வியாழன், 21 ஜூன், 2018

பரந்த பாரத தேசத்தை ஆண்ட பாண்டியன்

பரந்த பாரத தேசத்தை ஆண்ட பாண்டியன்

இந்தியா என்பது இன்று நேற்று தோன்றிய தேசமல்ல.
“ வென்றி யெல்லாம் வென்றகத்தடக்கிய
தண்டா வீகைத் தகைமாண் குடுமி ” ஆண்ட பாரத தேசம் இது.


வடக்கு எல்லை
வடாஅது பனிபடு நெடுவரை 
வடாஅது = வடக்கே 
பனிபடு நெடுவரை = இமயமலை 
வடக்கும் = வடக்காக உள்ளது, வட எல்லையாகவும்,

தெற்கு எல்லை
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
தெனா அது = தெற்கே 
உருகெழு = உரு எழு =  எழுந்த மலை (குமரியின் தெற்கே உள்ள மலை, கபாடபுரம்)
குமரியின் தெற்கும் = குமரிக்கும் தெற்கே (தென்மதுரையான மொரிசியசு தீவு) எல்லையாகவும்,

கிழக்கு எல்லை
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குணாஅது = கிழக்கே
கரைபொரு = கரையில் பொருந்தித்
தொடுகடல் = தொட்டுக் கொண்டிருக்கும் கடல்
குணக்கும் = கிழக்கு எல்லையாகவும்,

மேற்கு எல்லை
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும்
குடாஅது = மேற்கே
தொன்று முதிர் = தொன்மை முதிர்ந்த (மிகவும் பழமையான)
பௌத்தின் = கடலுக்கும்  
குடக்கும் = மேற்கே (ஆப்பிரிக்காவும்)

கொண்ட பரந்த பெரு பாரததேசத்தைத் குடுமி என்ற தமிழன் ஆண்டுள்ளான்.
-------------------------------------------------

புறநானூறு - 6.
பாடியவர்:காரிகிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும்
கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேல
தானிலை யுலகத் தானு மானா
துருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம்
பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்ப்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதி னேவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்
தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வம் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே
வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே
செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை
மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே
ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத்தடக்கிய
தண்டா வீகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்

மன்னிய பெருமநீ நிலமிசை யானே.

நன்றி 
http://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=6&file=l1281a24

6. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

     இப் பாண்டியன் யாகசாலைகள் பல நிறுவி யாகங்கள் செய்தவன் 
என   இவன்   பெயராலும்  நெட்டிமையார்  பாட்டாலும்  அறியலாம். 
இவனை வாழ்த்தும் சான்றோர் “பஃறுளியாற்று மணலினும் பல யாண்டு 
வாழ்க” என  வாழ்த்துதலால்,  இவன் குமரிக்  கோடும் பஃறுளியாறும் 
கடல் கொள்ளப்படுதற்கு  முன்பே நம் தமிழகத்தில் இருந்தவனென்பது 
பெறப்படுகிறது. இப்பாண்டியனைப்  பாடும்  காரிகிழார்  காரியென்னும்
ஊரினர்: இவ்வூர் தொண்டை நாட்டிலுள்ள தென்றும், இப்போது இதற்கு
இராமகிரியென்று பெயர் வழங்குகிற தென்றும் கூறுப.

     இப் பாட்டின்கண்,  ஆசிரியர் காரிகிழார் பாண்டியனை நோக்கி, 
“வேந்தே, நினக்கு எல்லா வுலகினும் உருவும் புகழும் உண்டாகுக; நின் 
கோல்  ஒருதிறம்  பற்றாது  நடுநிலை  நிற்க; நின் படைகுடி முதலியன 
சிறக்க;    பகைப்புலத்து    வென்ற   நன்கலங்களைப்   பரிசிலர்க்கு 
வழங்கியுயர்வதோடு முக்கட்செல்வம் நகர்வலம் செய்தற்கண் நின் குடை 
பணிக;  நான்மறை  முனிவர்  கைகவித்து வாழ்த்துங்கால் நின் சென்னி 
தாழ்க;  பகைப்புலத்துச்  சுடுபுகையால்  நின்  கண்ணி  வாடுக; மகளிர் 
கூட்டத்திற்  சினமின்றி  மெல்லியனாகுக;  மதியமும்  ஞாயிறும் போல 
இந் நிலமிசை மன்னுவாயாக” எனச் சொல்லி வாழ்த்துகின்றார்.

  வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும்
5. கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டின்
  நீர்நிலை நிவப்பின் கீழும் மேல
தானிலை யுலகத் தானு மானா
துருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம்
10. பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க
  செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்ப்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதி னேவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்
15. தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
  பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வம் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
20. நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே
  வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே
செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை
மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே
25. ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத்தடக்கிய
தண்டா வீகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெருமநீ நிலமிசை யானே. (6)
     திணையும் துறையு மவை; துறை - வாழ்த்தியலுமாம். 
பாண்டியன பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் 
பாடியது.

     உரை : வடாஅது பனிபடு  நெடுவரை  வடக்கும்  - வடக்கின் 
கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்; தெனாஅது 
உருகெழு  குமரியின்  தெற்கும் -  தெற்கின்  கண்ணது  உட்குந் 
திறம்பொருந்திய கன்னியாற்றின்  தெற்கும்; குணாஅது கரை பொரு 
தொடு கடற் குணக்கும் -கீழ்க்கண்ணது கரையைப்  பொருகின்ற 
சகரரால்  தோண்டப்பட்ட சாகரத்தின்  கிழக்கும்;   குடாஅது 
தொன்று   முதிர்    பௌவத்தின்   குடக்கும் - மேல்கண்ணது 
பழையதாய் முதிர்ந்த  கடலின்  மேற்கும்;  கீழது -  கீழதாகிய; 
முப்புணர்  அடுக்கிய முறை முதற் கட்டின் -நிலமும் ஆகாயமும் 
சுவர்க்கமுமென  மூன்றுங்  கூடிய  புணர்ச்சியாக அடுக்கப்பட்ட 
அடைவின்கண்  முதற்கட்டாகிய;   நீர்நிலை நிவப்பின் கீழும் - 
நீர்நிலைக்கண் ஓங்கிய  நிலத்தின்  கீழும்; மேலது  ஆன்நிலை  
உலகத்தானும்  -   மேலதாகிய   கோ லோகத்தின்கண்ணும்; 
ஆனாது - அமையாது; உருவும் புகழும்ஆகி  - உட்கும்  புகழுமாக; 
விரிசீர்த்  தெரிகோல் ஞமன்ன் போல -   பரந்த   அளவையுடைய 
பொருள்களை  ஆராயும் துலாக்கோலின்கட் சமன்வாய் போல; ஒரு 
திறம் பற்றல் இலியர் - ஒருபக்கம்  கோடாதொழிக; நின்  திறம் 
சிறக்க - நினது படை குடி முதலாகிய கூறுபாடுகள்  சிறக்க;  
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர்  தேஎத்து  -  போர்  செய்தற்கு 
மாறுபட்ட பகைவர் தேயத்தின்  கண்ணே;  கடற்படை  குளிப்ப 
மண்டி -  நினது கடல்போலும்  படை  மேல்  விழுந்து உள்புக 
மிக்குச் சென்று; அடர்ப்புகர்ச்  சிறுகண்  யானை  செவ்விதின் ஏவி 
- அடர்ந்த புகரினையுடைய சிறுகண் யானையைத் தடையின்றி நேரே 
யேவி; பாசவல்  படப்பை  ஆரெயில்  பல  தந்து - பசிய 
விளைநிலப்  பக்கத்தையுடைய அரிய மதிலரண்  பலவற்றையுங் 
கொண்டு; அவ்  வெயில்  கொண்ட  செய்வுறு   நன்கலம்  -
அவ்வரணின்கட்   கொள்ளப்பட்ட  அழகுபடச்  செய்த   நல்ல 
அணிகலங்களை; பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி - பரிசிலர்க்கு 
வரிசையின் வழங்கி; நின் குடை - நினது கொற்றக்குடை; முனிவர் 
முக்கட் செல்வம் நகர் வலம் செயற்கு - முனிவராற் பரவப்படும் 
மூன்று திருநயனத்தையுடைய  செல்வரது  கோயிலை வலம் 
வருவதற்கு; பணியியர்  -  தாழ்க;  பெரும-;  நின்  சென்னி - 
நினது முடி; சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை யெதிரே - மிக்க 
நான்கு வேதத்தினையுடைய   அந்தணர்   நின்னை  நீடு வாழ்கவென்
றெடுத்தகையின் முன்னே; இறைஞ்சுக -வணங்குக; இறைவ-; நின் கண்ணி
- நினது கண்ணி; ஒன்னார் நாடு சுடு கமழ்புகை எறித்தலான் வாடுக -நின்
பகைவரது  நாட்டைச் சுடும்   பல  மணநாறும் புகையுறைத்தலான்
வாடுக;  நின் வெகுளி -  நினது சினம்; வாலிழை மங்கையர் துனித்த
வாண்முகத் தெதிரே செலியர் - வெளிய  முத்தாரத்தையுடைய  நின்  
தேவியருடைய துனித்த ஒளியையுடைய முகத்தின் முன்னர்த் தணிக; 
வென்று வென்றி யெல்லாம்  அகத்தடங்கிய -  வென்று  வென்றி 
முழுதையும் வியவாது  நின்மனத்தே  உட்கொண்ட;  தண்டா  ஈகை 
தகை மாண்   குடுமி -   தணியாத   வண்மையையுடைய    தகுதி 
மாட்சிமைப்பட்ட  குடுமி;  தண்  கதிர்  மதியம் போலவும் -குளிர்ந்த 
சுடரையுடைய திங்களை யொப்பவும்; தெறு சுடர்ஒண் கதிர்  ஞாயிறு 
போலவும் - சுடுகின்ற ஒளிபொருந்திய ஒள்ளிய  கதிரையுடைய 
ஞாயிற்றை  யொப்பவும்;  பெரும-;  மன்னிய - நிலை பெறுவாயாக; 
நீ நிலமிசையானே - நீ உலகத்தின்மேல் எ-று.

     வடாஅ தென்னும்  முற்றுவினைக்குறிப்பைப்  பெயர்ப்படுத்தி, பனி படு 
நெடுவரையொடு பண்பொட்டாக்கி, அதன் வடக்கு மென்க. ஒழிந்தனவும் 
அன்ன. “மேலது” துறக்கத்தின் மேலுமென்பார்,  அதற்கு  மேலதாகிய 
“ஆனிலை  யுலகத்தானு”  மென்றார். உரு வென்பது இவனாணையாற் பிற 
ரஞ்சும் உட்குடைமை.  அத்தையும் ஆங்கவும் அசைநிலை.

     குடுமி, பெரும, உருவும் புகழும் ஆக; ஒருதிறம் பற்றா தொழிக;நிற்றிறம் 
சிறக்க;  பணிக;  இறைஞ்சுக;  வாடுக;  செல்லுக;  பரிசின் மாக்கட்கு  நல்கி, 
மதியம் போலவும், ஞாயிறு போலவும், பெரும, நீ நிலத்தின்   மிசை மன்னுக 
வெனக்கூட்டி   வினைமுடிவு  செய்க.

    தேஎத்தென்பதனுள், அத்தை அசைநிலையாக்கித் தேயம்கடற்படைக்குள்ளே
குளிப்ப வென்றுரைப்பாருமுளர். ஞமன், யமனெனினுமமையும் அடற்புகர்ச்
சிறுகண் யானை யென்று பாடமோதி, கொலையைச் செய்யும் புகரையுடைய
யானை யெனினு மமையும். ஆகி, ஆகவெனத் திரிக்க; ஆகி  யென்பதனைத்
திரியாது நிற்றிறஞ் சிறக்க வென்பதனோ டியைத் துரைப்பாரு முளர். நின்றிறம்,
நிற்றிறம் என வலிந்து நின்றது.

     நகர்வலஞ்  செயற்குப்  பணியியரென  வீடும், ஏந்துகை யெதிர் 
இறைஞ்சுக   வென  அறமும், புகையெறித்தலான்   வாடுகவெனப்பொருளும்,  
முகத்தெதிர்  தணிகவென இன்பமும்  கூறியவாறாயிற்று.  இஃது  இவ்வாறு 
செய்கவென அரசியல்  கூறலிற்  செவியறிவுறூஉம், மதியமும்   ஞாயிறும் 
போல  மன்னுக  வென்றமையான்  வாழ்த்தியலுமாயிற்று.

     விளக்கம்:வடக்கின் கண்ணது வடாஅது,தெற்கின் கண்ணது தெனாஅது, 
குணக்கின் கண்ணது குணா அது,  குடக்கின்  கண்ணது   குடாஅது என 
வந்தன.“கண்ணென்  வேற்றுமை    நிலத்தினானும்”  (தொல். சொல்.213) 
என்பதனால், இவை யாவும், ஏழாம்  வேற்றுமைப் பொருண்மைக் கண்வந்த 
வினைக்குறிப்புமுற்று.  இவை  பெயராய், வடக்கின்கண்ணதாகிய
நெடுவரை  யெனவும்,  தெற்கின்கண்ணதாகிய   குமரியெனவும், 
குணக்கின்கண்ணதாகிய  தொடுகடலெனவும்,  குடக்கின்கண்ணதாகிய 
பௌவமெனவும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகையாயின. இதனால், 
இவ்வுரைகாரர்,    “வடாதென்னும்     முற்றுவினைக்    குறிப்பைப் 
பெயர்ப்படுத்திப் பனி படு நெடுவரையொடு பண்பொட்டாக்கி,  அதன் 
வடக்குமென்க”  என்றார்.  பண்பொட்டென்றது.   இருபெயரொட்டுப் 
பண்புத்தொகை.     தொடுகடல்,     தோண்டப்பட்ட    கடலெனப் 
பொருள்படுதலின்,  இதற்கேற்ப,  “சகரரால் தோண்டப்பட்ட சாகரம்” 
என்று  உரைத்தார்.  சகரர்  தோண்டியது   சாகரமாயிற்று.   கீழைக் 
கடலினும் மேலைக் கடல் பழைதாதலால், அதனைத்  “தொன்றுமுதிர் 
பௌவம்”    என்றார்.    இப்பாண்டியன்    காலத்தில்   தெற்கில் 
கடலில்லையாதலால்,   “தெனாஅது  உருகெழு  குமரி” யென்றாராக, 
உரைகாரரும் “தெற்கின் கண்ணது உட்குந்திறம்பொருந்திய கன்னியா” 
றென்றுரை  கூறினார்.  மேலது  என்றது,  மேலுள்ள துறக்க முதலிய 
உலகுகளையெல்லாம்  அகப்படுத்தி  நிற்குமாயினும், எல்லாவுலகிலும் 
மேலதாகிய  ஆனிலையுலகிற்காயிற்று.  “உருவுட்   காகும்” (தொல். 
சொல்.  300)  என்பவாகலின்,  அவ்வுட்காவது  “ஆணையாற் பிறர் 
அஞ்சும் உட்குடைமை” என்றார். பணியியரத்தை, செலியரத்தை என
நின்ற அத்தையும், ஆங்க வென்பதும் அசை நிலை. தேஎம் என்பது 
அத்துச்   சாரியை  பெற்றுத்  “தேஎத்து”  என நிற்கும். “தெவ்வர் 
தேஎத்துக்  கடற்படை  குளிப்ப”  என்பதற்கு   இங்கே   கூறியது
போலவன்றி   வேறுரைத்தலு   முண்டு.    தேஎத்து    என்பதன் 
அத்துச்சாரியையை அசைநிலையாக்கி விலக்கி; தேஎம் என நிறுத்தி, 
தேஎம்  கடற்படைக்குள்ளே  குளிப்ப  (மூழ்க)  என்று   இயைத்து, 
பகைவரது  தேயம்  படையாகிய   கடலுக்குள்ளே   மூழ்க  என்று
பொருள்  கூறுபவரும்  உண்டு. உருவும் புகழுமாகி நிற்றிறம் சிறக்க 
என இயைத்து, உருவும், புகழும் உடையவாய் நின்படைகுடி முதலிய 
திறங்கள்     சிறக்க      வென்றுரைப்பவரு     முண்டென்பதை, 
“ஆகியென்பதைத் திரியாது நிற்றிறஞ் சிறக்க வென்பதனோ டியைத் 
துரைப்பாருமுளர்” என்றார்.

     அறமும்       பொருளும்          இன்பமும்     வீடும்
என்ற   நான்கும்   பெறுக   வென்றறிவுறுத்துவது    சான்றோர்க் 
கியல்பாதலால்,  காரிகிழாரும் பாண்டியற்குப்  பணிக வென்பதனால் 
வீடும், இறைஞ்சுக  வென்பதனால்   அறமும், வாடுக வென்பதனால் 
பொருளும், தணிக வென்பதனால் இன்பமும் கூறினார். அற முதலிய 
நான்கனுள் சான்றோரால்   தலையாய    தெனக்    கருதப்படுவது
வீடாதலின் அதனை முதலிலும், கடையாக வைத்து  ஒதுக்கப்படுவது 
இன்பமாதலின்  அதனை  இறுதியிலும்  ஓதினார்.  வீடு  பேற்றுக்கு 
வாயிலாதலின்   அறத்தை   வீட்டை   யடுத்தும்,    இன்பத்துக்கு
ஆக்கமாதலின் பொருளை அதனை   யடுத்தும்   வைத்துரைத்தார்.

     வேந்தன்பால் நடுவுநிலை இன்றாயின், படை குடி அமைச்சு
நட்பு முதலிய   உறுப்புக்கள்   சிறப்புற   நின்று    அரசியலுக்குத்
துணைசெய்யாவாதலால்   “ஒரு  திறம்  பற்றலிலியரோ”  என்றார். 

     அரசியலுக்கு உறுப்பாகிய படை குடி அமைச்சு முதலிய ஆறனையும் 
“திறம்”  என்றார்.  திறம் -கூறு.  ஞமன் -  துலாக்கோலின் நாக்கு.
பகைவர் மதிலைக் கவர்ந்து அவ்விடத்துப் பகைமன்னர் திறையாகத்
தரும்   செல்வத்தைக்கொணர்ந்து  பரிசிலர்க்   கீவது   பண்டைத் 
தமிழ்வேந்தர் மரபாதலால்,“ஆரெயில் பலதந்து அவ்வெயிற் கொண்ட 
செய்வுறு நன்கலம், பரிசில் மாக்கட்கு நல்கி” என்றார். “பலர் புறங்
கண்டவர்  அருங்கலந்  தரீஇப், புலவோர்க்குச் சுரக்கு மவன்  ஈகை 
மாரியும்” (மலைபடு.71-2) என்று பிறரும் கூறுதல் காண்க. பரிசிலர்க்கு 
வழங்கு  மிடத்தும்  பொதுவுற  வழங்காது  பரிசிலரது  தகுதியறிந்து 
அதற்கேற்ப  வழங்குதல்  வேண்டுமென்பதை,  “வரிசையின்  நல்கி”
என்றார்.   “பொது  நோக்கான்   வேந்தன்   வரிசையா   நோக்கி, 
அதுநோக்கி  வாழ்வார்  பலர்” (குறள்.528) என்று சான்றோர் கூறுப. 
மகளி   ரூடுமிடத்துச்   சிறிது    சினம்   நிகழினும்,   ஊடியவரை 
உணர்த்துதற்கண் கருத்தைச் செலுத்தாது  அவரை   வாடப்பண்ணிக் 
காதலின்பத்தைக்  கெடுக்குமாதலால்,  “செலியரத்தை  நின் வெகுளி” 
என்றார்.  “ஊடி  யவரை யுணராமை வாடிய, வள்ளி முதலரிந் தற்று” 
(1304) என்பது தமிழ்மறை. “நான்மறை  முனிவர்  ஏந்துகை  யெதிரே 
இறைஞ்சுக பெரும” என்கின்றாராதலால், “முனிவர் முக்கட் செல்வர்” 
என்ற   விடத்து  “முனிவராற்  பரவப்படும் முக்கட் செல்வர்” என்று 
உரை கூறினார்; அவராற்பரவப் படும் அருந்தவச்  செல்வம்  முக்கட் 

செல்வரிடத் துண்டென்றறிக.

--------------------------------
குடகடலை ஏன் தொன்றுமுதிர் பௌவம் என்கிறார் புலவர்?

கங்கை பூமியில் இறங்குவதற்கு முன்பே இந்தியாவின் மேற்கே உள்ள அரபிக்கடலானது ஓர் நன்னீர்க்கடலாக இருந்திருக்க வேண்டும். கங்கை பூமியில் இறங்கியதால் பாதிப்படையாத ஓர் கடற்பகுதியாக இந்த முதிர்பௌவம் இன்றும் இருக்க வேண்டும்.
என்பது கங்காபுராணத்தின் அடிப்படையில் எனது யூகம்.
இந்தக் கடலின் உப்பின் அளவானது மற்றைய கடல்களின் உப்பின் அளவைவிடக் குறைவாக இருந்தால் எனது யூகம் சரியானதாக இருக்கலாம்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக