புதன், 26 அக்டோபர், 2016

Theory of Tsunamis கூடல் இலங்கு குருமணி (கீழடியில் புதையுண்டுள்ள கோயில்)

Theory of Tsunamis 
கூடல் இலங்கு குருமணி
(கீழடியில் புதையுண்டுள்ள கோயில்)




மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 12கி.மீ. தொலைவில் உள்ள சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற ஊருக்கு அருகே உள்ள பள்ளிச்சந்தை என்ற இடத்தில் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து பூமிக்குள் புதைந்துள்ள மிகவும் தொன்மையான நகர் ஒன்றைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்துள்ளனர்.
சிறப்பாகச் செயல்பட்டு தமிழரின் தொன்மையான நகரைக் கண்டறிந்து உலகறியச் செய்த தொல்லியல் துறையினருக்கு நமது நன்றிகைளைத் தெரிவித்துக் கொள்வோம்.

தொல்லியல் துறையினர் இந்த அகழாய்வு நடைபெறும் இடம் மணலூர் கண்மாயின் மேற்குப் பகுதியாகும்.  மணலூர் மிகவும் தொன்மையான ஊராகும்.  இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் இந்தவூருக்கு மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.

உக்கிரபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பிரளயம் ஏற்பட்டு சுனாமி உண்டாகி மதுரை நகர்வரை வந்துள்ளது. அப்போது மணவூரை மண்மூடி விட்டது.

மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணப் பாடல்களில் உள்ளன.  இந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த குலசேகரபாண்டியன் என்ற மன்னனே தற்போதுள்ள மதுரை நகரைத் திட்டமிட்டு உருவாக்கினான். மதுரை நகரில் மக்கள் அனைவரையும் குடியேற்றம் செய்தான்.

மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணத்தில் கீழ்க்கண்ட மூன்று பாடல்களில் உள்ளன.

இன்ன ரம்புள ரேழிசை யெழான்மிடற் றளிகள்
கின்ன ரம்பயில் கடம்பமா வனத்தினின் கீழ்சார்த்
தென்னர் சேகர னெனுங்குல சேகர னுலக
மன்னர் சேகர னரசுசெய் திருப்பது மணவூர்.  (திருவிளையாடற் புராணப் பாடல்)

தீந்தண் புனல்சூழ் வடபுலத்து மணவூ ரென்னுந் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திருமரபின் விளங்குஞ் சோம சேகரனென்
றாய்ந்த கேள்வி யவனிடத்துத் திருமா தென்ன வவதரித்த
காந்தி மதியை மணம்பேச விருந்தா ரற்றைக் கனையிருள்வாய்.  (திருவிளையாடற் புராணப் பாடல்)

நென்ன லெல்லை மணம்பேச நினைந்த வாறே யமைச்சர்மதி
மன்னர் பெருமான் றமரோடு மணவூர் நோக்கி வழிவருவார்
அன்ன வேற்தன் றனைக்கண்டா ரடல்வேற் குமர னனையானெந்
தென்னர் பெருமான் குமரனுக்குன் றிருவைத் தருதி யெனவனையான்.  (திருவிளையாடற் புராணப் பாடல்)

தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர்.  புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன.  மணவூரின் தொன்மையையும் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.

அன்பன்
கி.காளைராசன்