் குத்தி உரலில் இட்டு தீட்டிய, உரலின் குழி நிறைந்த அரிசியை அவ்விடத்திலுள்ள பெரிய சுனையின் நீரோடு முகந்து களிமண்ணால் செய்த பானையைக் கற்களால் செய்த அடுப்பில் ஏற்றிவைத்து பூங்கொத்துக்கள் செறிந்த கொன்றையின் நிறைந்த பூந்தாது போல இடையர்கள் புழுக்கி ஆக்கிய பொங்கி மலர்ந்த சோற்றை கொழுத்த நல்ல பசுவின் பாலுடன் சேர்த்து அளிக்கும் பசுக்கூட்டங்கள் பல்வேறு இடங்களில் கூடிக்கிடக்கும் நீண்ட புகழையுடைய புல்லி என்னும் அரசனுடைய தேன் கூடுகள் தொங்குகின்ற உயர்ந்த மலையினையுடைய நல்ல நாட்டுக்கு அப்பால் உள்ள வேங்கட மலையைக் கடந்து சென்றிருக்கிறாரென்றாலும், அந்த இடத்தில் அவர் நீண்ட நாள் தங்கியிருக்கமாட்டார், வாழ்க, தோழியே! கூட்டமாய் இருக்கும் அழகு பொருந்திய மயில்களின் தழைத்த தோகையினைப் போன்ற, மயிர்ச்சாந்து பூசப்பெற்ற குளிர்ச்சியான மணங்கமழும் கூந்தலில் களங்கமில்லாத குவளைப்பூவுடன், ஆராய்ந்தெடுத்த இதழ்களையுடைய வேனில்காலத்து காட்டுமல்லிகைப் பூவையும் சூடியுள்ள உன்னுடன் இன்பம் மிகுதியாகக் கூடியிருந்தபின் கொள்ளும் இனிய தூக்கத்தை மறந்து - (நீண்ட நாள் தங்கியிருக்கமாட்டார்)

---------------------------------

 

# 381 புறத்திணை நன்னகனாரி

ஊனும் ஊணும் முனையின் இனிது என

பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும்

அளவுபு கலந்து மெல்லிது பருகி

விருந்து_உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக

சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என   5

யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது

அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி

துணரியது கொளாஅ ஆகி பழம் ஊழ்த்து

பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ்

பெயல் பெய்து அன்ன செல்வத்து ஆங்கண்        10

ஈயா மன்னர் புறங்கடை தோன்றி

சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி

ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி

விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின்

இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு          15

தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்

இரு நிலம் கூலம் பாற கோடை

வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை

சேயை ஆயினும் இவணை ஆயினும்

இதன் கொண்டு அறிநை வாழியோ கிணைவ             20

சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை

ஒலி வெள் அருவி வேங்கட நாடன்

உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும்

அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று

இரும் கோள் ஈரா பூட்கை                 25

கரும்பனூரன் காதல் மகனே

 பொருள் -  கறியும் சோறும் தெவிட்டி வெறுப்பு ஏற்பட்டதால், இனியவை என்று பால் கலந்து செய்தனவும், வெல்லப்பாகு கலந்து செய்தனவும் ஆகியவற்றைத் தக்க அளவுடன் கலந்து, மென்மையுண்டாகக் கரைத்துக் குடித்து விருந்தினராகப் பசியைப் போக்கிப் பலநாட்கள் இங்கு இருந்தோமாக, 'பெருமானே! விழாக்கள் நடைபெரும் எம்முடைய நாட்டிற்குச் செல்ல விரும்புகிறோம்' என்று நாங்கள் அவனுக்கு அறிவித்தோமாக, தான் மிக்க அன்புடையவனாதலால் எங்களைப் பிரிவதற்கு அஞ்சி, 'கொத்துக் கொத்தாகப் பூத்து, எவராலும் கொள்ளப்படாததால், பழுத்துக் கனிந்து, பயன்படுத்த முடியாதபடி, முட்கள் கலந்த கொடிகள் பின்னிக் கிடக்கும் முதிய பாழிடத்தில் மழை பெய்தாற் போன்ற, செல்வம் இருந்தும் இரவலர்க்கு ஈயாத மன்னர்களின் முற்றத்தில் நின்று, துண்டித்த வார்களால் கட்டப்பட்ட, சிதைந்த வெளிப்பக்கத்தையுடைய தடாரிப்பறையைக் ஊன் பொருக்கு ஒட்டிக் கொண்டிருக்கும் தோல் பொருந்திய தெளிந்த முகப்பை அறைந்து, விரலால் நொடிக்கும் நொடிப்பின் விசையிலும் மேம்பட்ட குற்றமில்லாமல் தாளமிட்டுப் பாடும் பாட்டால் வறுமையைப் போக்க எப்படி முடியும்? ஆதரவின்றி வறுமையால் தனிமையில் வருந்தி, வள்ளல்களைத் தேடித் திரிந்து வருந்துவதையும் யாம் போக்குவோம்.  அதனால், இப்பெரிய உலகம் தானிய வகைகளின் விளைச்சல் இல்லாமல் இருக்கும் வறண்ட கோடைக்காலம் வருகின்ற மழை முகிலின் முழக்கத்து ஒலிக்கு நீங்கிய பிறகு, நீ தொலைவில் உள்ள நாட்டில் இருந்தாலும், இந்த நாட்டிலேயே இருந்தாலும் இதை அறிந்து கொள்வாயாக. கிணைவனே! நீ வாழ்க! சிறியதும் பெரியதும் எண்ணி ஒரு வழி நடப்பாயாக' என்று சொன்னான் எங்கள் தந்தை, ஒலிக்கின்ற வெண்ணிறமான அருவியையுடைய வேங்கட நாட்டுக்கு உரியவன்; பெரியோரானாலும் சிறியோரானாலும் ஒருகரையிலிருந்து இன்னொருகரைக்கு மாறிமாறிக் கொண்டுசேர்க்கும் அறவழியில் இயங்கும் தெப்பம் போல், மறவாமல் பெரிய குறிக்கோளையும், எவராலும் மாற்றமுடியாத கொள்கையையுமுடைய கரும்பனூர் கிழானின் அன்புக்குரிய மகன். 

---------------------------------

# 385 கல்லாடனார்

வெள்ளி தோன்ற புள்ளு குரல் இயம்ப

புலரி விடியல் பகடு பல வாழ்த்தி

தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை

அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி

வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை          5

நிலம் தின சிதைந்த சிதாஅர் களைந்து

வெளியது உடீஇ என் பசி களைந்தோனே

காவிரி அணையும் தாழ் நீர் படப்பை

நெல் விளை கழனி அம்பர் கிழவோன்

நல் அருவந்தை வாழியர் புல்லிய                 10

வேங்கட விறல் வரைப்பட்ட

ஓங்கல் வானத்து உறையினும் பலவே

பொருள் -  வானத்தில் வெள்ளி முளைக்க, பறவைகளின் குரல் இசையாய் ஒலிக்க, இரவுப்பொழுது புலரும் விடியற்காலத்தில், பலவாகிய எருதுகளைப் பலவாறு வாழ்த்தி, அவன் மனை முற்றத்தில் நான் தோன்றவும் இல்லை, பிறர் மனையின் முற்றத்தில் நின்று கொட்டிய அகன்ற கண்ணையுடைய தடாரிப் பறையின் ஒலியைக் கேட்டு அருள்கூர்ந்து நான்  வறுமையிலிருந்து விடுபட விரும்பி, என் இடையில் இருந்த மண் தின்னும்படி பழைதாய்க் கிழிந்திருந்த கந்தைத் துணியை அகற்றி, வெண்ணிற ஆடையை உடுப்பித்து, என் பசியைப் போக்கினான்; காவிரி ஆறு பாயும் தாழ்ந்த நிலத்தில் உள்ள தோட்டங்களையும், நெல்விளையும் வயல்களையுமுடைய அம்பர் என்னும் ஊர்க்கு உரியவன் நல்ல அருவந்தை என்பவன் வாழ்க! புல்லி என்பவனுடைய வலிய வேங்கட மலையில் மேல் விழுந்த உயர்ந்த வானத்து மழைத்துளிகளைவிடப் பல ஆண்டுகள் - (வாழ்க)

--------------------------------------

 

# 389 கள்ளில் ஆத்திரையனார்

நீர் நுங்கின் கண் வலிப்ப

கான வேம்பின் காய் திரங்க

கயம் களியும் கோடை ஆயினும்

ஏலா வெண்பொன் போகு_உறு_காலை

எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன்             5

என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை

இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்

செலினே காணா வழியனும் அல்லன்

புன் தலை மட பிடி இனைய கன்று தந்து

குன்றக நல் ஊர் மன்றத்து பிணிக்கும்            10

கல் இழி அருவி வேங்கடம் கிழவோன்

செல்வு_உழி எழாஅ நல் ஏர் முதியன்

ஆதனுங்கன் போல நீயும்

பசித்த ஒக்கல் பழங்கண் வீட

வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும           15

ஐது அகல் அல்குல் மகளிர்

நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே

பொருள் -  நீருடைய நுங்கு காய்ந்து கல்லைப் போலக் கடினமானாலும், காட்டு வேம்பின் காய் பழுக்காமல் சுருங்கி உலர்ந்து போனாலும், நீர்நிலைகள் வற்றிச் சேறு காய்ந்த கோடைக்காலமானாலும் வழக்கமான பாதையில் செல்ல இயலாத வெள்ளி தெற்கே செல்லும் வறுமைக் காலமானாலும், 'எம்மையும் உன் நினைவில் கொள்வாயாக, இளைய பொருநனே' என்று கூறிப் பெரும்புகழ் வாய்ந்த நெடுந்தகை எனக்குப் பெருமளவில் பொருள்களை  அளித்தான். ,நான் இன்று சென்று காணும் இடத்தில் அவன் இல்லை; சென்றால் காண முடியாதவனும் அல்லன்.  சிறிய தலையையுடைய பெண்யானைகள் வருந்த, அவற்றின் கன்றுகளை கொண்டுவந்து குன்றுகளுடைய நல்ல ஊரின் மன்றத்தில் கட்டிவைக்கும் கற்களினூடே பாயும் அருவிகளையுடைய வேங்கட மலைக்கு உரியவனான மனம் போன போக்கில் போகாத நல்லேர் முதியனே! உன் முன்னோனாகிய ஆதனுங்கனைப் போல், நீயும் பசியால் வாடும் என் சுற்றத்தாருடைய துன்பம் நீங்கச் சிறப்பமைந்த நல்ல அணிகலன்களை வழங்குவாயாக! பெருமானே! மெல்லிதாய் அகன்ற அல்குலையுடைய உன் மகளிர் உன் பெரிய மனையின் முற்றத்தில் என்றும் நெய்தற்பறையைக் (இரங்கல் ஒலியைக்) கேளாதிருப்பார்களாக.

--------------------------------------------

 

# 391 கல்லாடனார்

தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும்

விண்டு அனைய விண் தோய் பிறங்கல்

முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ் வர

பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற

திருந்தா மூரி பரந்து பட கெண்டி                 5

அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்

வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என

ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல்

தீர்கை விடுக்கும் பண்பின முதுகுடி

நனம் தலை மூதூர் ---------- வினவலின்            10

முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்

அளியன் ஆகலின் பொருநன் இவன் என

நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற

காண்கு வந்திசின் பெரும மாண் தக

இரு நீர் பெரும் கழி நுழை மீன் அருந்தும்        15

துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும்

ததைந்த புன்னை செழு நகர் வரைப்பின்

நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு

இன் துயில் பெறுக-தில் நீயே வளம் சால்

துளி பதன் அறிந்து பொழிய               20

வேலி ஆயிரம் விளைக நின் வயலே

பொருள் -  குளிர்ந்த மழைத்துளிகளை மிகப் பெய்து மேகங்கள் முழங்கும் மலை போல வானளாவிய குவியலாய் உச்சியுண்டாக உயர்ந்ததாகக் குவித்த நெல்லாகிய, மகிழ்ச்சி மிக எருதுகளின் உழைப்பால் உண்டாகிய பெரிய வளத்தை வாழ்த்திப் பெற்றதை திருத்தம் இல்லாத ஊன்கறியைச் சிறுசிறு துண்டுகளாகப் பரக்குமாறு துண்டித்து கள் உண்போர் உண்டு மிகவும் இன்புறும் வேங்கட நாடாகிய வடநாடு வறுமையுற்றததினால் இங்கே வந்து தங்கின என் பெரிய சுற்றத்தார்,  இந்நாட்டை விட்டு நீங்குவதைக் கைவிடும் இயல்புடைய பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தையுடைய மூதூரில் .............. கேட்டலால் 'இவன் முன்பே இங்கு வந்தவன்; பொருளில்லாதவன். மேலும் இரங்கத்தக்கவன், எனவே பரிசில் கொடுக்கத்தக்க பொருநன் இவன்' என்று உன் உள்ளத்தை அறிந்தவர்கள் என் நிலைமையினை நன்குணர்ந்து எனக்கு அறிவிக்க, நான் உன்னைக் காண வந்தேன், பெருமானே! சிறப்பு மிக கரிய நீர் மிகுந்த பெரிய கழியில் நுழைமீன்களைத் தேடி உண்ணும் செறிந்த சிறகுகளையுடைய அழகிய புதா என்னும் பறவைகள் தங்கும் அடர்ந்த புன்னைமரங்களையுடைய செழுமையான உன் பெரிய அரண்மனையில், உன்மீது காதல் கொண்ட, உன்னால் விரும்பப்பட்ட, உன் மனைவியுடன் நீ இனிதான உறக்கத்தைப் பெறுவாயாக; நெல்வளம் பெருகுமாறு தகுந்த காலத்தில் மழை பொழிந்து உன் நாட்டில் வேலிக்கு ஆயிரம் கலம் நெல் விளைவதாக.

---------------------------------------

கம்பராமாயணம்

அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ - கிட்:13 26/4
இருந்து அதின் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை - கிட்:15 33/4

வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும்
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு
புடை சுற்றும் துணை இன்றி புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ  (கிட்:13 26/4)

அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள்
இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார் இடையர் மாதர்
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி
இருந்து அதின் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை  (கிட்:15 33/4)


பார்வை -  சுப்புரெட்டியார் ந.- வடவேங்கடமும் திருவேங்கடமும்,வேங்கடம் வெளியீடுகள், அண்ணாநகர், சென்னை - 600 040.முதற்பதிப்பு - மே 1992.28.