அழகர்கோயிலில் கிடப்பது
கல்லா? கல்மரமா?
அழகர்மலைக்கோயில் அடிவாரத்திலிருந்து உயரத்தில் உள்ள அருள்மிகு இராக்கச்சி யம்மன் தீர்த்தக்கரை வரை சுமார் 4கி.மீ. தூரம். இந்தப் பாதையில் எத்தனையோ பாறைகள் உள்ளன. அழகர்கோயில் பழமுதிர்சோலை அருள்மிகு சுப்பிரமணியர் கோயிலுக்கும் அருள்மிகு இராக்கச்சியம்மன் கோயிலுக்கும் செல்லும் பாதையில், இரண்டு மலைகளுக்கு இடையே உள்ள கணவாய் போன்றுள்ள நடைப்பாதையில், அந்தப் பாதை ஓரிடத்தில் இடதுபுறமாகத் திரும்புகிறது. பேருந்தில் செல்லும் பாதையும் நடந்து செல்லும் பாதையும் இந்த இடத்தில் ஒன்று சேர்கின்றன. இந்த இடத்தில் பாறைகளுக்கு இடையே உள்கூடான ஒரு மரம் புதைந்து கிடப்பதைக் காணலாம்.
இது பார்ப்பதற்கு மரம் போன்று தோன்றினாலும், இது மரம் அல்ல! இது ஒரு பாறை. வடிவத்தினால் இது மரம் போன்று தெரிவதால், இது ஒரு மரமாக இருந்து கல்லாக மாறியிருக்கலாம்.
இது ஒரு மரமாக இருந்து கல்லாக மாறியிருக்கும் “கல்மரம்” போன்ற தோற்றத்தில் உள்ளது. ஆயுதங்கள் ஏதும் இல்லாமலேயே கைகளால் அதன் பாகங்களை பிரித்தெடுத்துப் பார்க்க முடிந்தது. இந்தப் பாறையின் சிதைந்த பகுதியைக் கையால் நிமிட்டிப் பார்த்தால், குறுனைகள் (grains) வருகின்றன. இந்தக் குறுனைகளை நன்கு கழுவிப் பார்த்தால் பல வண்ணங்கள் கொண்ட படிகக்கல் (Quartz, குவார்ட்ஸ்) போன்று இருந்தன.
அழகா்காேயிலில் இருந்து எடுத்து வந்த பாறைகளின் சிறுசிறு பகுதிகளைப் புவியியல் பேராசிரியராகப் பணியாற்றும் நண்பரிடம் காட்டியபோது, அவா் இது, '' Highly Sheared / well defined cleavage along which the rock gets peeled.'' என்று கருத்துத் தெரிவித்தார்.
புவியியல் துறையில் பணியாற்றிய நண்பர் ஒருவர், இது "cleavage along which the rock gets cleaved" என்றிருக்க வேண்டும். peeling வேறு cleaving வேறு. CLEAVAGE PLANE என்பது A REGULAR PLANE OF FRACTURE. PEELING என்பது வேறு...ONION PEEL......THE PAINT IS PEELING OFF..... என்று கருத்துத் தெரிவித்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வுமாணவர் ஒருவர், நாகமலையில் உள்ள sedimentary கற்களை XRD முறையில் ஆய்வு செய்துள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரை ஒன்று படித்தேன். XRD ஆய்வில் ஒரு கல்லின் , கனிமத்தின், தாதுவின் மூலக்கூறுகளை அறியலாம். இது ஒரு இயற்பியல் சார்ந்த ஆய்வு முறை. ஒரு பொருளின் மாதிரியில் (SAMPLE) என்னென்ன தனிமங்கள் உள்ளன என இந்த ஆய்வில் துள்ளியமாக அறியலாம்.
அழகர்கோயிலில் உள்ளது சாதாரணக் கல்லா? அல்லது கல்மரமா? என்று உறுதி செய்வதற்காக, XRD ஆய்விற்கு இந்தக் கல்மரத்தை உட்படுத்தினால் என்ன என்று மனதிற்குள் தோன்றியது.
எனவே இந்தக் கல்மரத்தின் மேல்பகுதி, உள்பகுதி என்று சில மாதிரிகளை அதிலிருநது சிறிது பெயர்த்தெடுத்து XRD சோதனைக்கு உட்படுத்தினேன்.
சோதனை மாதிரி 1 : அழகர்கோயிலில் மரம் போன்று எனக்குத் தோன்றியதின் மேற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதன் துகள்கள்.
சோதனை மாதிரி 2: அழகர்கோயிலில் மரம் போன்று எனக்குத் தோன்றியதின் உட்பகுதி இருந்து எடுக்கப்பட்டதன் துகள்கள்.
சோதனை மாதிரி 3: திருவக்கரை கல்மரத்தில் இருந்து எடுக்கப்பட்டதன் துகள்கள்.
மேற்கண்ட இந்த மூன்று மாதிரிகளையும் XRD என்ற முறையில் ஆய்வுக்கு உட்படுத்தினேன். ஆய்வின் முடிவில் மேற்கண்ட மூன்று மாதிரிகளுமே ஒத்தநிலையில் உள்ள மூலக்கூறுகளால் ஆனவை என்று முடிவுகள் கிடைத்தன.
அதாவது XRD ஆய்வின்படி திருவக்கரை கல்மரத்தின் பௌதிக இயல்புகள் அனைத்தும் அழகர்கோயில் கல்மரத்திற்கும் இருந்தது. திருவக்கரையில் உள்ளது கல்மரம் என்றால் அழகர்கோயிலில் உள்ளதும் கல்மரம் தான் என்று முடிவாகிறது.
அழகர்கோயில் கல்மரத்தில் மரப்பட்டைகள் போன்று தோற்றம் தெரிகிறது. ஆனால் இந்தக் கல்மரத்தின் முழுவடிவத்தையும் காணமுடியாதபடி மண்ணும் செடிகொடிகளும் மறைத்துள்ளன. இதன் பின்பகுதியையும் பார்க்க வேண்டும். இதன் பின்பகுதி மரம் போன்று வட்டவடிவில் இருக்கிறதா? என உறுதி செய்ய வேண்டியுள்ளது!
இதன் பின்பகுதியானது மரம் போன்ற தோற்றத்தில் அமைந்து இருந்தால், இது 100 % “கல்மரம்தான்“ என உறுதி செய்து விடலாம். கடல்கோள் நிகழ்வின் போது, இந்த மரம் கிடக்கும் உயரமான இந்த இடம்வரை கடல்வெள்ளம் வந்துள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் உறுதிப்படுத்திடலாம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
1 May 2016, 18:09
அழகர்கோயில் கல்மரம் படங்கள் அனைத்தும் இந்த முகவரியில் பதிவு காணக்கிடைக்கும். https://drive.google.com/file/d/0B02g7RFB0HurWWpUbEJNX2FUbDg/view?usp=sharing
--------------------------------------------------------------
அழகர்கோயில் மலையில் மற்றொரு கல்மரம். 2017ஆம் வருடம் அழகர்கோயிலுக்குச் செல்லும் போது, மலைச்சாலை தொடங்கும் இடத்திற்கு அருகிலேயே கல்மரம் போன்ற வடிவத்தில் பாறைகளுக்குக் கீழே இருப்பதைக் கண்டேன்.
மஞ்சள் கோட்டிற்குள் உள்ளது ஒரு மரம் போன்று தெரிகிறது அல்லவா, அதன் பகுதிகளைக் கை நெகத்தால் பெயர்த்து எடுத்துள்ளேன். இதைப் பொக்குப்பாறை என்கின்றனர் மதுரைவாசிகள். மஞ்சள் கோட்டிற்கு மேலே உள்ளது இறுகிய கடினமான பாறை. கடினமான பாறைக்குக் கீழே கல்மரம் போன்ற வடிவத்தில் உள்ளது சாதாரணக் கல்லா? அல்லது கல்மரமா? என ஆராயந்து பார்க்க வேண்டும். இதன் பின்பகுதியைத் தோண்டிப் பார்த்து, இதன் வடிவம் மரம் போன்று இருந்தால், இதையும் ஒரு கல்மரம் என உறுதி செய்யலாம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
11.07.2017
-----------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக