புதன், 4 நவம்பர், 2026

தீபாவளி - ஒரு புவியறிவியல் பார்வை

 தீபாவளி - ஒரு புவியறிவியல் பார்வை



தமிழர்களின் மரபுசார் பண்டிகைகளுள் தைப் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகள் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளன.  தீபாவளி என்பது நரகாசுரன் என்ற அசுரனை மகாவிஷ்ணு அழித்த கதையாகக் கூறப்படுகிறது. 

தமிழில் “வளி” என்றால் காற்று என்று பொருள்.  வளி மண்டலத்தில் தீ ஏற்றித்  தீபாவளித் திருநாளைக் கொண்டாடி வருகிறோம்.  தீபம் + ஆவளி = தீபாவளி - அதாவது, விளக்குகளின் வரிசை அல்லது தீப ஒளித் திருநாள் என்றுதம் பொருள் கூறுகின்றனர்.

தீபாவளி திருநாளில் சூரிய உதயத்திற்கு முன் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.   அன்றைய தினம் நல்லெண்ணெயில் திருமகளும், நீரில் கங்கா தேவியும் வசிப்பதாக ஐதீகம்.  புதிய ஆடைகளுக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அணிந்துகொள்ள வேண்டும்.  புத்தாடை அணிந்த பிறகு, தெய்வங்களையும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களையும் பெற்றோரையும் வணங்கி அவர்களின் ஆசியைப் பெற வேண்டும்.  வான வேடிக்கை நிறைந்த மத்தாப்பு கொளுத்துதல், வெடி வெடித்தல் என்று மிகவும் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளாக இருக்கும்.  மேலும் தீபாவளித் திருநாளில் எண்ணையில் பெரித்த விதம்விதமான பலகாரங்கள் மற்றும் இனிப்பு வகைகள்  என அதிகாலை முதல் இரவு வரை தீபாவளித் திருநாள் பாரம்பரியமாகக்  கொண்டாடப்பட்டு வருகிறது. 

தீபாவளிப் பண்டிகை இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நேபாளம்,  பிஜி (Fiji), ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் (UK), அமெரிக்கா (USA), கனடா, கயானா, சுரினாம் & டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் பல நாடுகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் பல நாடுகளில் தீபாவளிக்கு அரசுப் பொது விடுமுறையும் அளிக்கப்படுகிறது.

நாம் வாழும் பூமியின் மேற்பரப்பில் நிலமும் கடலும் உள்ளன.
பூமியின் மொத்தப் பரப்பளவு சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் (510 million sq km) ஆகும்.  இதில் கடல் பரப்பளவு (நீர்): சுமார் 361 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் (இது பூமியின் மொத்தப் பரப்பளவில் சுமார் 70.8% ஆகும்).  நிலப் பரப்பளவு: சுமார் 149 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் (இது பூமியின் மொத்தப் பரப்பளவில் சுமார் 29.2% ஆகும்).  பகீரதனின் பெருந் தவத்தால் (முயற்சியால்) இவ்வளவு தண்ணீரும் ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்து சேர்ந்துள்ளது.  ஆகாயத்திலிருந்து கங்கை பூமிக்கு இறங்கிய நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.   அதனால் தீபாவளி நன்னாளில் எல்லாத் தீர்த்தங்களிலும் கங்கை வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.

கங்கையை விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு கொண்டு வந்த பகீரதனின் குலத்தில் வந்தவன் இராமன் என்பதை "கங்கை மண்மிசைக் கொணர்ந்தோன் மைந்த" என்ற  கம்பராமாயணத்தின் 'அகலிகைப் படலத்தில்' இடம்பெற்றுள்ள 466-வது பாடல் வரி சுட்டிக்காட்டுகிறது.

தீபாவளி நாளின் சிறப்புக் கருத்தியே, தீபாவளி நன்னாளில், இராமன் சீதாதேவியைச் சிறைமீட்டு அயோத்தி திரும்பியுள்ளார். 

தீபாவளி நாளின் சிறப்புக் கருத்தியே பரதகண்டத்தில் வாழ்ந்த பல்வேறு அரசர்களும் வழிவழியாகத் தீபாவளித் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.   குளிக்காத, புத்தாடை உடுத்தாத, பலகாரங்களை விரும்பி உண்ணாத சமணரும் தீபாவளியைத் தங்களது திருநாளாகக் கூறிக் கொள்கின்றனர்.

தீபாவளித் திருநாள், ஆழமான புவியியல் மற்றும் அறிவியல் நிகழ்வுகளின் படிமக் குறியீடாகும்.  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் நிகழ்ந்த நிலச் சரிவுகள், கண்டப் பெயர்ச்சிகள்(Tectonic Plate Movements), கண்டப் பிளவுகள் மற்றும் பெருமலைத் தொடர்களின் தோற்றம் ஆகியவற்றை பண்டைய மனிதர்கள் புராண உருவகங்களாகப் பதிவு செய்துள்ளனர்.

  நாம் வாழும் “இந்த உலகமானது நிலம் (மண் / பூமி), நீர் (தண்ணீர்), தீ (நெருப்பு), வளி (காற்று), விசும்பு (ஆகாயம்/வானம்) ஆகிய ஐம்பெரும் பூதங்கள் (ஐம்பூதங்கள்) ஒன்றோடு ஒன்று கலந்து, பிணைந்து உருவாகியது” என்று தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள மரபியல் நூற்பா எண் 635  குறிப்பிடுகிறது.

தீபாவளிக் கதையின் பின்னணியில் புவியியல் நிகழ்வுகளாக, அசுரன் ஒருவன் உலகத்தின் பூமியைப் (நிலப் பரப்பைப்) பாய்போல் சுருட்டிக் கடலுக்குள் (நீருக்குள்) ஒழித்து வைத்தான்,  திருமால் பன்றி அவதாரம் எடுத்துக் கடலுக்குள் மூழ்கிய பூமியைக் காப்பாற்றினார் என்று புராணம் கூறுகிறது.

பூமிக்குக் கெடுதல் நடைபெற்ற நிகழ்வுகளை ஒரு “அசுர – அழிவு” நிகழ்வாகவும், அந்த அழிவில் இருந்து பூமியைக் காத்த நிகழ்வுகளை ஒரு “சுர (தெய்வ) – காத்தல்” நிகழ்வாகவும் உருவகப்படுத்தி, பூமியின் இன்றைய அமைப்பு எவ்வாறு உண்டாகியுள்ளது என்பதை “புவி அமைப்பியல் கோட்பாடுகள் மற்றும் புவியியல் மாற்றங்கள்”  இவற்றுடன் ஒப்பிட்டு இக்கட்டுரை ஆராய்கிறது.   

மேலும், தீபாவளிக் கதையின் பின்னணியில் புவியியல் நிகழ்வுகள் கூறப்படுகின்றன.  இந்தப் புவியியல் நிகழ்வுகளுக்குக் காரணமான சக்திகளை, இரண்யாட்சதன் தேவர்கள் ரிஷிகள் முனிவர்கள் மகாவிஷ்ணு வராக-அவதாரம் மற்றும் நரகாசுரன் ஆகிய கதாபாத்திரங்களாக உருவகம் செய்து இந்தக் கட்டுரை விளக்குகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக