எழுகடல் தெரு - பெயர்க்காரணம்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள தெருவிற்கு “அம்மன் சந்நிதி தெரு” என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள தெருவிற்குச் “சுவாமி சந்நிதி தெரு” என்ற பெயரில்லை. சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள தெருவிற்கு “எழுகடல்தெரு ” என்று பெயர் வைத்துள்ளனர்.
சுவாமிக்கு உரிய இடத்தில் சுவாமியின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எழுகடல்தெரு என்று கடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பெயர் வைத்துள்ளதர்கான காரணம் என்ன?
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள், தமிழகக் கடற்கரை ஊர்களைச் சுனாமி தாக்கி அழித்ததை அனைவரும் அறிவோம். பண்டைக்காலத்தில் மதுரைவரை கடல்வெள்ளம் (சுனாமி) வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.
விண்ணைத் தொடும் அளவு உயர்ந்து, வெள்ளி போன்று நுரைகள் ததும்ப, கடற் சங்குகள் ஓசையிடுவது போன்ற சத்தத்துடன், ஆண் சுறாமீன்களையும் முத்துச் சிப்பிகளையும் அள்ளிக் கொண்டு, கடல்அலைகள் வரிசையாக ஏழு நிறங்களுடன் மதுரைவரை வந்து, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குக் கிழக்கே உள்ள குளத்தில் தங்கின என்கிறது திருவிளையாடற் புராணம். எழுகடலும் பொங்கி வந்த இடத்தை எழுகடல்தெரு என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இங்கே காஞ்சனமாலைக்குக் கோயிலும் அருகே குளமும் உள்ளன. இந்தக் குளத்தில், கடல்வெள்ளத்தினால் உருவான ஏழுநிறங்களினால் ஆன பாறைகள் மற்றும் சிப்பிகள் சங்குகள் சுறாமீன்கள் இவற்றின் எச்சங்கள் கிடைத்திடும் வாய்ப்புகள் உள்ளன. எனவே எழுகடல் தெருவில் உள்ள குளத்தை முறையான அகழாய்விற்கு உட்படுத்துவதால், பண்டைக்காலத்தில் மதுரைவரை கடல்வெள்ளம் (சுனாமி) வந்த நிகழ்ச்சியை உறுதிப் படுத்தலாம்.
தென்னகம் எங்கும் பல்வேறு வண்ணங்களில் பொக்குப்பாறைகள் விரவிக் கிடக்கின்றன. இந்தப் பொக்குப்பாறைகளை முறையான ஆய்விற்கு உட்படுத்தினால் அறிவியல் அடிப்படையில் புராணம் கூறும் செய்தியை உறுதி செய்யலாம்.
------------------------------------------------------------------------------------------------
திருவிளையாடற் புராணம்
(8). எழுகடலை அழைத்த படலம்
தடாதகைப் பிராட்டியை மணந்து சிவபெருமான் சுந்தரபாண்டியராகி உலகை ஆண்டுவந்தபோது, முனிவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்து சிவபெருமானைத் தரிசித்துச் சென்றனர். மதுரைக்கு கௌதம முனிவரும் வந்தார். அவரைத் தடாதகைப் பிராட்டியாரின் தாயார் காஞ்சனமாலை அழைத்து வரவேற்றாள். தன் பிறவித் துன்பத்தை நீக்க வல்ல தவம் யாது? என வினவினாள். அதற்குக் கௌதம முனிவர், மானதம் வாசிகம் காயிகம் என்னும் மூவகைத் தவங்களில் காயிகங்களே சிறந்தவை என்றும், அவைகளில் தீர்த்த யாத்திரைகள் சிறந்தவை என்றும் கூறினார். அத் தீர்த்தங்களுள் கங்கை நதியே சிறந்தது என்றும், அந்த நதிகளில் தனித்தனியே போய் நீராடுதல் அரிது ஆகையால் அந்நதிகள் எல்லாம் வந்துகூடும் கடலில் நீராடுதல் சாலச் சிறந்தது என்றும் அவர் கூறினர். இதனைக் கேட்டு உணர்ந்த காஞ்சனமாலை தானும் கடலில் நீராடி விரும்பினாள். தனது விருப்பத்தைத் தன் மகளான தடாதகைப் பிராட்டியாரிடம் கூறினாள். பிராட்டியார் இறைவனிடம் கூறினார். தேவியின் திருமொழியினைக் கேட்ட சுந்தர பாண்டியராகிய சிவபெருமான், ‘‘ஒருகடல் என்ன, ஏழு கடலையுமே கூவி அழைப்போம்’’ என்று கூறி அவை வரும்படி எண்ணினார்.
இறைவனது திருவுளம் அறிந்த ஏழு கடல்களும் ஆரவாரித்து, சந்திரனைத் துண்டு செய்தது போன்ற வடிவத்தை உடைய, சுரிந்த முகத்தினையுடைய சங்குகள் வாய்விட்டுச் சத்தம் எழுப்பும் படியாக அவற்றைத் தள்ளிக் கொண்டு, மிக வெள்ளிய நுரைகள் ததும்ப, ஆண் சுறாக்கள் மேலே சுழல, குளிர்ந்த முத்துக் கூட்டங்களை எடுத்து வீசிக் கொண்டு, அலையலையாக வரிசையாக, அண்டத்தின் நெடிய முகட்டினைத் தடவும் அளவிற்கு உயர்ந்து எழுந்தன. கடல் பொங்கி எழுந்து வருவதைக் கண்ட மதுரை நகர மக்கள் நடுங்கினர். கலியுக முடிவின் போது பிரமனுடைய படைப்புப் பொருள்கள் அழியுமாறு எழுதல் போல கடல்கள் பொங்கி எழுத்தன. பொங்கி எழுந்த ஏழு கடல்களும், பாம்பினையணிந்த சிவபெருமானது திருவடியைச் சென்று அடைந்தவர் போல, கிழக்கே இருந்த குளத்தில் சென்று அடங்கின. இதனால், பொன்னிறமுடைய தாமரை மலர்ந்து இருந்த அந்தக் குளத்தில், ஏழு கடலின் வெவ்வேறு நிறங்களும் கலந்து சிவபெருமானுடைய எட்டு வகையான வண்ணங்களில் அந்த குளம் விளங்கியது.
885.
என்று முனி விளம்பக் கேட்டு இருந்த காஞ்சன மாலை
துன்று திரைக் கடல் ஆடத் துணிவுடைய விருப்பினள் ஆய்த்
தன் திருமா மகட்கு உரைத்தாள் சிறிது உள்ளம் தளர்வு எய்திச்
சென்று இறைவற்கு உரைப்பல் எனச் செழியர் தவக் கொழுந்து அனையாள்.
886.
தன் தன்னை உடைய பெரும் தகை வேந்தர் பெருமான்
முன் சென்று அன்னம் என நின்று செப்புவாள் குறள் வீரர்க்கு
அன்று அன்னக் குழியு னொடு ஆறு அழைத்த அருட்கடலே
இன்று அன்னை கடல் ஆட வேண்டினாள் என்று இரந்தாள்.
887.
தேவி திரு மொழி கேட்டுத் தென்னவராய் நிலம் புரக்கும்
காவி திகழ் மணி கண்டர் கடல் ஒன்றோ எழு கடலும்
கூவி வர அழைத்தும் என உன்னினார் குணபால் ஓர்
வாவி இடை எழுவேறு வண்ணமொடும் வருவன ஆல்.
888.
துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட உதைத்து
வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக் கொட்பத்
தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை
அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும்.
889.
காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக்
கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம்
பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால்
அவன் அடி சென்று அடைந்தார் போல் அடங்கியது ஆல்.
890.
தன் வண்ணம் எழு கடலின் தனி வண்ணமொடு கலந்து
பொன் வண்ண நறும் பொகுட்டுப் பூம் பொய்கை பொலிவு எய்தி
மின் வண்ணச் சடைதாழ வெள்ளி மணி மன்று ஆடும்
மன் வண்ணம் என எட்டு வண்ண மொடும் வயங்கியது ஆல்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
நன்றி
(திருவிளையாடற் புராணம் பாடல்கள் - தமிழ் இணையப் பல்கலைக்கழகம் http://www.tamilvu.org/slet/l41d0/l41d0son.jsp?subid=2599 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக