ஞாயிறு, 26 மே, 2019

மதுரைக்கு வந்த சுனாமி, பகுதி – 4, மதுரையைக் கடல் வௌவியது:

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4)
மதுரையை வங்கக் கடல் வௌவியது:

2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய சுனாமி தோன்றி மதுரையை அழிந்தது பற்றித் திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறுகிறது.

பேய்களும் கண்ணுறங்கும் நடு இரவில், குருட்டு இருளில் வங்கக் கடலில் பிரளயம் உண்டானது.  இதனால் நிலம் நடுக்கியது.  வங்கக் கடல் பொங்கி எழுந்தது.  கடல்  அலைகள் அண்டகூடம் முழுதும் ஊடுருவிச் சென்றன. கடல் வெள்ளம் பெருகி ஆரவாரித்து விண்ணுயர எழுந்தது.  மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் அஞ்சுமாறு பெரிய கரிய மலை போல் அலைகள் தோன்றி எழுந்து வந்தன.
நஞ்சு பொருந்திய வாயினையும், கரிய உடலையும் உடையது இராகு என்னும் பாம்பு.  இந்தக் கொடிய பாம்பானது ஞாயிறுடன் திங்கள் சேரும்போது (சூரிய கிரகணம்) விரைந்து விழுங்கிவிடும்.  அதைப் போன்று, மரக்கலங்கள் செல்லும் கடலின் வெள்ளமானது,  மாடங்களையுடைய மதுரையை விரைந்து விழுங்கியது.
வட்டமாகிய ஆமைகளைக் கேடயங்களாகவும், வாளை மீன்களை வாட்படைகளாகவும்,  மகரமீன்களை யானைப் படைகளாகவும்,  பரந்த அலைக் கூட்டங்களைத் தாவுகின்ற குதிரைப் படையாகவும், கடலில் மிதந்த தோணிகளைத் தேர்ப் படைகளாகவும் கொண்டு கடல் அலைகள் தோன்றி எழுந்தன.  வானளவிய கோட்டை மதில் சூழ்ந்த மதுரையின் கிழக்குத் திசையில் உக்கிர பாண்டியன்மேல் போருக்கு எழுந்ததைப் போன்று பிரளயத்தில் தோன்றிய கடல் வெள்ள அலைகள் வானுயரத் தோன்றி வந்தன.

தொடரும்...

கட்டுரையாளர் – காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன், kalairajan26@gmail.com,  9443501912
நாள் – வைகாசி 13 (27.05.2017) சனிக்கிழமை

குறிப்பு - கட்டுரையாளர் தான் படித்த திருவிளையாடற் புராணம் பாடல்கள், நேரில் பார்த்த மண் மற்றும் மலைகளின் அமைப்புகள், கூகுள் புவிப்படங்கள் இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று இயைபு உடையனவாக உள்ளன என்ற கருதுகிறார்.  மதுரை மணவூர் (கீழடி) மற்றும் தமிழகம் முழுமையும் சுனாமியால் அளித்துள்ளன என்ற  கருத்தை இக் கட்டுரையில் பதிவு செய்கிறார்)

பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்துப் பாடியருளிய பிரளயம் கூறும் திருவிளையாடற் புராணப் பாடல்கள் சில.

1037.
பொருங்கடல்வேந்தனைக்கூவிப்பொள்ளென இருங்கடலுடுத்தபாரேமுமூழிநாள் ஒருங்கடுவெள்ளமொத்துருத்துப்போய்வளைந் தருங்கடிமதுரையையழித்தியாலென்றான்.

1038.
விளைவதுதெரிகிலேன்வேலைவேந்தனும்
வளவயன்மதுரையைவளைந்திட்டிம்மெனக்
களைவதுகருதினான்பேயுங்கண்படை
கொளவருநனந்தலைக்குருட்டுக்கங்குல்வாய்.

1039
கொதித்தலைக்கரங்களண்டகூடமெங்குமூடுபோய்
அதிர்த்தலைக்கவூழிநாளிலார்த்தலைக்குநீத்தமாய்
மதித்தலத்தையெட்டிமுட்டிவருமொரஞ்சனப்பொருப்
புதித்ததொத்துமண்ணும்விண்ணுமுட்கவந்ததுததியே.

1040
வங்கவேள்வெள்ளமாடமதுரைமீதுவருசெயல்
கங்குல்வாயதிங்கண்மீதுகாரிவாயகாருடல்
வெங்கண்வாளராவிழுங்கவீழ்வதொக்குமலதுகார்
அங்கண்மூடவருவதொக்குமல்லதேதுசொல்வதே.

1041
வட்டயாமைபலகைவீசுவாளைவாள்கள்மகரமே
பட்டயானைபாய்திரைப்பரப்புவாம்பரித்திரள்
விட்டதோணியிரதமின்னவிரவுதானையொடுகடல்
அட்டமாகவழுதிமேலமர்க்கெழுந்ததொக்குமே.

1042
இன்னவாறெழுந்தவேலைமஞ்சுறங்குமிஞ்சிசூழ்
நன்னகர்க்குணக்கின்வந்துநணுகுமெல்லையரையிரா
மன்னவன்கனாவின்வெள்ளிமன்றவாணர்சித்தராய்
முன்னர்வந்திருந்தரும்புமுறுவறோன்றமொழிகுவார்.

நன்றி
(1) மேலேயுள்ள படமானது இணையத்தில் இருந்து எடுக்கப் பெற்றது. படத்தைப் பதிவு செய்தோருக்கு நன்றி.
(2) திருவிளையாடற்புராணம் பாடல்களை இணையத்தில் பதிவு செய்துள்ள தமிழ்இணையப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி.
(3) கூகுள் மேப் வழங்கிய புவிப்படத்திற்கு நன்றி.

வியாழன், 28 மார்ச், 2019

எழுகடல் தெரு - பெயர்க்காரணம்

எழுகடல் தெரு - பெயர்க்காரணம்


மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள தெருவிற்கு “அம்மன் சந்நிதி தெரு” என்று பெயர் வைத்துள்ளனர்.  ஆனால் சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள தெருவிற்குச் “சுவாமி சந்நிதி தெரு” என்ற பெயரில்லை.  சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள தெருவிற்கு “எழுகடல்தெரு ” என்று பெயர் வைத்துள்ளனர். 

சுவாமிக்கு உரிய இடத்தில் சுவாமியின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எழுகடல்தெரு என்று கடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பெயர் வைத்துள்ளதர்கான காரணம் என்ன?

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள், தமிழகக் கடற்கரை ஊர்களைச் சுனாமி தாக்கி அழித்ததை அனைவரும் அறிவோம்.  பண்டைக்காலத்தில் மதுரைவரை கடல்வெள்ளம் (சுனாமி) வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. 


விண்ணைத் தொடும் அளவு உயர்ந்து, வெள்ளி போன்று நுரைகள் ததும்ப, கடற் சங்குகள் ஓசையிடுவது போன்ற சத்தத்துடன், ஆண் சுறாமீன்களையும் முத்துச் சிப்பிகளையும் அள்ளிக் கொண்டு, கடல்அலைகள் வரிசையாக ஏழு நிறங்களுடன் மதுரைவரை வந்து, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குக் கிழக்கே உள்ள குளத்தில் தங்கின என்கிறது திருவிளையாடற் புராணம்.   எழுகடலும் பொங்கி வந்த இடத்தை எழுகடல்தெரு என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.  இங்கே காஞ்சனமாலைக்குக் கோயிலும் அருகே குளமும் உள்ளன.  இந்தக் குளத்தில், கடல்வெள்ளத்தினால் உருவான ஏழுநிறங்களினால் ஆன பாறைகள் மற்றும் சிப்பிகள் சங்குகள் சுறாமீன்கள்  இவற்றின் எச்சங்கள் கிடைத்திடும் வாய்ப்புகள் உள்ளன. எனவே எழுகடல் தெருவில் உள்ள குளத்தை முறையான அகழாய்விற்கு உட்படுத்துவதால், பண்டைக்காலத்தில் மதுரைவரை கடல்வெள்ளம் (சுனாமி) வந்த நிகழ்ச்சியை உறுதிப் படுத்தலாம்.

தென்னகம் எங்கும் பல்வேறு வண்ணங்களில் பொக்குப்பாறைகள் விரவிக் கிடக்கின்றன.  இந்தப் பொக்குப்பாறைகளை முறையான ஆய்விற்கு உட்படுத்தினால் அறிவியல் அடிப்படையில் புராணம் கூறும் செய்தியை உறுதி செய்யலாம்.




------------------------------------------------------------------------------------------------

திருவிளையாடற் புராணம்
(8). எழுகடலை அழைத்த படலம்

தடாதகைப் பிராட்டியை மணந்து சிவபெருமான் சுந்தரபாண்டியராகி உலகை ஆண்டுவந்தபோது, முனிவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்து சிவபெருமானைத் தரிசித்துச் சென்றனர்.  மதுரைக்கு கௌதம முனிவரும் வந்தார்.  அவரைத் தடாதகைப் பிராட்டியாரின் தாயார் காஞ்சனமாலை அழைத்து வரவேற்றாள். தன் பிறவித் துன்பத்தை நீக்க வல்ல தவம் யாது? என வினவினாள்.  அதற்குக் கௌதம முனிவர், மானதம் வாசிகம் காயிகம் என்னும் மூவகைத் தவங்களில் காயிகங்களே சிறந்தவை என்றும், அவைகளில் தீர்த்த யாத்திரைகள் சிறந்தவை என்றும் கூறினார். அத் தீர்த்தங்களுள் கங்கை நதியே சிறந்தது என்றும், அந்த நதிகளில் தனித்தனியே போய் நீராடுதல் அரிது ஆகையால் அந்நதிகள் எல்லாம் வந்துகூடும் கடலில் நீராடுதல் சாலச் சிறந்தது என்றும் அவர் கூறினர். இதனைக் கேட்டு உணர்ந்த காஞ்சனமாலை தானும் கடலில் நீராடி விரும்பினாள்.   தனது விருப்பத்தைத் தன் மகளான தடாதகைப் பிராட்டியாரிடம் கூறினாள்.  பிராட்டியார் இறைவனிடம் கூறினார்.  தேவியின் திருமொழியினைக் கேட்ட சுந்தர பாண்டியராகிய சிவபெருமான், ‘‘ஒருகடல் என்ன, ஏழு கடலையுமே கூவி அழைப்போம்’’ என்று கூறி அவை வரும்படி எண்ணினார்.

இறைவனது திருவுளம் அறிந்த ஏழு கடல்களும் ஆரவாரித்து, சந்திரனைத் துண்டு செய்தது போன்ற வடிவத்தை உடைய, சுரிந்த முகத்தினையுடைய சங்குகள் வாய்விட்டுச் சத்தம் எழுப்பும் படியாக அவற்றைத் தள்ளிக் கொண்டு,  மிக வெள்ளிய நுரைகள் ததும்ப, ஆண் சுறாக்கள் மேலே சுழல, குளிர்ந்த முத்துக் கூட்டங்களை எடுத்து வீசிக் கொண்டு,  அலையலையாக வரிசையாக, அண்டத்தின் நெடிய முகட்டினைத் தடவும் அளவிற்கு உயர்ந்து  எழுந்தன.  கடல் பொங்கி எழுந்து வருவதைக் கண்ட மதுரை நகர மக்கள் நடுங்கினர்.  கலியுக முடிவின் போது பிரமனுடைய படைப்புப் பொருள்கள் அழியுமாறு எழுதல் போல கடல்கள் பொங்கி எழுத்தன.   பொங்கி எழுந்த ஏழு கடல்களும்,  பாம்பினையணிந்த சிவபெருமானது திருவடியைச் சென்று அடைந்தவர் போல, கிழக்கே இருந்த குளத்தில் சென்று அடங்கின.  இதனால், பொன்னிறமுடைய தாமரை மலர்ந்து இருந்த அந்தக் குளத்தில், ஏழு கடலின் வெவ்வேறு நிறங்களும் கலந்து சிவபெருமானுடைய எட்டு வகையான வண்ணங்களில்  அந்த குளம் விளங்கியது.


885. 
என்று முனி விளம்பக் கேட்டு இருந்த காஞ்சன மாலை
துன்று திரைக் கடல் ஆடத் துணிவுடைய விருப்பினள் ஆய்த்
தன் திருமா மகட்கு உரைத்தாள் சிறிது உள்ளம் தளர்வு எய்திச்
சென்று இறைவற்கு உரைப்பல் எனச் செழியர் தவக் கொழுந்து அனையாள்.

886. 
தன் தன்னை உடைய பெரும் தகை வேந்தர் பெருமான்
முன் சென்று அன்னம் என நின்று செப்புவாள் குறள் வீரர்க்கு
அன்று அன்னக் குழியு னொடு ஆறு அழைத்த  அருட்கடலே
இன்று அன்னை கடல் ஆட வேண்டினாள் என்று இரந்தாள்.     
                           
887.     
தேவி திரு மொழி கேட்டுத் தென்னவராய் நிலம் புரக்கும்
காவி திகழ் மணி கண்டர் கடல் ஒன்றோ எழு கடலும்
கூவி வர அழைத்தும் என உன்னினார் குணபால் ஓர்
வாவி இடை எழுவேறு வண்ணமொடும் வருவன ஆல். 

888.     
துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட  உதைத்து
வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக்  கொட்பத்
தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை
அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும்.  

889.     
காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக்
கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம்
பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால்
அவன் அடி சென்று அடைந்தார் போல்  அடங்கியது ஆல்.             

890.     
தன் வண்ணம் எழு கடலின் தனி வண்ணமொடு கலந்து
பொன் வண்ண நறும் பொகுட்டுப் பூம் பொய்கை பொலிவு எய்தி
மின் வண்ணச் சடைதாழ வெள்ளி மணி மன்று ஆடும்
மன் வண்ணம் என எட்டு வண்ண மொடும் வயங்கியது ஆல்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

நன்றி
(திருவிளையாடற் புராணம்  பாடல்கள் - தமிழ் இணையப் பல்கலைக்கழகம் http://www.tamilvu.org/slet/l41d0/l41d0son.jsp?subid=2599 )

புதன், 27 மார்ச், 2019

கடல் கொண்ட மதுரையில் கடல்சிப்பிகள்

கடல் கொண்ட மதுரையில் கடல்சிப்பிகள்

மதுரையை மையமாக (இலக்காகக்) கொண்ட நான்கு கடல்கோள்களைப் பற்றித் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.

இதில் ஒன்றில் மட்டும் கடல்நீர் மதுரைவரை வந்து வாவியில் தங்கியதாகவும்,  கடல்நீரில் இருந்த சிப்பிகளும் மீன்களும் அடித்து வரப்பட்டு அந்த வாவியில் தங்கின என்றும் புராணம் குறிப்பிடுகிறது.  எனவே எழுகடல் தெருவில் உள்ள தெப்பக்குளத்தை முறைப்படி ஆய்வு செய்தால் கிளிஞ்சல்கள் கிடைக்கும்.

புராணம் சொல்வதை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்காமல் மதுரையைக் கடல்கொள்ளவில்லை என எப்படிக் கூற இயலும்?

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

சனி, 9 மார்ச், 2019

கடல்கொண்ட கொடைக்கானல் - 2

கடல்கொண்ட கொடைக்கானல் !

தமிழகத்தைக் கடல்கொண்டதாகத் தமிழிலக்கியங்கள் பலவும் குறிப்பிடுகின்றன.  திருவிளையாடல் புராணத்தில் உள்ள எழுகடலை அழைத்த படலம், கடல்சுற வேல்விட்ட படலம், வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம், நான்மாடக் கூடலான படலம், திருவாலவாயான படலம் முதலான படலங்களில் மதுரையைக் கடல்கொண்ட குறிப்புகள் மிகுதியாக விரித்துப் பாடப் பெற்றுள்ளன.  குமரியை அடுத்துள்ள குமரிக்கோடு என்ற மலைத்தொடரையே கொடுங்கடல் கொண்டது என்ற குறிப்பும் உள்ளது.
இவ்வாறு ஒரு மலையே மூழ்கி அழியும் போது, அதனருகில் உள்ள தமிழகமும் கடலால் மூழ்கடிக்கப் பட்டிருக்க வேண்டுமல்லவா?

கடினமாக கருப்புநிறக் கிரானைட் பாறைகளால் ஆனது கொடைக்கானல் மலைத்தொடர்.  பாறைகள் சிதைந்துதான் மண்ணும் மணலும் தோன்றின என்கின்றனர் புவியியல் படித்தறிந்தோர்.  கொடைக்கானலில் உள்ள மண் திட்டுகளைப் பார்த்தால் அங்குள்ளகருப்புநிற கிரானைட் பாறைகள் சிதைத்து உருவான மண் திட்டுகள் போன்று தெரியவில்லை.  





ஆனால் கொடைக்கானல் மலைப் பாறைகளின் மீது மஞ்சள்நிற மண் மற்றும் செம்மண் கலந்து படிந்துள்ளன.  இவ்வாறான மண்திட்டுக்கள் படிந்துள்ள இடத்தில்தான் கோல்ப் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

கருப்புநிற கிரானைட் பாறைகள் சிதைந்தா இந்த மண்திட்டுகள் உருவாகி யிருக்கும்?


இதே போன்ற அமைப்பிலான மண்திட்டுகளை அழகர்கோயில் மலை, திண்டுக்கல் அருகே விருப்பாச்சி மலை, திருத்தணி மலை முதலான தமிழகத்தில் உள்ள மலைகளில் எல்லாம் காணலாம்.  மேலும் இதே போன்ற அமைப்பிலான மண்திட்டுகளை ஆந்திரம் கர்நாடகத்தில் உள்ள மலைகளில் காணமுடிகிறது. 
குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்ட போது தோன்றிய கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியினால்) அடித்து வரப்பட்ட களிமண்தான் கொடைக்கானலில் உள்ள கிரானைட் பாறைகளின் மேல் படிந்துள்ளது என எண்ணத் தோன்றுகிறது !
அமெரிக்காவில் Lexington அருகில் உள்ள  Kentucky என்ற இடத்தில் இதுபோன்றே மண்திட்டுகள் காணப்படுகின்றன.  அவற்றை ஆராய்ந்த புவியியல் அறிஞர்கள் பிரளயத்தின்போது உண்டான நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும் உண்டாகி இருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.
1024px-Seismite_Ordovician_Kentucky_Close. Seismite formed by liquefaction of sediments during a Late Ordovician earthquake.
அமெரிக்காவில் கடினமான பாறைகளும், பொக்குப்பாறைகளும் கலந்து உருவாகியுள்ள இந்த அமைப்புப் போன்றே கொடைக்கானல் மலைத்தொடரிலும் காணக் கிடக்கின்றன.  
அமெரிக்காவில் நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும் இவ்வாறு உருவாகியுள்ளன என்றால்,  கொடைக்கானலில் உள்ள இந்தப் பாறைகளும் நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும்தானே உருவாகியிருக்க வேண்டும் ?

கொடைக்கானலில் இருந்து வங்கக் கடலானது சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ளது.  தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில்  இருந்து வங்கக்கடல்  ஊர்ந்து 200 கி.மீ. தொலைவைக் கடந்து வந்து, சுமார் 2000 மீட்டர் உயரமுள்ள கொடைக்கானல் மலைப் பாறைகளின் மேல் படிந்துள்ளது.  இவ்வளவு மாபெரும் கடல்கோளை (பெருஞ் சுனாமியை) யாரும் எளிதில் நம்பும் படியாக இல்லை.


ஆனால் கூகுள் புவிப்படத்தைப்  பார்த்தால், தமிழகத்திற்குக் கிழக்கே அந்தமான் தீவுகளுக்கு அருகே சுமார் 1965 கி.மீ. சுற்றளவும் 1,76,697 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்ட  ஒரு மாபெரும் நிலப்பரப்பு கடலில் மூழ்கி உள்ளதைக் காண முடிகிறது.   கடலில் மூழ்கியுள்ள இந்த நிலத்தின் பரப்பளவு தமிழகத்தின் பரப்பளவை விடக் கூடுதலாக உள்ளது.
இவ்வாறான ஒரு மாபெரும் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் போது உருவாகும் கடல்கோளை (பெருஞ் சுனாமியை) அளவீடாகக் கொண்டால்,  2000 மீட்டர் உயரமுடைய கொடைக்கானல் மலையைக் கடல் அலைகள் கடந்து சென்றிருக்க முடியும் என்றே கருத வேண்டியுள்ளது.
தூண்பாறைகள் (Piller Rocks)





கடலானது நிலத்தில் ஊர்ந்து மலையில் ஏறிக் கடந்து செல்லும் போது,  எத்தனையோ உயிரியல் தடயங்கள் தமிழகமெங்கும் உள்ள மலைப்பாறைகளின் இடுக்குகளில் தங்கிப் படித்திருக்க வேண்டும்.  இவ்வாறாகப் படிந்துள்ள படிமங்களைக் தேடிக் கண்டறிய வேண்டும்.
உங்களது கருத்து என்ன ?
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 7 மார்ச், 2019

கடல்கொண்ட கொடைக்கானல் !

கடல்கொண்ட
கொடைக்கானல் !
பாறைகள் சிதைந்துதான் மண்ணும் மணலும் தோன்றின என்கின்றனர் புவியியல் படித்தறிந்தோர்.

கொடைக்கானலில் உள்ள மண் திட்டுகளைப் பார்த்தால் அங்குள்ள கருப்புநிற கிரானைட் பாறைகள் சிதைத்து உருவான மண் திட்டுகள் போன்று  தெரியவில்லை.

குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்ட போது தோன்றிய கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியினால்) அடித்து வரப்பட்ட களிமண்தான் கொடைக்கானலில் உள்ள கிரானைட் பாறைகளின் மேல் படிந்துள்ளது என எண்ணத் தோன்றுகிறது !

கருப்புநிற கிரானைட் பாறைகள் சிதைந்தா இந்த மண்திட்டுகள் உருவாகி யிருக்கும்,
உங்களது கருத்து என்ன ?

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

மதுரை - மலைகளின் மையம்

மதுரையின் சிறப்பு
மதுரை - மலைகளின் மையம்

நாகமலை, அரிட்டாபட்டி மலை, யானைமலை, மலம்பட்டி மலை முதலான மலைகளின் மையமாக மதுரை அமைந்துள்ளது. 




அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள்

லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள்

நீங்கள் தமிழரா?  தமிழரின் தொன்மையைக் காண்பதில் விருப்பம் உள்ளவரா?
சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டமா? அல்லது மதுரை வாசியா?  அல்லது மதுரை - இராமேசுவரம் நெடுஞ்சாலையில் பயணிப்பவரா?
ஒரு முறை லாடனேந்தல் சென்று தமிழரின் தொல்லியல் அடையாளங்களைக் கண்டு வாருங்கள்.

தமிழர் தொன்மையான நாகரிகம் உடையவர்கள். பிரளயங்களில் தோன்றிய கடல்வெள்ளங்களிலும் (பெருஞ்சுனாமியிலும்) மூழ்கிப் பிழைத்தவர்கள் தமிழர்கள்.
பண்டைய தமிழகத்தைக் கடல்கொண்டதைப் பல்வேறு தமிழ் இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன.   பண்டைத் தமிழரது நாகரிகத்தை மெய்ப்பிக்கும் வகையில் கீழடி அருகே தொல்லியல்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். கீழடிக்குக் கிழக்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் இராமேசுவரம் சாலையோரம் உள்ள லாடனேந்தல் கிராமத்திற்கு அருகே தொடரித் தண்டவாளத்திற்குக் கீழே பாதையொன்று (இரயில்வே கீழ்ப்பாலம்) கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அதற்காகப் பூமியைத் தோண்டும் போது, அங்கே சுமார் 15 அடிக்கும் கீழே சுமார் 5அடி அகலத்திற்கும் 4 அடி உயரத்திற்கும் செங்கற் கட்டுமானம் இருப்பதைக் கண்டுள்ளனர்.
கூகுள் புவிப்படத்தில் - https://goo.gl/maps/YF3t6Tf8X8M2

நாங்கள் கடந்த மார்கழி 28 (12.01.2019) சனிக்கிழமை அன்று சென்று பார்த்து வந்தோம்.  அங்கே கிடைத்த சில செங்கற்களையும் பானையோடுகளையும் சுண்ணாம்புக் கட்டிகளையும் எடுத்து வந்தோம்.

செங்கற்கள்
ஒவ்வொரு செங்கற்கல்லும் 25 செ.மீ. நீளமும், ஒருபுறம் 13.5 செ.மீ. அகலமும், மற்றொரு புறம் 11 செ.மீ. அகலமும், 4.8 செ.மீ. உயரமும் கொண்டதாக இருந்தன.




பானைஓடுகள்
ஒருபுறம் கருப்பு நிறத்திலும், மறுபுறம் சிவப்பு நிறத்திலுமான பானைஓடுகள் அங்கே கிடைந்தன.  அங்கே J.G.B. இயந்திரம் தோண்டிக் கொண்டிந்த போது நேரில் பார்த்த நண்பர் ஒருவர் உள்ளே ஒரு முழுப்பானை அப்படியே புதைந்து கிடப்பதை நேரில் பார்த்ததாகக் கூறினார்.




சுண்ணாம்புக் கட்டிகள்
அடுக்கடுக்காக (bedding) முறையில் மணற்திட்டுகள் காணப்பட்டன.  அதில் சுண்ணாம்புக் கட்டிகள் கலந்து மணற்திட்டுகளும் இருந்தன.



குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டபோது, கடல்வெள்ளத்தால் மதுரை அழிந்ததா? லாடனேந்தலில் புதைந்து கிடக்கும் தொல்லியல் தடையங்கள் வழியாக அறிந்து கொள்வது என்ன?

தமிழரின் தொன்மை போற்றுவோம்,
மாமதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்,

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மார்கழி 28 (12.01.2019) சனிக்கிழமை.
-----------------------------------------------------------
லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ள பற்றிய தினமலர் நாளிதழில் செய்தி இது - https://www.dinamalar.com/news_detail.asp?id=2186607&fbclid=IwAR0daJX9ZjxHbFjedBMDYDLXLgndL3bpBZIfje04vKfMBYkSzmORZpMJ2zY