திங்கள், 14 மே, 2018

Theory of Tsunami, மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) மதுரையை அழித்தியால் :



மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) 
மதுரையை அழித்தியால்

2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய இரண்டு சுனாமிகள் அடுத்தடுத்துத் தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்துள்ளன. அந்நிகழ்ச்சியை ஊழிக்காலம், பிரளயம், கடல்வெள்ளம் என்று திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறுகிறது. இவ்வாறு ஊழிக்காலத்தில் பிரளயத்தில் தோன்றிய கடல்வெள்ளம் மதுரையை மைய இலக்காகக் கொண்டு தாக்கியது என்றும், மதுரைத் தாக்கி அளிக்குமாறு இந்திரன் ஆணையிட்டான் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.
“பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என 
இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள் 
ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து 
அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்“ 

- திருவிளையாடற் புராணம்.
இந்திரனது ஏவலால் மதுரையைக் கடல் அழித்துள்ளது. இதன் காரணமாகத்தான் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சிறப்பான இந்திரவிழா நின்றுபோய் விட்டது போலும். மதுரையை அழித்த இந்திரனை தமிழன் எப்படிப் போற்றுவான்!



கிருஷ்ணன் இந்திரவிழாவை நிறுத்திய கதை - திருமாலின், கிருஷ்ணாவதார காலத்தில், மழைக்கடவுளான இந்திரனுக்கே கோகுலத்தில் வசித்த ஆயர்கள் ஆண்டு தோறும் பூசை செய்து வழிபட்டனர். ஒருமுறை இந்திர வழிபாட்டை, கிருட்டிணன் தடுத்து அருகில் உள்ள மலைக்கு பூசை செய்ய வைத்தார்.  இதனால் கோபம் கொண்ட மழைக் கடவுளான இந்திரன், கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பொழியச் செய்தார். இடி மின்னலுடன் கூடிய தொடர் மழையைக் கண்டு பயந்த கோகுலத்து ஆயர்களையும் ஆவினங்களையும் காக்க கிருட்டிணன், அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினார். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர்”  என்கிறது புராணக்கதை.  திருவிளையாடல் புராணமும் கடல்கோளுக்குப் பிறகு பெருமழை பெய்த செய்தியைப் பதிவு செய்துள்ளது.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக