வியாழன், 10 செப்டம்பர், 2020

மணிமேகலை குறிப்பிடும் கடல்கோள்

மணிமேகலை  குறிப்பிடும் கடல்கோள்


இந்தப் பதிவை  இந்த யூ-டியூப்பில் காணலாம் 
https://youtu.be/r6MsXH033Vk?t=349


மணிமேகலை - பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
(ஆசிரியர் - சீத்தலைச்சாத்தனார்) 

அவந்திநாட்டு மன்னனிடம்,காயங்கரை ஆற்றங்கரை யில்
பிரம்மதருமன் அறங்கூறுகிறார்.  அந்தமன்னனிடம் பிரம்மதருமன் கூறியது மணிமேகலையின் நினைவிற்கு வருகிறது.


“ஆங்கு அவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய்
தீங்கனி நாவல் ஓங்கும் இத் தீவு இடை
இன்று ஏழ் நாளில் இருநில மாக்கள்
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே
பூமி நடுக்குறூஉம் போழ் தத்து இந் நகர்
நாக நன்னாட்டு நானூறு யோசனை
வியன் பா தலத்து வீழ்ந்து கேடு எய்தும்
இதன்பால் ஒழிக என இருநில வேந்தனும் ......”

        பிரம்மதருமன் என்ற துறவி மன்னனிடம் வந்து அறம் கூறுகிறார்.  இனிய கனிகளையுடைய நாவல் மரங்கள் ஓங்கிய வளர்ந்துள்ளது இந்த ஜம்புத்தீவு (நாவலத்தீவு). இந்தத் தீவின் இடையே,  இன்றைக்கு ஏழாவது நாளில்,  இரு நிலத்தில் வாழும் மக்கள் நின்று நடுக்குமாறு பூமி நடுக்கும் உண்டாகும்.   இந்த நகரும், நன்றாகிய நாக நாட்டில் நானூறு யோசனை அளவுடைய நிலமானது அகன்ற பாதலத்திற்குள் வீழ்ந்து கேடு எய்தும்,   எனவே நீண்ட நிலத்தை ஆளும் அரசனே, நீயும் உன் மக்களும் இந்நகரத்தைவிட்டு நீங்குக என்று கூறுகிறார்.
        அதனைச் செவியுற்ற அரசனும், மக்களையெல்லாம் தத்தம் ஆடு, மாடுகளைக் காப்பாற்றி, அந்த  நகரத்தை விட்டு நீங்கும்படி  முரசு அறிவித்துச் செய்திசொன்னான்.  அரசனும் தனது கடல்போன்ற  சேனையுடன் இடவயம் என்ற அந்த நகரத்தை விட்டு விலகி வடதிசையில் உள்ள அவந்தி தேசத்தைநோக்கிப் புலம்பெயர்ந்தான்.  அவ்வாறு பெரும் சேனையுடன் பயணம் மேற்கொள்ளும்போது காயங்கரை என்ற பெரிய ஆற்றின் கரையில் ஒரு பூவனத்தில் தனது சேனையுடன் இளைப்பாறினான்.  அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வந்த நேரத்தில், பிரம்மதருமன் கூறியபடியே நிலநடுக்கம் ஏற்பட்டு இடவயம் என்ற அந்த நகரம் ஒரு பெரிய நிலநடுக்கத்தில் இந்தப் பூமிக்குள் புதைந்துபோனது.   இதனைக் கேள்விப்பட்ட மன்னரும், அவனுடைய மக்களும் மிக்க அதிசயித்து, அந்தத் பிரம்மதருமனைத் துதித்து அவனது பாதங்களில் விழுந்து வணங்கினர் என்கிறது மணிமேகலை.

மணிமேகலை குறிப்பிடும் கடல்கோள் -
        மேற்கண்ட பாடல்வரிகளில் கீழ்க்கண்ட தகவல்கள் கிடைக்கின்றன.  

நிலநடுக்கம் - இந்தப் பாடலில் நிலநடுக்கம் உண்டாகிப் பூமியின்  பாதலத்திற்குள் நிலம் அமிழ்ந்து, அதனால் கடல்கோள் உருவாகும் நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது.   நிலநடுக்கம் குறித்த பதிவுடைய இலக்கியமாக மணிமேகலை உள்ளது.  இவ்வாறு நிலநடுக்கம் பற்றி உலகில் வேறுபிற இலக்கியங்களில் குறிப்புகள் இருப்பதாக அறியப்படவில்லை.  இவ்வகையில் மிகவும் தொன்மையான நிலநடுக்கம் மற்றும் கடல்கோள் பற்றிய செய்தியைக் குறிப்பிடும் இலக்கியமாக மணிமேகலை உள்ளது.

உருவான இடம் - நிலநடுக்கம் உருவான இடம் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.  அது “நீண்ட நிலம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  நிலத்தை அதன் பரப்பளவினால் குறிப்பிடாமல் நீளத்தினால் குறிப்பிடுகிறது.  இதனால் அது ஒரு நீண்ட தீவு என்பது உறுதியாகிறது.
 
இடத்தின் அளவு -  நிலநடுக்கம் எங்கே உண்டாகும்? என்று கண்டறிவதற்கான அறிவியில் தொழில்நுட்பம் ஏதும் இந்நாளில் கண்டறியப்படவில்லை.  
ஆனால் மணிமேகலையில்,  நாகநாட்டில் 400 யோசனை அளவுடைய நிலம் பாதலத்திற்குள் அமிழ்ந்து போகும் என்று, நிலத்தின் அளவு கூறப்பட்டுள்ளது. 
யோசனை என்பது 9 மைல் (14.4 கி.மீ),  
காதம் என்பது பத்துமைல்(16.80)கி.மீ.  
https://kalairajan26.blogspot.com/2014/12/blog-post.html).  
எனவே 400 யோசனை என்பது சுமார் 5,600 கி.மீ. ஆகும்.  அதாவது சுமார் 5600 கி.மீ. அளவுடைய நிலமானது நிலநடுக்கத்தால் புடைபெயர்ந்து கடலின் உள்ளே அமிழ்ந்து போய்விட்டது என்கிறது மணிமேகலை.

காலம் - நிலநடுக்கம் எப்போது உண்டாகும்? என்று கண்டறிவதற்கான அறிவியில் தொழில்நுட்பமும் இந்நாளில் கண்டறியப்படவில்லை.  ஆனால் மணிமேகலையில் இன்னும் 7 நாளில் இங்கே பெருநிலநடுக்கம் உண்டாகும் என்று தெளிவான காலக்கணிப்பு கூறப்பட்டுள்ளது.   எவ்வாறு நிலநடுக்கத்தை  முன்கூட்டியே அந்தத் துறவி கண்டறிந்து மன்னனிடம் வந்து கூறினார்?  அவர் பயன்படுத்திய தொழில் நுட்பம் என்ன? என்று அறியப்படவில்லை.   ஆனால் மணிமேகலை காலத்தில் நிலநடுக்கம் உருவாவதற்கு 7 நாட்களுக்கு முன்பே அதை அறிந்து கொண்டு மன்னனையும் மக்களையும் காப்பாற்றியதாக மணிமேகலை குறிப்பிடுகிறது. 

கருவி - நிலநடுக்கம் எப்போது உண்டாகும்? என்று கண்டறிவதற்கான அறிவியில் தொழில்நுட்பம் ஏதும் இந்நாளில் கண்டறியப்படவில்லை.  

வடக்கே புலம் பெயர்தல் -  நிலநடுக்கம் உண்டாகி நீண்ட நிலம் பூமிக்குள்ளே பாதலத்திற்குள் அமிழ்து அழியப்போகிறது என்ற செய்தி அறிந்தவுடன்,  மன்னன் தனது நாட்டு மக்களுடன் வடதிசை நோக்கிப் பயணத்தான் என்கிறது மணிமேகலை.   அதாவது நிலநடுக்கமும் கடல்கோளும் நிகழும் போது மற்றபிற திசைகளில் தப்பிச் செல்வதை விட வடதிசை நோக்கிப் பயணித்துச் செல்வதே பாதுகாப்பாக அந்த நாட்டு மக்களுக்கு இருந்துள்ளது என்பதை இதன் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.


குறிப்பு: நாவலந்தீவில் [இந்தியாவில்] இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு நிகழ்ந்த, நிலநடுக்கம் குறித்த தகவலை மணிமேகலை - பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை கூறுகிறது.  

மணிமேகலை பத்மபீடத்தை வணங்கி முன்பிறப்பை உணர்தல் -

பத்மபீடத்தைக் கண்டதும் மணிமேகலை தன்னையறியாமல் தனது காந்தள்மலர்போன்ற கரங்களைத் தலைக்குமேலாகக் குவித்து வணங்கினாள்.  நெஞ்சம் உருகி அவள் சிந்திய கண்ணீர் மார்பில் விழுந்து அவளுடைய முலைகளை நனைத்தது.  ஒருவிதப் பரவசநிலையுடன் மெல்ல அடியெடுத்து அந்தப் பீடத்தை மூன்றுமுறை சுற்றிவந்தாள்.  மின்னல்கொடி மேகத்திலிருந்து தரையில் வீழ்ந்ததுபோல தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மணிமேகலை அந்தப் பீடத்தை வணங்கினாள்.  அப்போது புத்தமதநெறியில் ஒழுகிய பிரம்மதருமன் என்ற அருந்தவ முனிவன் ஒருவன் அவளுடைய முற்பிறவியில் கூறியது நினைவில் எழுந்தது. தன் எதிரில் அந்த அருந்தவ முனிவன் நிற்பதுபோன்ற தோற்றம் அவள் சிந்தையில் எழுந்தது.

“நினைவிருக்கிறதா, அய்யனே? அசோதரம் என்னும் பட்டிணம் ஒன்று உண்டு. எப்போதும் கடல் அலைகளின் பேரரவம் அந்த நகரில் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த நகரத்தை இரவிவர்மன் என்ற மன்னன் ஆட்சிபுரிந்துவந்தான். அவனுக்கு அமுதபதி என்ற ஒரு மனைவி. கொள்ளை அழகு அவள்.  செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட மென்மையான பாதங்களை உடையவள். அவளுடைய மணிவயிற்றில் இலக்குமி என்ற பெயருடன் நான் மகளாகப் பிறந்தேன்.  
      
அதே சமயம் அத்திபதி என்றொரு அரசன் இருந்தான். அவன் சித்திபுரம் என்ற நாட்டையாண்டு வந்த சீதரன் என்னும் அரசனின்மகள் நீலபதியை திருமணம் புரிந்துகொண்டான்.   அவர்கள் இருவருக்கும் இராகுலன் என்ற பெயரில் ஒரு புதல்வன் பிறந்து வலிமையுடன் வளர்ந்துவந்தான்.  இலக்குமிக்கு மணப்பருவம் எய்தியவுடன், சித்திபுர மன்னன்மகன் இராகுலனை மணமகனாக மணம்பேசினர்.  காலைக்கதிரின் ஒளிக்கீற்றுபோல மின்னும் இராகுலனை முந்தைய பிறவியில் இலக்குமியாகப் பிறந்த நான் மணம்புரிந்து அவனுடைய நாட்டை அடைந்தேன்.  எங்கள் இல்லறவாழ்வு இனிதாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் ஒருநாள் உன்னைக் கண்டு வாழையடிவாழையாகத் தொழப்பட்டு வணங்கப்படும் உங்கள் (பிரம்மதருமன் ) திருவடிகளில் பணிந்தோம்.   அப்போது  நீங்கள் சொன்னது நினைவில் இருக்கிறதா, பெருமானே?” என்று கேட்டாள் மணிமேகலை.
அன்று அவர் சொன்னது நினைவில் எழுந்தது.

“ இன்னும் பதினாறு நாட்கள்தான் உன் கணவன் உயிருடன் இருப்பான். அவன் காலம் வரும்போது திட்டிவிடம் என்ற கொடிய நஞ்சுடைய பாம்பினால் தீண்டப்பட்டு உயிர்துறப்பான்.  உடனே நீயும் அவனுடன் உடன்கட்டை ஏறி தீயில் உயிரை விடுவாய். பழவினையின் காரணமாக நடைபெற இருக்கும் செயல்கள் எதுவும் உனக்கு இந்த ஊரில் இல்லாததால், காவேரி மன்னனின் மகளாகப் பிறந்த காவேரிநதி கன்னி நதியாகக் கடலில் கலக்கும் காவேரிப்பட்டிணம்புகார் என்று பெயர்களுள்ள ஊரில் பிறப்பாய்,’ என்று கூறினீர்களே, நினைவிருக்கிறதா?”  ‘அப்போது உனக்கு ஒரு பெரிய இடர் நேரிடும்.  உன்னுடைய குலதெய்வமான  மணிமேகலாதெய்வம்,  இளவரசன் 
உதயகுமாரனிட மிருந்து உன்னைக் காப்பாற்றி, அந்தத் துயரை நீக்கும்பொருட்டு உன்னைத் தொலைவில் உள்ள தீவு ஒன்றில் கொண்டுவைத்து உன்னுடைய துன்பத்தைத் தீர்க்கும்,’ என்று என்னிடம் கூறினீர்கள். நினைவிருக்கிறதா?”  “ ‘நாகநாட்டு  மன்னர்கள்  இருவரும் அங்கு வந்த புத்தபிரானின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் ஒழிந்த அந்நாளில் முற்பிறப்பு இரகசியங்களைக் கூறும் பத்மபீடம் தோன்றும்.’ என்றீர்கள். 
அந்த புத்தபீடத்தின்முன் வந்து நிற்கும்போது, என்னுடைய முந்தைய பிறவி குறித்த இரகசியம் எனக்கு வெளிப்படும்,’ என்றீர்கள். இப்போது  எனக்கு முற்பிறவி  முழுவதும் தெளிவாகத் தெரிந்துவிட்டது.” என்றவள் சிறிது நேரம் அமைதியுடன் இருந்தாள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக