மதுரைக்கு வந்த சுனாமி வந்ததா?
எப்போது வந்தது?
எப்படி வந்தது?
ஆழிப்பேரலை (சுனாமி) மீண்டும் வருமா?
வந்தால் என்ன செய்வது? எப்படிச் செய்வது?
அனைத்து வல்லரசுகளும் பயப்படுகின்றன.
உலகமக்கள் எல்லாம் உயிருக்கு அஞ்சுகின்றனர்.
சப்பான் நாட்டில் சுனாமியால் அணுஉலை எரிந்தது.
தமிழ்நாட்டிலும் இதுபோல் சுனாமி வந்தால், கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். எனவே அணுமின்நிலையத்தை அரைகிலோமீட்டர் தள்ளிக் கட்டவேண்டும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் மதுரைக்கு சுனாமி வந்துள்ளது!
எப்போது வந்தது? எப்படி வந்தது? என்ன என்ன அழிந்தன? யார் யார் பிழைத்தார்கள்?
எப்போது வந்தது?
அதுலகீர்த்தி என இருபத்திரண்டு மைந்தர் வழிவழியாக, பாண்டிய நாட்டைக் காத்துவந்தனர். இவர்களுள், பழிதவிர் அதுலகீர்த்திபாண்டியன் என்னும் மன்னனின் மகன் கீர்த்திபூசணன் செங்கோலோச்சி ஆட்சி செய்து வந்த காலத்தில் ஒருநாள் ஆழிப்பேரலை பொங்கி மதுரை வரை வங்கக்கடல் வந்துள்ளது.
எப்படி வந்தது?
கருங்கடல் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலே எழுந்து, பெரிய உருவம் பெற்று, சீறிப் பாய்ந்து, வெகுண்டு ஆரவாரித்து, காவல் கரையைக் கடந்து வந்தன. விண்ணுலகையும், மண்ணுலகையும், இணைக்கின்ற பெரிய பொன்னையுடைய எட்டு மலைகளும், பெருங்கடி நேமி(சக்கரம்) வரை(பாதுகாப்புச் சுவர்) யும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள கிரியும் தங்களது நிலையிலிருந்து பெயர்ந்தன. பிரளயத்தின்மீது இன்னுமொரு பிரளயம் கோர்த்து வந்தது.
இவை அனைத்தும், அப்பெருஞ் சலதி வெள்ளத்தின் உள்ளே சென்று விட்டன. கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவு இலாத பெரிய பூமியும், ஏழு தீபகற்பங்களும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கிநிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்த மலைவகைகளும் கடல் அலைகளுள் சென்றன.
என்ன என்ன அழிந்தன? யார் யார் பிழைத்தார்கள்?
ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கு முறை ஆழிப்பேரலையானது (சுனாமி) மதுரைக்கு வந்து சென்றதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.
சங்க காலத்திலே, பொங்கி வந்த ஆழிப்பேரலையானது தமிழகத்தையே அழித்து மேற்கே சென்றுள்ளது. பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது. இதனால் எழுகடலும் பொங்கி எழுந்துள்ளன. அப்போது மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்றமலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையும் திருப்பரங்குன்ற மலையும் மூழ்கடித்துள்ளன. மலைகளையெல்லாம் மூழ்கடித்த அந்த அழித்த ஆழிப்பேரலையானது மேற்குத் தொடர்ச்சி மலையையும் தாண்டிச் சென்று அரபிக்கடலில் கலந்துள்ளது.
மலைகள் எல்லாம் ஆடும்படியாக அடுக்கடுக்காகப் பிரளயம் உண்டானபோது பொங்கி எழுந்த கடல் அலையானது ஒரே சேறும்சகதியுமாக இருந்துள்ளது. இந்த அலையில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.
பிரளயம் வற்றிய போது கடல்நீர் மீண்டும் கடலுக்குள் செல்லும் போது, அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேடாக உள்ளது. இதனால் இந்த இடம் “முகவை“ என்றும் சேதுக்கரை என்றும் பெயர் பெறலானது. இந்த இடங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழரின் தொன்மைச் சான்றாதாரங்கள் எளிதில் கிடைக்கும்.
அன்பன்
முனைவர் நா.ரா.கி. காளைராசன்
18 பிப்ரவரி 2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக