சனி, 9 நவம்பர், 2019

கல்லா? கல்மரமா?

கல்லா? கல்மரமா?


சிவகங்கை மாவட்டத்தில் கல்லாகி போன காதலர்களின் கதை 
முகநூல்பதிவு -  Sugar Jayabalan  9 நவம்பர், 2018, பிற்பகல் 7:55


நூற்றாண்டுகளை கடந்து இன்றும் இப்பகுதி மக்களால் நினைவு கூறப்படுகிறது. மானாமதுரை- சிவகங்கை சாலையில் வேலூர் விலக்கு ரோட்டில் ஒரு கி.மீ. தூரம் சென்றால், அதிகரை எனும் கிராமத்திற்கு கிளைச்சாலை பிரிகிறது. நத்தைபுரக்கி கிராமத்தை அடுத்த அதன் அருகே உள்ள பொட்டல் வெளியில் ஐந்தரை அடி உயரத்தில் தூண் போல ஒரு கல்லும், நான்கடி உயரத்தில் சாய்ந்த நிலையில் ஒரு கல்லும் உள்ளன. இந்த கற்தூண்கள் காதல் தோல்வியால் கல்லாகி போன காதலர்கள் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

மேலும், அந்தக் கற்களின் காதல் கதை என அப்பகுதி மக்கள் பிளாஷ்பேக் ஒன்றையும் சொல்கிறார்கள். அதாவது, பழங்காலத்தில் சகோதர சகோதரி உறவு உள்ள இளைஞனும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்களது காதலை அவர்கள் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வந்து, கண்ணீர் சிந்தியபடி கடவுளை வேண்டி கல்லாக மாறி விட்டனர் என்கிறார்கள் அவர்கள். அதோடு, இந்த தூண்களை வழிபட்டால் தங்களின் காதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இப்பகுதி காதலர்களின் மத்தியில் நிலவுகிறது.

இதனால் பல நூறாண்டுகள் கடந்தும் உறுதியாக கல்லாக நிற்கும் இந்த காதலர்களை வழிபட இன்றைய இமெயில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் காதலர்கள் படையாக வந்து கொண்டிருக்கின்றனர். இங்கு வழிபட்டு, காதல் நிறைவேறி திருமணம் முடித்துக் கொண்ட ஜோடிகளும் மீண்டும் வருகின்றனர்.

இதையெல்லாம் மிஞ்சும் விதமாக நல்ல காதலன் அல்லது நல்ல காதலி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வருபவர்களும் இங்கு வருவது உண்டாம்.

கடந்த சில ஆண்டுகளாக இங்கு நிறைய காதல் ஜோடிகள் வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவ்வாறு வருபவர்களில் சிலர், இந்தக் கற்களின் கீழ் வளையல், மஞ்சள், பொட்டு, காசு வைத்து சாமி கும்பிட்டு விட்டு செல்கின்றனராம். இரண்டே இரண்டு கற்கள், வெயில், மழையில் நனைந்தபடி.. காதல் சின்னமாக இதை சிலர் சொல்லப் போக.. இந்த கல்வட்ட கல்லுக்குள் புதைந்துள்ள மர்மம் என்னவோ.. தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்து விளக்கினால்தான் உண்டு!
-சிவகங்கை சீமை-