வடதிசையதுவே வான்தோய் இமயம்
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப் பட்டோன் : ஆய் அண்டிரன்.
திணை : பாடாண்.
துறை : இயன்நிலை.
(வடதிசையதுவே வான்தோய் இமயம், தென் திசை ஆய்குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம் மலர் தலை உலகே என, அண்டிரனது குடிச்சிறப்பைக் கூறுகின்றனர் புலவர்)
முன்னுள்ளுவோனைப் பின்னுள்ளி னேனே!
ஆழ்க, என் உள்ளம் போழ்க என் நாவே!
பாழ்ஊர்க் கிணற்றின் துர்க, என் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி, அயல 5
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசையதுவே வான்தோய் இமயம்;
தென்திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ, இம் மலர்தலை உலகே.
வடதிசையிலே இமயம் உள்ளது. தென்திசையிலே ஆய்குடி இல்லையாயின், இவ்வுலகமே நிலைகலங்கிக் கெடும். வேந்தே! எவரினும் முன்னதாக நினைக்கவேண்டிய நின்னைப் பின்பே நினைத்தேன் யான். என் உள்ளம் அமிழ்வதாக! என் செவி ஊர்ப் பாழ்ங்கிணறு போலத் தூர்வதாக! நின்னையன்றிப் பிறரைப் புகழ்ந்த என் நாவும் கிழிக்கப்படுவதாக (ஆய்குடி பொதியமலைச் சாரலின்கண் சிற்றுாராகத் திகழ்கிறது)
சொற்பொருள்: 2 என் உள்ளம் ஆழ்க அவ்வாறு நினைந்த குற்றத்தால் எனது உள்ளம் அமிழ்ந்திப் போவதாக, போழ்க - கருவியாற் பிளக்கப்படுவதாக 3 என் செவி - அவன் புகழன்றிப் பிறர் புகழைக் கூறக் கேட்ட எனது செவி, 3. நரந்தை ஒரு வகைப் புல். கவரி - கவரிமான். 6. தகரத் தண்ணிழல் - தகர மரத்தினது குளிர்ந்த நிழலின் கண். வதியும் - தங்கும். 9. பிறழ்வது - கீழ்மேலதாகிக் கெடுவது.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக