வேதாரண்யம் அருகே
முதுமக்கள்தாழி கண்டெடுப்பு
தினத்தந்தி செய்தி - வேதாரண்யம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
பதிவு: மார்ச் 19, 2020 05:30 AM வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செட்டிப்புலம் கிராமத்தில் நடுக்காடு பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் வாய்க்கால் தூர்வாரும் பணி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வாய்க்காலின் ஒரு பகுதியை பணியாளர்கள் தோண்டியபோது அங்கு 2 மண் பானைகள் மண்ணில் புதைந்திருப்பது தெரியவந்தது.
அதில் ஒரு பானை உடைந்த நிலையில் இருந்தது. மற்றொரு பானை உடையாமல் காட்சி அளித்தது. அந்த பானையில் மனித எலும்பு துண்டுகள், பற்கள் மற்றும் தட்டு, கிண்ணங்கள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் இருந்தன. அந்த பொருட்களை மட்டும் பணியாளர்கள் கவனமாக வெளியே எடுத்து பத்திரப்படுத்தினர்.
‘வாட்ஸ்-அப்’ மூலமாக... இதுகுறித்து வேதாரண்யம் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தாசில்தார் சண்முகம் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று மண்ணில் புதைந்த நிலையில் இருந்த பானைகளை பார்வையிட்டனர். இதையடுத்து பானைகளின் புகைப்படம் ‘வாட்ஸ்-அப்’ மூலமாக நாகையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
செட்டிப்புலம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டு இருப்பது முதுமக்கள் தாழிகள் ஆகும். அவற்றில் உள்ள சில குறியீடுகளை வைத்து பார்க்கும்போது அவை 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகளாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உடையாத நிலையில் உள்ள முதுமக்கள் தாழி, இன்று (வியாழக்கிழமை) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
நன்றி - https://www.dailythanthi.com/News/Districts/2020/03/19003231/2500yearold-adult-corridor-near-Vedaranyam.vpf