புதன், 30 மே, 2018

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மண் கடல் வௌவலின் (சிறுமலை)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)

மண் கடல் வௌவலின் (சிறுமலை)


“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ (104).  மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றிப் பண்டைய பாண்டிய நாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து,  தமிழகத்திற்குள் புகுந்து அழித்தது உண்மையா?  கடல்மண் தமிழகத்தில் கிடக்கின்றனவா? கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் தமிழகத்தில் படிந்துள்ளனவா?
அழகர்கோயில், திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா, வத்தலக்குண்டு முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகள் உள்ளன. மேலும் மணவூர் (கீழடி), திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா, பெனுகொண்டா, புத்பூர், வத்தலக்குண்டு முதலான ஊர்களில் கடல்மண் படிமங்கள் உள்ளன. 
சுற்றிலும் சிறுசிறு மலைக்குன்றுகள் இருக்க, அவற்றின் நடுவில் சிறுமலை கிராமம் அமைந்துள்ளது.  சிறுமலையில் பிரளயம் பேர்த்த பாறைகள் உள்ளனவா? கடல் வௌவிய மண் படிமங்கள் உள்ளனவா?


தமிழகத்தில் உள்ள கிரானைட் மலைகளில், கிரானைட் பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறைகள் எனப் பொதுமக்களால் அழைக்கப்படும் பாறைகளும் உள்ளன.  ஆனால் சிறுமலையில் கிரானைட் பாறைகள், பொக்குப்பாறைகள் இவற்றுடன் பல்வேறுபட்ட பாறைகளும்  காணக் கிடக்கின்றன. 

இதில் சிறப்பாக, ‘வெள்ளியங்கிரி‘ என்று அழைக்கப்படும் ஒரு சிறு குன்றின் உச்சிக்குச் செல்லும் வழி நெடுகிலும் இளஞ் செந்நிறத்தில் பொக்குப்பாறைகளை அதிகமாகக் காணமுடிகிறது.
இளஞ் செஞ்நிறத்தில் உள்ள இந்தப் பொக்குப் பாறையில் ஊசிமுனை அளவிற்குச் சிறுசிறு துளைகளைக் காணமுடிகிறது.  இத்துளைகளை மூடியபடி இளங்கருப்பு நிறத்தில் துகள்களைக் காணமுடிகிறது. இந்தக் கருமையான சிறு துகள்களைத் தனியாகப் பிரித்து எடுத்துப் பார்த்தபோது, அவை மண்ணாகவோ மணலாகவோ பாறையாகவே இல்லை.  மாறாக மக்கிய தாவரமாகவோ அல்லது கடல்வாழ் நுண்ணுயிர் போன்று கண்ணுக்குத் தெரிகிறது.

சிறுமலை வெள்ளியங்கிரியில் உள்ள இந்தப் பொக்குப் பாறைகளில் படிந்துள்ள சிறுசிறு கருமைநிறத் துகள்களை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து அறிய வேண்டும்.
கடல் இருக்கும் திசைநோக்கித் தமிழகத்தில் உள்ள பாறைகள் ஏன் பேர்ந்துள்ளன ? தமிழகத்தில் எரிமலையே இல்லாதபோது எரிமலையுடன் தொடர்புடைய மண் திட்டுகள் எவ்வாறு உண்டாகி உள்ளன?
இதற்கான காரணங்கள் அறிவியல் அடிப்படையில் கண்டறிப் பட்டுள்ளதாகத் தெரியவில்லை. 



பிரளயத்தில் ஏற்பட்ட பெருஞ் சுனாமியானது பாறைகளைப் பேர்த்தெடுத்துப் போட்ட காரணத்தினால்தான், அவை கடல் இருக்கும் திசைநோக்கிப் பெயர்ந்துள்ளன என்று யூகிக்க முடிகிறது.  மேலும், கடல்மண் வௌவிய காரணத்தினால்தான் சாம்பல்நிற மண்திட்டுக்கள் கிரானைட் பாறை இடுக்குகளில் படிந்துள்ளன என்றும் யூகிக்க முடிகிறது.  
மேற்கண்ட ஐயங்களுக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் கிடைக்கும்வரை, பிரளயத்தில் ஏற்பட்ட பெருஞ் சுனாமியால் மதுரையும் பண்டைத் தமிழகமும் அழிந்துள்ளன என்ற தமிழ் இலக்கியக் கருத்துகளை உண்மை என்றே கருத வேண்டியுள்ளது.
அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 16 (30 மே 2017) செவ்வாய் கிழமை.

திங்கள், 28 மே, 2018

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மலி திரை ஊர்ந்து (தட்டோன் - மயன்மார்)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)

மலி திரை ஊர்ந்து (தட்டோன் - மயன்மார்)



“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள குன்றுகளில் எல்லாம் கடல் வௌவிய மண்திட்டுக்கள் கிடப்பதைக் காணமுடிகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை முழுவதும் கிரானைட் பாறைகளால் ஆனது. ஆனால் இந்தக் குன்றின் உச்சியில் மண்திட்டுக்களைக் காணமுடிகிறது. இதே போன்று தமிழகத்தில் மற்றபிற கிரானைட் குன்றுகளின் உச்சியிலும் இது போன்ற மண் திட்டுக்களைக் காண முடிகிறது. இந்த மண் திட்டுக்கள் சுனாமியால் அடித்து வரப்பட்ட மண்படிமங்களா? இவற்றில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதேனும் உள்ளனவா? என அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
மதுரையானது கடற்கரையில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது. வங்கக்கடல் இவ்வளவு தொலைவு வந்து தாக்கியிருக்குமானால், வங்கக்கடற்கரையில் உள்ள மியான்மார் (பர்மா) தேசத்திலும் இதே சுனாமியின் தாக்கம் இருக்க வேண்டும் அல்லவா?
ஆமாம். பர்மாவில் உள்ள கிரானைட் மலைகளிலும் தமிழக கிரானைட் மலைகளில் படிந்துள்ளது போன்ற மண்படிமங்களை அதிக அளவில் காணமுடிகிறது. 

சிவகங்கை மாவட்டம் திருமலையில் எடுக்கப்பட்ட மண்படிமத்தின் படமும், பர்மாவில் தட்டோனில் எடுக்கப்பட்ட மண்படிமத்தின் படமும் மேலே உள்ளன. இந்த இரண்டு மண் படிமங்களும் ஒன்றுபோலவே உள்ளன.
மேலும் மதுரைக்கு அருகே மணவூரில் (கீழடியில்) நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி போன்று பர்மா தட்டோன் என்ற ஊரிலும் நடைபெற்றுள்ளது. தட்டோனிலும் மணவூரில் (கீழடியில்) புதையுண்ட நகரத்தில் உள்ள மண் படிமங்களைப் போன்றே மண்படிமங்கள் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இதனால் பர்மாவில் உள்ள தட்டோனும் தமிழகத்தில் உள்ள மணவூரும் (கீழடியும்) ஒரே காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் அழிந்திருக்கும் எனக் கருதமுடிகிறது.
பர்மாவில் யுரோஞ்சி என்ற ஊரில் உள்ள மலைப்பகுதியில் உள்ள மண் திட்டுக்களும், ஆந்திராவில் பெனுகொண்டாவில் உள்ள மலைப்பகுதியில் உள்ள மண் திட்டுக்களும் ஒன்றுபோல் உள்ளதைக் காணமுடிகிறது.
இதனால், பர்மாவில் உள்ள தட்டோன் மற்றும் யுரோஞ்சி ஆகிய ஊர்கள் சுனாமியினால் அழிந்துள்ளன எனக் கண்டறியப்பட்டால், தமிழகத்தில் திருமலை முதற்கொண்டு ஆந்திராவில் உள்ள பெனுகொண்டாவரை சுனாமியினால்தான் அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.  (மண்மாதிரிகள் ஆய்வில் உள்ளன).

கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,

சனி, 26 மே, 2018

இந்துஸ்தான் என்றால் என்ன ?


இந்துஸ்தான்
கிர்கிஸ்தான்
கசகஸ்தான்
அசர்பைஸ்தான்
துர்க்மெனிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
உஷ்பெக்கிஸ்தான்
பலுக்கிஸ்தான்  என்று நாடுகளின் பெயர்கள் உள்ளன.

"ஸ்தானம்" என்றால் வடமொழியில் இடம் என்று பொருள். "ஸ்தான்" என்ற சொல் நாட்டைக் குறிக்கிறது.
இந்துஸ்தான் என்றால் என்ன பொருள் ?
பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர்.  சோழர்கள் சூரிய வம்சத்தினர்.  சேரர்கள் அக்னி வம்சத்தினர்.
“இந்து” என்றால் சந்திரன் என்று பொருள்.  "ஸ்தான்" என்ற சொல் நாட்டைக் குறிக்கும்.
இந்துஸ்தான் என்றால் சந்திரவம்சத்தினர் ஆண்ட தேசம் என்று பொருள்.
இந்துக்கள் என்றால் சந்திரவம்சத்தினர் என்று பொருள்.
இந்திரன், இந்துராணி என்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்.

பிறைச்சந்திரனைக் கும்பிடுவோர் அனைவரும் பாண்டியர்களே, இந்துக்களே, இந்துஸ்தானியார்களே என்று சொல்லலாம்.

கிர்கிஸ்தான் என்றால் என்ன பொருள்?
கிர் என்றால் மலை.  கிர்கிஸ்தான் என்றால் மலைநாடு என்று பொருள்.

அதுசரி, பாக்கிஸ்தான் என்றால் என்ன பொருள்?
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 18 மே, 2018

Theory of Tsunamis, மதுரைக்கு வந்த சுனாமி, (பகுதி - 5), மலி திரை ஊர்ந்து, மண் கடல் வௌவலின் (தோப்பூர்)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மலி திரை ஊர்ந்து
மண் கடல் வௌவலின் (தோப்பூர்) 



தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம். பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?

ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.


சேலம் தருமபுரி நெடுஞ்சாலையில் தோப்பூர் அருகே உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.
பஃறுளி ஆற்றையும், பன்மலை அடுக்கத்தையும், குமரிக் கோட்டையும் கொண்ட கொடுங்கடல் தமிழகம் கேரளம் ஆந்திரம் கருநாடகம் முதலாகத் தென்னிந்தியா முழுவதையும் தாக்கி அழித்துள்ள காரணத்தினால், தென்னிந்தியா முழுவதும் உள்ள மலைகளில் மேலும் கீழும் கடினமான பாறைகள் இருக்க, (மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று) நடுவில் மண்திட்டுகள் படிந்திருப்பதைக் காணலாம்.

கிருஷ்ணகிரி அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

(குறிப்பு – இந்த மண்படிமங்களில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதேனும் உள்ளனவா? என அறிவியல் அடிப்படையில் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன)
கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,

புதன், 16 மே, 2018

Theory of Tsunamis, "மலி திரை ஊர்ந்து” திருமலை

Theory of Tsunamis, "மலி திரை ஊர்ந்து” திருமலை

கீழடி அருகே புதையுண்டுள்ள நகரம் கடல்கொண்ட மதுரையா ?
"மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியதா" ?

தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலையின் கிழக்கே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.  
திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே உள்ள இந்த ஊர் உள்ளது.  மாடமலி மதுரை திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே உள்ளது என்று நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் பாடியுள்ளார்.  இதனால் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரமே பண்டைய மதுரையாக இருக்க வேண்டும்.
 குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் இப்போதுள்ள மதுரைநகரம் புனர்நிர்மாணம் செய்யப்பெற்று மக்கள் எல்லாம் அங்கே குடியமர்த்தப் பெற்றுள்ளனர்.  பழைமையான இந்த நகரத்திற்கும் மதுரை என்று பெயர், புதிதாக நிருமாணம் செய்யப்பட்ட நகரத்திற்கும் மதுரை என்று பெயர்.  எனவே பெயரில் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக இந்தத் தொன்மையான நகரத்திற்கு மணவூர் என்ற பெயரைச் சூட்டியுள்ளனர்.
எனவே கீழடி என்ற ஊரின் அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டுபிடித்துள்ள நகரின் பண்டைய பெயர்  “மணவூர்“ ஆகும். சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன். இவன் மணவூரில் பிறந்த காந்திமதியை மணம் செய்து கொண்டான். இதன் காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது. பின்னர் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் குலசேகர பாண்டியன். இவன் மதுரை மாநகரைத் திட்டமிட்டு உருவாக்கி அங்கே மணவூர் மக்களை எல்லாம் குடியமர்த்தினான் என்கிறது திருவிளையாடற் புராணம். 

அப்படியானால், பண்டைய மதுரையும் மணவூரும் எப்படி அழிந்தன? கீர்த்திபூடண பாண்டியன் ஆட்சிக் காலத்தில், மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்றும், அது அடங்கும் முன்னரே மற்றொரு பிரளயம் தோன்றி மீண்டும் அழித்தது என்றும் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டதாகச்“ சிலப்பதிகாரம் கூறுகிறது(சிலம்பு. 11. 19-20).
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்து, மண்ணை மூடிக் கவர்ந்துள்ளது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! தமிழகத்தில் உள்ள குன்றுகளின் மேற்குப் பகுதிகளில் எல்லாம் கடல்மண் கிடப்பதைக் காணமுடிகிறது.

கடல் வௌவிய மண்படிமங்கள் காணக்கிடக்கின்றனவா?


மேலே உள்ள படத்தில்,  திண்டுக்கல் பழநி சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள ஏற்றத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்க இடையில் “மலிதிரை ஊர்ந்து கடல் வௌவிய மண்“ படிந்துள்ளதாகக் கட்டுரையாளர் கருதுகிறார்.




மேலே உள்ள இரண்டு படங்களிலும், சிவகங்கை மாவட்டம் திருமலையில் உள்ள பாறை இடுக்குகளில் கடல்மண் படிந்துள்ளதா? என்ற தேடுதல் தொடர்கிறது ... ...  
கிரானைட் பாறைகளின் இடையே படிந்துள்ள இந்தவகையான பொக்குப் பாறைகள் சுனாமியினால் அடித்து வரப்பட்ட கடல்களிமண்ணால் உருவானை எனக் கருதுகிறேன்.

(குறிப்பு –  மண்மாதிரிகளை அறிவியல் அடிப்படையில் ஆராயும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.)

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
------------------------------------------------
சங்கப் பாடல்களில் மதுரையும் கூடலும் 
சங்கப்பாடல்களில் மதுரை என்ற சொல் 9 வரிகளிலும்.......
கூடல் என்ற சொல் 38 வரிகளிலும் இடம் பெற்றுள்ளன....
(நன்றி - http://tamilconcordance.in/sangconc)

சங்கப்பாடல்களில் மதுரை -
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை/சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ - மது 699,700
இடை நெறி தாக்கு-உற்றது ஏய்ப்ப அடல் மதுரை/ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி  11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் - பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5

சங்கப்பாடல்களில் கூடல் (38) -
மாடம் மலி மறுகின் கூடல் குட-வயின் - திரு 71
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்/நாள்_அங்காடி நனம் தலை கம்பலை - மது 429,430
மலி ஓதத்து ஒலி கூடல்/தீது நீங்க கடல் ஆடியும் - பட் 98,99
பெரும் பெயர் கூடல் அன்ன நின் - நற் 39/10
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண் - நற் 298/9
மூன்று உடன் கூடிய கூடல் அனையை - பதி 50/7
குன்றத்தான் கூடல் வரவு - பரி 8/28
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்/மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ - பரி  8/29,30
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல்/ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் - பரி  10/40,41
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்/வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை - பரி  10/112,113
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்/அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை - பரி  10/129,130
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல்/உரைதர வந்தன்று வையை நீர் வையை - பரி  12/31,32
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல்/கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை - பரி  19/8,9
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு - பரி 19/15
கூடல் விழையும் தகைத்து தகை வையை - பரி 20/26
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல்/கடி மதில் பெய்யும் பொழுது - பரி  20/106,107
காமரு வையை கடுகின்றே கூடல்/நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி  24/4,5
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்/மணி எழில் மா மேனி முத்த முறுவல் - பரி  24/46,47
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே - கலி 31/25
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்/தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் - கலி  57/8,9
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்/வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை - கலி  92/11,12
வாடா வேம்பின் வழுதி கூடல்/நாள்_அங்காடி நாறும் நறு நுதல் - அகம் 93/9,10
பொய்யா விழவின் கூடல் பறந்தலை - அகம் 116/14
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது - அகம் 149/14
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் - அகம் 231/13
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய - அகம் 253/6
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய - அகம் 296/12
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் - அகம் 315/7
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் - அகம் 346/20
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே - புறம் 58/13
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல்/விலங்கு இடு பெரு மரம் போல - புறம் 273/5,6
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன - புறம் 347/6

பொன் தேரான் தானும் பொலம் புரிசை கூடலும்/முற்று இன்று வையை துறை - பரி  24/26,27
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் - பரி 34/2
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை - கலி 30/11
கூடலொடு பரங்குன்றின் இடை - பரி 17/23
நெடு மாட கூடற்கு இயல்பு - பரி 35/6
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும்/கை ஊழ் தடுமாற்றம் நன்று - பரி  17/45,46

திங்கள், 14 மே, 2018

Theory of Tsunami, மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) மதுரையை அழித்தியால் :



மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) 
மதுரையை அழித்தியால்

2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய இரண்டு சுனாமிகள் அடுத்தடுத்துத் தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்துள்ளன. அந்நிகழ்ச்சியை ஊழிக்காலம், பிரளயம், கடல்வெள்ளம் என்று திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறுகிறது. இவ்வாறு ஊழிக்காலத்தில் பிரளயத்தில் தோன்றிய கடல்வெள்ளம் மதுரையை மைய இலக்காகக் கொண்டு தாக்கியது என்றும், மதுரைத் தாக்கி அளிக்குமாறு இந்திரன் ஆணையிட்டான் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.
“பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என 
இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள் 
ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து 
அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்“ 

- திருவிளையாடற் புராணம்.
இந்திரனது ஏவலால் மதுரையைக் கடல் அழித்துள்ளது. இதன் காரணமாகத்தான் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சிறப்பான இந்திரவிழா நின்றுபோய் விட்டது போலும். மதுரையை அழித்த இந்திரனை தமிழன் எப்படிப் போற்றுவான்!



கிருஷ்ணன் இந்திரவிழாவை நிறுத்திய கதை - திருமாலின், கிருஷ்ணாவதார காலத்தில், மழைக்கடவுளான இந்திரனுக்கே கோகுலத்தில் வசித்த ஆயர்கள் ஆண்டு தோறும் பூசை செய்து வழிபட்டனர். ஒருமுறை இந்திர வழிபாட்டை, கிருட்டிணன் தடுத்து அருகில் உள்ள மலைக்கு பூசை செய்ய வைத்தார்.  இதனால் கோபம் கொண்ட மழைக் கடவுளான இந்திரன், கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பொழியச் செய்தார். இடி மின்னலுடன் கூடிய தொடர் மழையைக் கண்டு பயந்த கோகுலத்து ஆயர்களையும் ஆவினங்களையும் காக்க கிருட்டிணன், அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினார். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர்”  என்கிறது புராணக்கதை.  திருவிளையாடல் புராணமும் கடல்கோளுக்குப் பிறகு பெருமழை பெய்த செய்தியைப் பதிவு செய்துள்ளது.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்.

திருவிளையாடல் புராணம் ஊழி குறித்த 19 பாடல்களின் தொகுப்பு

ஞாலம் முடித்த ஊழி 



(ஊழி குறித்த திருவிளையாடல் புராணம் 
19 பாடல்களின் தொகுப்பு இது)


ஊழ் குறித்து ஓர் அதிகாரமே இருந்தாலும், ஊழி குறித்து ஒரேயொரு குறள் மட்டுமே உள்ளது.
“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி யெனப்படு வார் “
என்று ஊழியையும் ஆழியையும் தொடர்பு படுத்திக் குறள் கூறுகிறது. திருக்குறள் போன்றே திருவிளையாடல் புராணமும் ஊழியையும் ஆழியையும் சேர்த்தே பாடுகிறது.

ஊழி குறித்த திருவிளையாடல் புராணம் 19 பாடல்களின் தொகுப்பு இது.

1) 202.
புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள்
பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள் 
உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல்.
2) 265.
அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்த ஆழி ஊழிப்
பௌவ நீர்
என்ன ஓங்கப் பாணியால் அமைத்து வேணித் 
தெய்வ நல் நீரைத் தூவிக் கலந்து மா தீர்த்தம் ஆக்கிக் 
கை வரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும்.
3) 625.
சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி 
கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர் 
வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே 
ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.
4) 630.
சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி 
பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில் 
ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக்
காலம் கலிக்கும் கடல்
போன்ற களமர் ஆர்ப்பு.
5) 709.
இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின வெண் கொடி ஞாலம்
முடிக்கும் ஊழி நாள்
உளர் கடும் கால் என மூச் செறி விடநாகம் 
துடிக்க வாய் விடு முவண வண் கொடி முதல் சூழ்ந்து சேவகம் செய்யும் 
கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக் கொடி புடை பெயர்ந்து ஆட.
6) 1037.
பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என 
இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள் 
ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து 
அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்.
7) 1039.
கொதித்தலைக் கரங்கள் அண்ட கூடம் எங்கும் ஊடு போய் 
அதிர்த்து அலைக்க ஊழி நாளில் ஆர்த்து அலைக்கும் நீத்தம் ஆய் 
மதித் தலத்தை எட்டி முட்டி வரும் ஓர் அஞ்சனப் பொருப்பு 
உதித்தல் ஒத்து மண்ணும் விண்ணும் உட்க வந்தது உத்தியே.
8) 1154.
ஐம் பெரும் பூத நிலை திரிந்து ஈர் ஏழ் அடுக்கிய உலகொடு மயன் மால் 
உம்பர் வான் பதமும் உதித்தவாறு ஒடுங்க உருத்தது ஓர் ஊழி வந்து எய்தச் 
செம் பொருள் மறையும் ஒடுங்கிய வழி நாள் செம் சுடர் கடவுள் முன் மலரும் 
வம்பு அவிழ் கமலம் என அரன் திருமுன் மலர்ந்ததால் அகிலமும் மாதோ.
9) 1301.
சூலமோடு அழல் ஏந்தும் சொக்கர் திரு விளையாட்டின் 
சீலமோ நாம் இழைத்த தீ வினையின் திறம் இது வோ 
ஆலமோ உலகம் எலாம் அழிய வரும் பேர் ஊழிக்
காலமோ
எனக் கலங்கிக் கடி நகரம் பனிப்பு எய்த.
10) 1313.
ஊழிநாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்துப் 
பாழிவான் உருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி 
ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா உடல் நெளிய திக்கில் 
சூழி மால் யானை நின்ற நிலை கெடத் துணுக்கம் கொள்ள.
11) 1608.
அத்து அழன்று எரி குண்டம் நின்றும் அகன் பிலத்து எழுவான் என 
பத்து துஞ்சிருள் வாயும் வாய் இருபாலும் வலிய பகிர் மதிக்கு 
ஒத்தும் நஞ்சு இனம் ஒழுகு பற்களும் ஊழி ஆரல் விழிகளும் 
வைத்து அசைந்து ஒரு வெற்பு வந்து என வந்துளான் ஒரு தானவன்.
12) 1761.
மின் அலங்கள் வாகை வேல் விழுப் பெரும் குலத்தினில் 
தென்னவன் தன் ஆணை நேமி திசை எலாம் உருட்டும் நாள் 
முன்னை வைகல் ஊழி தோறும் ஒங்கும் மொய்வரைக்கணே 
மன்னு தண் பராரை ஆல நிழல் மருங்கு மறை முதல்.
13) 1844.
விளை மத ஊற்று மாறி வெகுளியும் செருக்கும் மாறித் 
துளை உடைக் கைமான் தூங்கு நடைய வாய்ச் சாம்பிச் சோர்ந்த 
உளர் தரு ஊழிக் காலினோடும் ஆம் புரவி எய்த்துத் 
தளர் நடை உடைய வாகித் தைவரும் தென்றல் போன்ற.
14) 2074.
வாழிய உலகின் வானோர் மனிதர் புள் விலங்கு மற்றும் 
ஆழிய கரணம் எல்லாம் அசைவு அற அடங்க ஐயன் 
ஏழ் இசை மயமே ஆகி இருந்தன உணர்ந்தோர் உள்ளம்
ஊழியில் ஒருவன் தாள் புக்கு
ஒடுங்கிய தன்மை ஒத்த.
15) 2637.
அறைந்தவித் தெய்வத்து ஆன அனைத்தும் ஓர் ஊழிக் காலத்து
இறந்த நம் தோழன் கண்ட இலிங்கமாம்
அதனால் இங்கே
உறைந்தனம் உறைதலாலே உத்தர ஆலவாய் ஆய்ச் 
சிறந்திடத் தகுவது இன்று முதல் இந்தத் தெய்வத் தானம்.
16) 2977.
கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச் 
சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா 
வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும் 
இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்.
17) 3082.
வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிகள் தம்மைப் 
பழுது இலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து 
முழுது உணர் மறையோர் வேள்விப் புகை அண்ட முடி கீண்டு ஊழி
எழு வட வரை போல் தோன்றும் எழில் தில்லை மூதூர்
சேர்ந்தார்.
18) 3123.
ஏழ் இசை மறை வல்லாளர் சிவபாத இதயர் என்னக் 
காழியில் ஒருவர் உள்ளார் கார் அமண் கங்குல சீப்ப 
ஆழியில் இரவி என்ன ஒரு மகவு அளித்தி என்னா 
ஊழியில் ஒருவன் தாளை உள்கி நோற்று ஒழுகி நின்றார்.
19) 3325.
அடி முடி விலங்கும் புள்ளும் அளந்திடாது அண்டம் கீண்டு 
நெடுகிய நெருப்பு நின்ற நிலை இது முள்வாய்க் கங்க 
வடிவு எடுத்து இருவர் நோற்கும் மலை இது பல்வேறு ஊழி
இடை உற முன்னும் பின்னும் இருக்கும்
இக் குன்றைக் காண்மின்.

‘ஊழிற் பெருவலி யாவுள‘ 
அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்
சித்திரை 31 (14.05.2017) ஞாயிற்றுக் கிழமை.

சனி, 12 மே, 2018

Theory of Tsunamis, மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி -3) பிரளயம் பேர்த்த பாறைகள்

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி -3)


பிரளயம் பேர்த்த பாறைகள்



திருவிளையாடற் புராணத்தில் பிரளயம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மதுரையைச் சுற்றிலும் எட்டு மலைகள் இருந்துள்ளன. பிரளயத்தில் கடல் கரையைக் கடந்து மதுரைத் தாக்கிய போது இந்த மலைகள் எல்லாம் பேர்ந்தன என்கிறது புராணம்.
"கொதித்தெழுந்து தருக்களறக் கொத்தியெடுத் தெத்திசையும்
அதிர்த்தெறிந்து வரைகளெல்லா மகழ்ந்துதிசைப் புறஞ்செல்லப்
பிதிர்த்தெறிந்து மாடநிரை பெயர்த்தெறிந்து பிரளயத்தில்
உதித்தெழுந்து வருவதென வோங்குதிரைக் கடல்வருமால்" 

(திருவிளையாடற் புராணம்)

பொருள் - கடலின் அலைகள் எல்லாம் உயர்ந்து, பொங்கி மேலே எழுந்து, மரங்கள் எல்லாம் முறிய வேருடன் பிடுங்கி எடுத்து, அதிர்த்து எல்லாத் திசைகளிலும் வீசியும், எல்லா மலைகளையும் தோண்டிப் பொடி செய்து திசைப் புறங்களுக்குச் செல்லுமாறு வீசியும், மாட வரிசைகளைப் பெயர்த்து வீசியும், பிரளயத்தில் உதித்து எழுந்து வருவதென கடல் வரும். (பிதிர்த்து - பொடியாக்கி; பிதிர் – பொடி)
"கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி
ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப்
பொருங்கட் கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப்
பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் கோத்த வன்றே"

(திருவிளையாடற் புராணம்)
பொருள் – ஏழு கரிய கடல்களும் ஒரே நேரத்தில் பொங்கி மேலே எழுந்தன. வெகுண்டு சீறி ஆரவாரித்து, காவலாகிய எல்லைகளைக் கடந்தன. விண்ணுலகும் மண்ணுலகும், போர்செய்யும் மதத்தையுடைய எட்டு யானைகளும், பெரிய எட்டு பொன்மலைகளும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள மலையும் அவற்றின் நிலைகளில் இருந்து பெயர்ந்திடுமாறு, பிரளயமாக ஒன்றோடு ஒன்று கோத்தன.









மதுரைக்கு வடக்கே அழகர்கோயில் மலை உள்ளது. இந்த மலையின் பாறைகள் பலவும் பெயர்ந்து காணப்படுகின்றன. “பிரளயம் பேர்த்த பாறைகள்“ சிலவற்றில் எட்டுப் பாறைகளின் படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

கட்டுரையாளர் - 
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன், kalairajan26@gmailcom, 94435 01912,
நாள் - சித்திரை 29 (12.05.2017) வெள்ளிக் கிழமை

Theory of Tsunamis, மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2) மணவூர், மணலூர்,

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2)

பிரளயம் (பெரும் சுனாமி)
ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன.  இதில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில்‘ வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.  இருப்பினும், திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள ஊழிக்காலம், பிரளயம், கடல்கோள் (சுனாமி), பற்றிய செய்திகள் விரிவாக ஆராயப்படாமலேயே உள்ளன.
தொல்லியல்துறையினர் தமிழகத்தில் மிகவும் தொன்மையான இடுகாடுகள் பலவற்றைக் கண்டறிந்து உள்ளனர்.  இவை தவிர்த்து அரிக்கமேடு காவேரிப் பூம்பட்டிணம் ஆகிய ஊர்களின் பண்டைத்தமிழர்களின் தொன்மையான நகரங்கள் கண்டு அறியப்பட்டுள்ளன. இவற்றுடன் கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் வழியில் சாலைக்குக் கிழக்கே தொல்லியல்துறையினர் மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.  


இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.  சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன்.  மணவூரில் பிறந்த காந்திமதியை உக்கிரபாண்டியன் மணம் செய்து கொண்ட காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம்.
மணவூரைத் தலைநகராகக் கொண்டு குலசேகர பாண்டியன் ஆண்டுவந்தான்.  தனஞ்செயன் என்ற வணிகன் கடம்பவனத்தின் நடுவே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதைத் தேவர்கள் வணங்குவதையும் கண்டுவந்து குலசேகர பாண்டிய மன்ன்னிடம் சொல்கிறான்.  மன்னனும் தனது அமைச்சர்களுடன் அங்கே சென்று சிவலிங்கத்தை வணங்கி ஆலயத்தைக் கட்டுகிறான்.   ஆலயத்தைச் சுற்றிலும் மிகவும் அருமையாகத் திட்டமிட்டு ஒரு நகரை உருவாக்குகிறான்.  இவ்வாறு குலசேகர பாண்டியனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமே இன்றைய மதுரை ஆகும்.
பண்டைய மதுரையும் மணவூரும் எப்படி அழிந்தன?
( பெருஞ் சுனாமி ) கடல்வெள்ளம், பிரளயம், ஊழிக்காலம் என்கிறது திருவிளையாடற் புராணம்.
2004ஆம் ஆண்டு தமிழகத்தைத் தாக்கிய சுனாமியைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இதைப்போலப் பலநூறுமடங்கு பெரிதான மிகப்பெரிய சுனாமி ஒன்று பண்டைக்காலத்தில் பாண்டியநாட்டைத் தாக்கியுள்ளது.  அந்நிகழ்ச்சி திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
“அழகுமிக்க அதுலகீர்த்தியும் போன்று, இருபத்திரண்டு மைந்தர்கள் வழி வழியாகத்தோன்றி, பண்டைய பாண்டிய நாட்டை ஆண்டு வந்தனர்.  
இவர்களுக்குப் பின்னர் ‘கீர்த்திபூடண பாண்டியன்‘ மன்னன் ஆட்சி செய்துவரும் நாளில், மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது.   கடல்கள் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலெழுந்து, உருத்துச் சீறி வெகுண்டு ஆரவாரித்து, காவலாக விளங்கிய கரையைக் கடந்து தமிழுகத்தை அழித்தன.  இந்தப் பிரளயத்தில்  எட்டு மலைகளும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள மலையும்  (சக்கரவாளமலை = இயமமலை) நிலைபெயர்ந்தன.  இப்பிரளயம் அடங்கும் முன்னரே மற்றொரு பிரளயமும் தோன்றி அளித்தது.  அந்தப்பெரிய கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவில்லாத எத்துணைப் பெரிய நிலத்திட்டுகளும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கி நிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்தமுடிகளையுடைய மலைவகைகளும், ஒழிந்தன.
ஆனாலும், நீண்ட விழிகளையுடைய மீனாட்சியம்மையின் திருக்கோயிலும், வானினின்றும் இறங்கிய இந்திரவிமானமும், பொற்றாமரை வாவியும், இறைவன் திருவிளையாட்டினால் வந்து தங்கிய மணம்வீசும் சோலைகளையுடைய இடபமலையும் (அழகர்கோயில்மலையும்), யானைமலையும், நாகமலையும், பசுவின் உருத்திரிந்த பசுமலையும்,  பன்றிமலையும் இந்தப் பிரளயத்தில் உண்டான கடல்நீரினால் அடித்துச் செல்லப்படாமல் அழியாமல் இருந்தன.
உயர்ந்த  அலைகளையுடைய கடலானது, கொதித்து எழுந்து மரங்கள் முறியக்  கல்லி எடுத்து, அதிர்ந்து ஆரவாரித்து எல்லாத் திசைகளிலும் வீசியும், கடற்கரைகளை எல்லாம் அகழ்ந்துத் தோண்டிப் பொடி செய்து திசைப்புறங்களிற் செல்லுமாறு வீசியும்,  மலைகளை யெல்லாம் மாட வரிசைகளைப் பெயர்த்து வீசியும், ஊழிக்காலத்தில் தோன்றி பிரளயத்தில் உதித்து எழுந்து வந்தன“ என்கிறது திருவிளையாடற் புராணம்.
     
திருவிளையாடற் புராணம் பாடல்கள் :

“எழில்புனை அதுலகீர்த்தி என இருபத்திரண்டு
வழிவழி மைந்தராகி வையம் காத்த வேந்தர்
பழிதவிர் அதுலகீர்த்தி பாண்டியன் தன்பால் இன்பம்
பொழிதர உதித்த கீர்த்திபூடணன் புரக்குநாளில்

கருங்கடல் ஏழும் காவற்கரை கடந்து ஆர்த்துப் பொங்கி
ஒருங்கு எழுந்து உருத்துச் சீறியும் உம்பரோடு இம்பர் எட்டுப்
பொருங்கல் கரியும், எட்டுப் பொன் நெடுங்கிரியும் நேமிப்
பெரும் கடிவரையும் பேரப் பிரளயம் கோத்தவன்றே.

அப் பெரும் சலதி வெள்ளத்தில் அழுந்தின அழிவிலாத
எப்பெரும் பொழிலும் ஏழுதீபமும் இவற்றுள் அடங்கி
நிற்பன செல்வவான திணைகளும் நீண்ட சென்னிப்
பர்ப்பத வகையும் ஈறுபட்டனவாக அங்கண்.


“எழில்புனையதுலகீர்த்தியெனவிருபத்திரண்டு
வழிவழிமைந்தராகிவையங்காத்தவேந்தர்
பழிதவிரதுலகீர்த்திபாண்டியன்றன்பாலின்பம்
பொழிதரவுதித்தகீர்த்திபூடணன்புரக்குநாளில்
கருங்கடலேழுங்காவற்கரைகடந்தார்த்துப்பொங்கி
ஒருங்கெழுந்துருத்துச்சீறியும்பரோடிம்பரெட்டுப்
பொருங்கட்கரியுமெட்டுப்பொன்னெடுங்கிரியுநேமிப்
பெருங்கடிவரையும்பேரப்பிரளயங்கோத்தவன்றே.
அப்பெருஞ்சலதிவெள்ளத்தழுந்தினவழிவிலாத
எப்பெரும்பொழிலுமேழுதீபமுமிவற்றுட்டங்கி
நிற்பனசெல்வவானதிணைகளுநீண்டசென்னிப்
பர்ப்பதவகையுமீறுபட்டனவாகவங்கண்.
தேனிழிகுதலைத்தீஞ்சொற்சேனெடுங்கண்ணிகோயில்
வானிழிவிமானம்பொற்றாமரைவிளையாட்டின்வந்த
கானிழியிடபக்குன்றங்கரிவரைநாகக்குன்றம்
ஆனிழிவரைவராகவரைமுதலழிவிலாத.
வெள்ளநீர்வறப்பவாதிவேதியன்ஞாலமுன்போல்
உள்ளவாறுதிப்பநல்கியும்பரோடிம்பரேனைப்
புள்ளொடுவிலங்குநல்கிக்கதிருடற்புத்தேண்மூவர்
தள்ளருமரபின்முன்போற்றமிழ்வேந்தர்தமையுந்தந்தான்..



( குறிப்பு - படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.  இப்படங்களைப் பதிவு செய்தோருக்கு நன்றி)


கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
kalairajan26@gmail.com,
9443501912
நாள் - சித்திரை 28 (10.05.2017) வியாழக் கிழமை

ஞாயிறு, 6 மே, 2018

பாரத தேசத்தை ஆண்ட பாண்டியர், இந்தியாவை ஆண்ட தமிழர்

பாரத தேசத்தை ஆண்ட பாண்டியர்

இந்தியாவை ஆண்ட தமிழர்

இந்தியாவைத் பண்டைத் தமிழர் ஆண்டுள்ளனர்.   ஏதோ இங்கிலாந்திலிருந்து வெள்ளைக்காரன் வந்த பின்னர்தான் இந்தியா என்ற நாடு உருவானது என்றும், அதற்கு முன் இந்தியா என்றொரு நாடு  இல்லையென்றும் நண்பர் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால் பண்டைய பாரதத்தை ஒன்றாகத் தமிழர் ஆண்டுள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.




1)
மதுரை குலசேகர பாண்டியமன்னனின் மகன்  மலயத்துவசன்.
மலயத்துவசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் செய்த புத்திரகாமேட்டி யாகத்தில் உமாதேவியார் மூன்று தனங்களையுடைய பெண்குழந்தையாகத் தோன்றினாள். அவளுக்குத் "தடாதகை" என்று பெயரிட்டனர். இவள் கன்னியான காலத்தில் இவளது தந்தை இறந்தான். இவளே மதுரையை ஆண்டாள். கன்னி ஆண்டதால் பாண்டியநாடு "கன்னிநாடு" என்ற பெயர் பெற்றது. தடாதகை பரதகண்டம் முழுவதையும் வென்று "பாரத மாதா" ஆனாள் என்கிறது திருவிளையாடற் புராணம்.



2)
“தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஓன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவ துண்டு பக லாற்றி
இனிது ருண்ட சுடர் நேமி
முழு தாண்டோர் வழி காவல்.” ( புறநானூறு – 17 )
எனக் குறுங்கோழியூர்கிழாரும்.

3)
“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்.

உருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமனன் போல ஒருதிறம்
பற்றலி லியரோ நிற்றிறம் சிறக்க!” ( புறநானூறு – 6)
எனக் காரிகிழாரும்,

4)
மதுரைக்காஞ்சியில்,
“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப” ( வரி 70-72)
என மாங்குடி மருதனாரும் பாடியுள்ளனர்.


இந்தியர் என்றால், இந்துக்கள். இந்து என்றால் சந்திரன், பாண்டியர் சந்திரகுலத்தவர்.  இந்தியர்கள் என்றால் பாண்டியர் என்று பொருள்.

பண்டைத் தமிழர்போன்று, பாரதம் முழுமையையும் தமிழர் ஆள வேண்டும்.
----------------------------------
குடகடலை (அரபிக்கடலை) ஏன் தொன்றுமுதிர் பௌவம் என்கிறார் புலவர்?

கங்கை பூமியில் இறங்குவதற்கு முன்பே இந்தியாவின் மேற்கே உள்ள அரபிக்கடலானது ஓர் நன்னீர்க்கடலாக இருந்திருக்க வேண்டும். கங்கை பூமியில் இறங்கியதால் அதிகம் பாதிப்படையாத ஓர் கடற்பகுதியாக இந்த முதிர்பௌவம் இன்றும் இருக்க வேண்டும், என்பது கங்காபுராணத்தின் அடிப்படையில் எனது யூகம்.
இந்தக் கடலின் உப்பின் அளவானது மற்றைய கடல்களின் உப்பின் அளவைவிடக் குறைவாக இருந்தால் எனது யூகம் சரியானதாக இருக்கலாம்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்